
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வீரராகவாச்சார்யர் என்பவர் வசித்து வந்தர். ஸ்ரீமந் நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டவர் இவர். காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவரதராஜ பெருமாளைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்போது, சென்னை மாகாணம் முதலானவை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகாரத்துக்குள் இருந்தன. ஆங்கிலேயர்களிடம் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் வீரராகவாச்சார்யர். என்றாலும்கூட, தினமும் காலடிப்பேட்டியில் இருந்து காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஸ்ரீவரதரைத் தரிசித்தால்தான் அவருக்கு அன்றையை பொழுது அருமையாக விடியும்!
அவரின் திறமையை அறிந்து வியந்து பாராட்டிய ஆங்கிலேயரான கெல்லட் பிரபு, வீரராகவாச்சார்யரின் பக்தியைக் கண்டு சிலிர்த்துப் போனார். அவரது பக்தியை மெச்சியதோடு, காலடிப்பேட்டையிலேயே ஸ்ரீவரதருக்குக் கோயில் எழுப்புவதற்கு இலவசமாக நிலத்தையும் வழங்கி உதவினார். அதன்படி எழுப்பப்பட்டதே, ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம்.

இங்கு மூலவரின் திருநாமம்- ஸ்ரீகல்யாண வரதராஜபெருமாள். உத்ஸவர்- ஸ்ரீபவளவண்ணப் பெருமாள். ஸ்ரீதேவி- பூதேவியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார். தாயார்- ஸ்ரீபெருந்தேவித் தாயார். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராமர், ஸ்ரீஅனுமன் ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் உள்ளன. இந்தத் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், சகல வரமும் தந்தருள்கிறார்; மிகுந்த வரப்பிரசாதி!
புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, வெள்ளை நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொண்டால், கடன் தொல்லை ஒழியும்; மனதில் அமைதி நிலவும்; வீட்டில் சுபிட்சம் தங்கும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
காலடிப்பேட்டை ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் வணங்குங்கள்; உங்கள் கவலையெல்லாம் பறந்தோடிவிடும்!
- சா.வடிவரசு
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்