Election bannerElection banner
Published:Updated:

துளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் தரிசனம்!

துளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்!
##~##
செ
ன்னை- மேற்கு சைதாப்பேட்டையில், புராதனமான கோயில் எனும் பெருமைக்கு உரியது ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில். விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது.

ஆதியில், இந்தக் கோயிலில் ஸ்ரீசீதாதேவி- லட்சுமணர் சகிதமாக ஸ்ரீராமர் அருள்பாலித்து வந்தார். அனுமன் சந்நிதி மட்டும் இல்லாமல் இருந்தது. கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஅனுமனை வணங்கி வந்தனர் பக்தர்கள். பிறகு, ஆலயத்தில் ஸ்ரீஅனுமனுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டது.

சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதாம். அப்போது ஓரிடத்தில் பள்ளம் தோண்ட... அதில் இருந்து தாயாரின் விக்கிரகத் திருமேனி மற்றும் பெருமாளின் பஞ்சலோக விக்கிரகம் ஆகியவை கிடைத்தன. ஆகவே, அந்த விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள்.  

தேசாய் பிரிவில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (பலிஜா செட்டியார்கள்) திருவேங்கடவன் குடிகொண்டிருக்கும் திருப்பதிக்கும் ஸ்ரீநரசிம்மர் அருளும் சோளிங்கருக்கும் அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவர். எனவே, இங்கே பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு, ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிங்க பெருமாள் எனும் திருநாமத்தைச் சூட்டினர். தாயாரின் திருநாமம்- ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயார்.

துளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்!

ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீஅனுமன், சேனைமுதலி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு என்றாலும், ஆலயத்தின் பரிவார மூர்த்தமான ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கிச் செல்ல, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். கோயிலும், அருகில் உள்ள தாமரை புஷ்கரணி தீர்த்தக் குளமும் கொள்ளை அழகு! ஸ்தல விருட்சம் செண்பக மரம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் திருமேனி முன்னே இருக்க... பின்னே அதே விக்கிரகத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, பிராகார வலம் வந்து வேண்டிக் கொண்டால், நினைத்ததெல்லாம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்!

வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்ஸவ விழா துவங்கி, பத்து நாட்கள் சிறப்புற நடைபெறுகிறது. தினமும் பெருமாள் திருவீதியுலா, சிறப்பு ஆராதனைகள் என அமர்க்களப்படுகிறது ஆலயம். சித்திரை நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு, திருவோணம் நட்சத்திரத்தில் விழா நிறைவுறும். புரட்டாசியில் நவராத்திரி விழாவும் விமரிசையாக நடைபெறும்.

மேலும், ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமத்துடன் திகழும் பெருமாளைத் தரிசனம் செய்தால், திருப்பதி மற்றும் சோளிங்கருக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.

         - சா.வடிவரசு
படங்கள்: ராபின் மார்லர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு