Published:Updated:

நினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் தரிசனம்!

நினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் தரிசனம்!

Published:Updated:
நினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்!
##~##
செ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னை - தாம்பரம் ரயில் மார்க்கத்தில் உள்ளது பழவந்தாங்கல் ரயில் நிலையம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், ஏழூர் அம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்! புராதனமான இந்தக் கோயில், ஒருகாலத்தில் மண்ணில் அப்படியே புதையுண்டு போனதாம்! கடந்த 1974-ஆம் ஆண்டு, நங்கைநல்லூர் எனப்படும் நங்கநல்லூர் பகுதி, மெள்ள மெள்ள உருவாகிக் கொண்டிருந்த தருணத்தில், ஊர்க்காரர்கள் கமிட்டி ஒன்றை அமைத்து, ஸ்ரீகிருஷ்ணருக்கு கோயில் எழுப்பலாம் என முடிவு செய்தனர். ஸ்ரீகிருஷ்ண பக்த ஜன சபா எனும் பெயரில் கமிட்டி உருவானது.

அதையட்டி பிரசன்னம் பார்த்தபோது, 'இங்கே புதைந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்யுங்கள். அதிலேயே ஸ்ரீகிருஷ்ணருக்கும் சந்நிதி அமைத்து வழிபடுங்கள். இந்த ஊரும் மக்களும் சிறப்புறத் திகழ்வது உறுதி’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, தொல்லியல் துறை வல்லுநர்களின் உதவியுடன் அகழ்ந்து பார்த்தபோது, சுமார் ஐந்தரை அடி உயரத்தில், சங்கு - சக்கரதாரி யாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் விக்கிரகத் திருமேனி கண்டெடுக்கப் பட்டது. சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் எனக் கல்வெட்டுகளின் மூலம் தெரியவந்தது.

பிறகு, மிகப் பிரமாண்டமான முறையில் அந்த இடத்தில் புதிதாகக் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட கொடிமரம், அரசமரத்தடியில் நாகர் விக்கிரகம், அருகில் கோ சாலை என ரம்மியமாக அமைந்துள்ளது திருக்கோயில். இங்கு சிறிய பீடம் ஒன்றில் அமைந்துள்ள பிரார்த்தனைச் சக்கரம் வெகு பிரசித்தம்.

நினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்!

பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரம் என்று இதைப் போற்றுகின்றனர், பக்தர்கள்! இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தைத் தொட்டு வணங்கினால், தீராத நோய் மற்றும் பிரச்னைகள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவேதாந்த தேசிகர் மற்றும் பன்னிரு ஆழ்வார் களும் தனிச்சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தைக் காண முடிகிறது. தேர் வடிவத்தில் அமைந்துள்ள சந்நிதியில், பதினாறு திருக்கரங்களும் பதினாறு ஆயுதங்களுமாகத் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு, சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்கிறார்! ஸ்ரீசுதர்சனர் எனப்படும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்குப் பின்னே எப்போதும் போலவே ஸ்ரீநரசிம்மரின் அற்புதத் தரிசனம்! ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருவது, அரிதான ஒன்று எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.திருக்கரங்களில் நான்கு வேதங்கள் மற்றும் நான்கு சக்கரங்களுடன் காட்சி தருவதாக ஐதீகம்! அஷ்ட லக்ஷ்மியரும் இவர் சந்நிதியில் உறைந்து அருள்பாலிப்பதாகச் சொல்வர்.

ஸ்ரீநரசிம்மர் மற்றும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கி பிராகாரமாகச் சுற்றி வந்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லக்ஷ்மிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். புதன்கிழமை வலம் வந்தால் பதினாறு வகைச் செல்வம் கிடைக்கும்; சனிக்கிழமையில் வலம் வந்தால், கிரக தோஷம் நீங்கும்!

இங்கே இரண்டு ஆஞ்சநேயர்களும் ஒருசேர தரிசனம் தருகின்றனர். வெண்ணெய்க் காப்பில் தரிசனம் தரும் அனுமனை, அமெரிக்க ஆஞ்சநேயர் என்கின்றனர். அமெரிக்காவில் வேலை கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், இவரை வணங்கித் தொழுதால், விரைவில் நினைத்தது நிறை வேறுமாம். அதனால் இந்தப் பெயர்!  

மூலவர் ஸ்ரீநவநீதகிருஷ்ணரும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரும் கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர்! தை மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையில், ஸ்ரீலக்ஷ்மி மற்றும் ஸ்ரீநரசிம்மர் திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தருவர். அதைத் தரிசித்து, மாங்கல்யச் சரடு பிரசாதத்தை வாங்கிக் கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

-  சா.வடிவரசு
படங்கள்: ராபின் மார்லர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism