Election bannerElection banner
Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தேவர்களும் அசுரர்களும் அங்கே மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் சிந்தை எல்லாம் ஒரே ஒரு  பொருள் மீதே குவிந்திருந்தது. ஆம்... மூப்பு, இறப்பு இல்லாமல் என்றென்றும் நிலைபெற்று வாழ உதவும் அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.

மேரு மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும், திருமாலாம் ஸ்ரீகூர்மத்தை (ஆமையை) அச்சாகவும் அமைத்துக் கடைந்தனர். திடுமென, அவர்கள் எதிர்பாராவிதமாக கடலில் இருந்து ஆலகால விஷம் எழுந்தது. அனைவரும் அஞ்சி ஓடினர்.

##~##
சிவனார் தன் நிழலான ஆலாலசுந்தரனை அழைத்து, அந்த விஷத்தைக் கொண்டு வரச் செய்தார். அவரும் விஷத்தைத் திரட்டிக் கொண்டுவர, சற்றும் தாமதிக்காமல் அதனைத் தமது திருவாயில் போட்டு உட்கொள்ள முயன்றார் பரமன். அந்த விஷம் அவரது கழுத்துக்குக் கீழே இறங்காமல் இருக்க, தன் கரங்களால் அவரின் கழுத்தை இறுகப் பற்றினாள் பார்வதிதேவி. இதனால் விஷம் சிவனாரின் கழுத்தில் தங்கிப்போனது; அவர் நீலகண்டர் ஆனார். அதேநேரம், தங்களது நோக்கம் நிறைவேற, மறுபடியும் பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும்.

நீண்டநேர முயற்சிக்குப் பிறகு அமுதம் வந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அதை உண்பதற்கு முன், அமுதத்தை ஒரு கடத்தில் (குடத்தில்) அடைத்து, தவசித்தபுரம் எனும் வில்வ வனத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு நீராடச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்தவர்கள், கடத்தை எடுக்க முயன்றனர். ஆனால், அது பாதாளம் வரை வேர்விட்டு ஊடுருவி, சுயம்பு மூர்த்தியாக, சிவலிங்க வடிவில் அங்கேயே நிலைபெற்றது. கடத்தில் உள்ள அமுதமே லிங்க வடிவமாக உருக்கொண்டதால் அந்த மூர்த்தி ஸ்ரீஅமிர்தகடேசர், ஸ்ரீஅமுதகடேசர் என்றெல்லாம் திருநாமங்கள் பெற்றார். அந்தத் தலத்தின் பெயரும் கடவூர் (கடம் இருந்த ஊர்) என்றாயிற்று. மேலும், காலனை (யமனை) கடந்த தலமாதலால் கடவூர் என்று கூறலாம் (ஆனால், தற்காலத்தில் இதைத் திருக்கடையூர் என்கிறார்கள். இது தவறு! கடையூர் என்றால் கடைப்பட்ட, கீழ்மைப்பட்ட ஊர் என்று பொருள்படும்).

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இந்த அமுத லிங்கத்தை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலானோர் பூஜித்து வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், ''தேவர்களே! ஞான அமுதத்தினை இங்குள்ள ஞானவாவியில் (அமிர்த தீர்த்தத்தில்) தந்தருளினோம்; அருந்துங்கள்'' என்று கூறினார். ஆனால், தேவர்கள் அங்கு சென்று தேடிக் காணாது திகைத்து வருந்தினர். மீண்டும் சிவபெருமானிடம் வந்து வேண்டினர். அதற்கான காரணத்தை ஈசன் உணர்ந்தார். ''நீங்கள் அமுதத்தைப் பெற கணபதியிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்; நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்!'' என்று அறிவுறுத்தினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் ஓங்காரத்தொருவனை, கணங் களுக்கு நாயகனை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்.

விநாயகரும் திருக்காட்சி தந்தார். ''எம்மை மறந்ததால் யாம் மறைத்தோம்; எனவே, தந்தையார் சிவபிரான் அருளிய அமுதம் கிடைத்தும் கிடைக்காதவர்கள் ஆயினீர்; கவலையை விடுங்கள். நீங்கள் விரும்பிய அந்த அமுதம் மீண்டும் அமிர்த தீர்த்தத்தில் தோன்றும். அருந்தி மகிழுங்கள்!'' என்று அருள்பாலித்தார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

தேவர்கள் மகிழ்ந்து, ''பெருமானே... தாங்கள் கள்ள விநாயகர் என்ற திருநாமத்துடன் இவ்விடத்திலேயே எழுந்தருளி, அன்பர்கள் வேண்டியதைத் தந்தருள வேண்டும். தாங்கள் அருளிய அமுதத்தை தங்கள் திருமுன் வைத்து அருந்த விரும்பு கிறோம்'' என்று வேண்டினர். பிறகு, ஞானவாவியின் மேல்புறம் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து துதித்துப் போற்றினர். கணபதியின் திருவருளால் அமுதத்தை உண்டு மகிழ்ந்தனர். தேவர்களிடமிருந்து அமுதத்தை மறைத்து வைத்த இந்தப் பிள்ளையார், சோர கணபதி (சோரம் - களவு; திருடுதல்) என்றும், கள்ள வாரணப் பிள்ளையார் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

மார்க்கண்டேயனின் சிவபக்திக்காக எமனைக் கடிந்த தலமான திருக்கடவூரில்தான் மேற்கண்ட திருவிளையாடல் நடைபெற்றது. இந்தத் தலத்தில், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷம். இந்தத் திருக்கோயிலில் நாள்தோறும் சஷ்டியப்தபூர்த்தி (60-வது ஆண்டு நிறைவு மணிவிழா), சதாபிஷேகம் (80-ஆம் ஆண்டு நிறைவு) போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. தினமும் கல்யாணக் காட்சிதான்!

ஸ்ரீஅமிர்தகடேசர் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வெளி மண்டபத்தில், இடதுபுறம் கிழக்கு நோக்கி ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் காட்சி அளிக்கிறார். அபிராமி பட்டரின் பக்தியை உலகறியச் செய்ய, அமா வாசையன்று பௌர்ணமி நிலவைக் காட்டி அற்புதம் நிகழ்த்தி, அபிராமி அந்தாதி பெற வைத்த ஸ்ரீஅபிராமியம்மையின் சந்நிதி தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில், ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் திருவுருவம் நமக்கு மரணத்திலிருந்து காப்பளிக்கிறது. திருக்கடவூர் அமிர்தகடேசப் பெருமானைவிட சிறந்த ஆயுள் இன்ஷூரன்ஸை வேறு எவரால் நமக்கு அளிக்க முடியும்! பாலிசி தொகை பக்திதான்; பணம் கட்ட வேண்டியதில்லை! அது மட்டுமா? நல்லனவெல்லாம் அள்ளித் தரும் அபிராமியின் கடைக்கண் நோக்கும் நமக்குக் கிடைக்குமே!

இந்த திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையாரை வழிபட, அமுதம் அருந்தாமலேயே ஆயுள் நீடிக்கும். இந்த ரகசியத்தை அறிந்த நம் மக்கள் ஆண்டு முழுவதும் திருக்கடவூருக்குத் திரளாகச் சென்றவண்ணம் இருக்கிறார்கள்.

- பிள்ளையார் வருவார்...
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு