Election bannerElection banner
Published:Updated:

‘பேச்சியம்மா.. மனசு வைச்சா..!’

ஆடி மாதம் அருள் தரிசனம்...

‘பேச்சியம்மா.. மனசு வைச்சா..!’

'படித்துறை பேச்சியம்மனை வணங்கினால், மனதில் உள்ள பாரமெல்லாம் வடிந்துவிடும்’ என்கின்றனர் பக்தர்கள். அத்தனை சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, வைகை ஆற்றுக்கு அருகில் அமர்ந்தபடி அருளாட்சி நடத்துகிறாள், பேச்சியம்மன்.

மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பேச்சியம்மன் படித்துறை.

'இந்த உலகையே கட்டிக் காக்கும் வீரம் கொண்டவன் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்’ என ஸ்ரீபிரம்மாவை நோக்கிக் கடும் தவம் இருந்தான் வல்லாளன் எனும் அரசன். அவனது தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீபிரம்மா, அப்படியே ஆகட்டும் என அவனுக்கு வரம் தந்தருளினார். அதன்படி, வல்லாளனின் மனைவி கருவுற்றாள். இந்த நிலையில், தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி, 'வல்லாளனின் மகன் சூரனாகப் பிறப்பான். பின்னாளில், நம் இந்திரலோகத்தையும் சிறைப்பிடிப்பான்’ எனப் பயந்தார்கள். ஸ்ரீபிரம்மா அளித்த வரம் குறித்து, அவரின் மனைவி ஸ்ரீசரஸ்வதிதேவியிடம் சொல்லி முறையிடுவது எனத் தீர்மானித்தனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கடும் கோபமான ஸ்ரீசரஸ்வதிதேவி, வல்லாளனை மிதித்துக் கொன்றாள். அப்போது அவளது திருமேனியும் முகமும் மாறிப்போயிருந்தது. வல்லாளனின் மனைவியை மடியில் கிடத்தி, அவளையும் கொன்றாள். அந்தத் திருவுருவத்தில், ஸ்ரீபேச்சியம்மன் எனும் திருநாமத்துடன் இன்றைக்கும் கோயில் கொண்டிருக்கிறாள், மதுரையம்பதியில்!

ஆற்றுப் படுகையில், ஆலமரத் தடியில்... சுயம்புவாகத் தோன்றிய அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடத் துவங்கி, சுமார் 600 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் பக்தர்கள். சக்தி வாய்ந்த ஸ்ரீபேச்சியம்மனை கண்ணாரத் தரிசித்து வழிபட்டால், சகல பிணிகளும் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! வாய் பேச இயலாதவர்கள், பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால்... விரைவில் பேச்சுத் திறன் கூடும்; பேச்சுக் குறைபாடுகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

‘பேச்சியம்மா.. மனசு வைச்சா..!’
‘பேச்சியம்மா.. மனசு வைச்சா..!’

இங்கு ஸ்ரீசங்கு விநாயகர், ஸ்ரீமுருகக்கடவுள், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகம்மாள், ஸ்ரீஅய்யனார் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இந்தத் தலத்தின் ஸ்ரீநாகம்மாள் சந்நிதிக்கு வந்து, பாலபிஷேகம் செய்து வழிபட்டால், விரைவில் நாக தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!

வெள்ளிக்கிழமை அன்று ராகுகால வேளையில் சிறப்பு பூஜைகள் முடிந்து, 12.05 மணிக்கு ஆயிரம் லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அன்று மாலை, குங்கும அலங்காரத்தில் ஜொலிப்பாள் பேச்சியம்மன். திருமணத் தடையால் கலங்குவோர், கல்வியில் ஞானம் பெற விரும்புவோர், பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லாதோர் வெள்ளிக்கிழமையில் இங்கு வந்து, பால் அபிஷேகம் செய்து வழிபட, விரைவில்

நல்லது நடக்கும். ஆடி மாதம் வந்துவிட்டால், தினமும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் என ஆலயம் அமர்க்களப்படும். வெள்ளிக்கிழமை காலை 5 மணியில் இருந்து துவங்குகிற அம்மனின் சிறப்பு அலங்காரம் மற்றும் அம்மனுக்குச் செய்யப்படும் பாலபிஷேகம் என விசேஷ தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது! அருளையும் வரத்தையும் அள்ளித் தரும் ஸ்ரீபேச்சியம்மனைத் தொழுவோம்; வாழ்வில் எல்லாப் பேரின்பங்களையும் பெறுவோம்! -

- ரா.அண்ணாமலை
படங்கள்: பா.காளிமுத்து

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு