Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##
தி
ருச்சியில் இருந்து திருப்பட்டூருக்குச் செல்லும்போது, சென்னை சாலையில் சிறுகனூர் என்றொரு ஊர் வரும். இந்த ஊரின் இடது பக்கத்தில், அரசு பள்ளிக்கூடம் ஒன்று அமைந்திருக்கும். இந்தப் பள்ளிக்கு அருகில், 'திருப்பட்டூர் 5 கி.மீ.’ என்கிற அறிவிப்புப் பலகையும், அதையட்டிய தார்ச்சாலையும் இருக்கும்.

இந்தச் சாலையின் வழியே சென்று, திருப்பட்டூரை அடைந்ததும், நம் கண்ணில் முதலில் தென்படும் ஆலயம் எது தெரியுமா? அய்யனார் கோயில்தான்!

அய்யனார் கோயில் என்பதை, ஊரின் எல்லையில் அல்லது ஒதுக்குப்புறத்தில் அல்லது வயல்வெளிகளுக்கு நடுவில் பார்த்திருப்பீர்கள். அதுவும் எப்படி? வெட்ட வெளியில், வீச்சரிவாளும் முறுக்கு மீசையுமாக, மரத்தடியில் அமர்ந்திருக்கிற அய்யனாரையே தரிசித்திருப்போம். ஆனால், இந்த அய்யனார் கோயில் மிகப் பிரமாண்டமானது! முழுக்க முழுக்கக் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட, மிகப் பெரிய மதில் கொண்ட அழகான கோயில் இது. சாத்தனார், மாசாத்தனார், அய்யனார், சாஸ்தா என்றெல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் அய்யனாரின் திருநாமம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. தமிழகத்தில், குறிப்பாக சோழர் காலத்தில் சாத்தனார் வழிபாடு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. யுத்தத்துக்குச் செல்வதற்கு முன்பு, விதைப்பதற்கு முன்னதாக, புதிய சட்டங்களை மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் அமைச்சர் பெருமக்களும் ஆன்றோர்களும் இங்கு வந்து, பொங்கல் படையலிட்டு வழிபட்டுச் சென்றிருப்பதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. முக்கியமாக, புலவர் பெருமக்கள் சாத்தனாரை மனமுருக வழிபட்டு வந்திருக்கிறார்கள். அவரின் சக்தியிலும் பேரருளிலும் மெய்ம்மறந்து போயிருக்கிறார்கள். தங்களின் பெயருடன் சாத்தனார் பெயரையும் சேர்த்துச் சொல்வதைப் பெருமையாகக் கருதினார்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் திருப்பட்டூர் இத்தனை சாந்நித்தியங்களுடன் திகழ்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர் சேரமான் பெருமாள் நாயனார். கேரள மாநிலம் கொடுங்களூருக்கு அருகில் உள்ள தலம் திருஅஞ்சைக்குளம் (தற்போது இது திருவஞ்சிக் குளம் என்று மாறிப்போயிருக்கிறது). இந்தத் தலத்தில் வாழ்ந்த சேரமான் நாயனார், ஆரூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரைத் தன் குருவாகக் கொண்டு வாழ்ந்தார்.

ஒருமுறை, சுந்தரரை திருக்கயிலாயத்துக்கு அழைத்து வரும்படி இந்திராதி தேவர்களுக்கு ஆணையிட்டார் சிவபெருமான். அதன்படி வெள்ளை யானையில் அமர்த்திக்கொண்டு, சுந்தரரை அழைத்துச் சென்றனர் தேவர்களும் சிவகணங்களும்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இதை அறிந்த சேரமான் நாயனார், தன் குதிரையில் ஏறிப் பின்தொடர்ந்தார். அப்போது குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓத... குதிரை வேகம் எடுத்தது. திருக்கயிலாயத்தை அடைந்தது. அங்கே... இந்திராதி தேவர்களும் சிவ கணங்களும் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீற்றிருக்க... சிவனாரின் ஒப்புதலுடன் திருக்கயிலாய ஞானஉலா

எனும் தன் படைப்பைப் பாடினார். அவர் பாடப் பாட, அந்தப் பாடலை ஓலைச் சுவடியில் எழுதிப் பத்திரப்படுத்திக் கொண்டவர் யார் தெரியுமா? அவர்தான் மாசாத்தனார். 'இந்தப் பாடல் பூலோகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியட்டும்.

திருப்பிடவூர் சென்று, இதனை வெளியிடுவாயாக!’ என அருளினார் சிவனார். அதன்படி, மாசாத்தனார் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூரில் எழுந்தருளினார். இன்றும் பிரமாண்டமான ஆலயத்தில், கையில் 'திருக்கயிலாய ஞான உலா’ சுவடியை ஏந்தியபடி ஸ்ரீபூரணை- ஸ்ரீபுஷ்கலையுடன் அருள்கிறார், சாத்தனார் என்கிற சாஸ்தா என்கிற அய்யனார்.

இந்தக் கோயில் குறித்து 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்து, அதையடுத்து அந்தக் கோயிலின் திருப்பணிகளுக்கு வாசகர்களால் ஏராளமான நிதியுதவி அளிக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறியது. பொலிவுடன் திகழும் ஸ்ரீஅய்யனார் கோயிலில், கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான விழா... 'திருக் கயிலாய ஞான உலா’ அரங்கேறிய திருவிழா!

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரருக்கும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் குருபூஜைத் திருவிழா. பல வருடங்களாக வழிபாடுகள் பெரிதாக நடைபெறாத இந்தக் கோயிலில், கடந்த சில வருடங்களாக குரு பூஜை விழாவும் திருக் கயிலாய ஞான உலா விழாவும் ஒன்று சேர்ந்து விமரிசையாக நடந்து வருகின்றது. ''கேரளாவுல உள்ள திருவஞ்சிக்குளத்துலதான் சேரமான் பெருமாளுக்கு குருபூஜை சிறப்பா நடக்கும். கோயம்புத்தூர்லேருந்து, நிறைய்ய அன்பர்கள் அந்தத் தலத்துக்குப் போய், விழாவுல கலந்துக்கிட்டு வருவாங்க. சேரமான்பெருமாள் நாயனாருக்கும் சுந்தரருக்கும் திருக்கயிலாய காட்சி கிடைச்ச அந்த நாளையும், சேரமான் நாயனார் 'திருக்கயிலாய ஞான உலா’வை தந்தருளிய நாளையும் தமிழகத்துல கொண்டாடினா நல்லாருக்குமேனு தோணுச்சு.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அப்புறம்தான், திருப்பட்டூர்ல மாசாத்தனாருக்கு பிரமாண்டமா கோயில் இருக்கறது தெரிஞ்சுது.

முதல்கட்டமா, சிவனடியார்கள் கொஞ்சம்பேர்சேர்ந்து, ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனாருக்கும் ஸ்ரீசேரமான் நாயனாருக் கும் விக்கிரகத் திருமேனியைச் செஞ்சோம். ஆடி- சுவாதி திருநாளில் இங்கு வந்து ரெண்டு நாயன்மார்களுக்கும் அபிஷேகங்கள் செஞ்சு, திருவீதியுலா வந்து, மாசாத்தனா ருக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம்லாம் செஞ்சோம். இதை அப்படியே வருஷம் தவறாம செய்யறதுன்னு முடிவு பண்ணினோம்'' என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த அன்பர், கோமதிநாயகம்.

''அதையடுத்து, இந்த விழாவையும் பூஜையையும் தெரிஞ்சுக்கிட்ட சிவனடியார்கள் பலரும் ஒண்ணாச் சேர ஆரம்பிச்சாங்க. வெள்ளை யானை, வெள்ளைக் குதிரைன்னு வாகனங்கள் எல்லாம் அடுத்த வருஷமே தயார் செஞ்சோம். இப்ப... கொஞ்சம் கொஞ்சமா, அய்யனார் கோயில்ல நடக்கற இந்த குருபூஜை விழாவும் பக்தர்களுக்குத் தெரிய ஆரம்பிச்சிருக்கு. குருபூஜையில கலந்துக்கிட்டு, சிவ நாமத்தைச் சொல்லச் சொல்ல... மனசே நிறைஞ்சு போச்சு எங்களுக்கு!'' என நெக்குருகிச் சொல்கிறார் அவர்.

ஆக, திருப்பட்டூர் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில், ஸ்ரீவியாக்ரபாதர் எனும் முனிவர், திருச்சமாதியாக இருந்து அருள்கிறார். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், ஸ்ரீபதஞ்சலி முனிவரின் திருச் சமாதி; கூடவே ஸ்ரீதட்சிணாமூர்த்தி, நம் தலையெழுத்தையே மாற்றி அருளும் ஸ்ரீபிரம்மாவும் கோயில் கொண்டிருக்க... மாசாத்தனார் எனப்படும் ஸ்ரீஅய்யனார் கோயிலில், சுந்தரருக்கும் சேரமான் நாயனாருக்கும் விமரிசையாக நடை பெறுகிறது, குருபூஜைத் திருவிழா!

இந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி (ஆடி 11-ஆம் தேதி), ஆடி சுவாதி நட்சத்திர நாள். இந்தநாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்! குருவருள் இருந்தால்... திருவருள் கைகூடும்!

- பரவசம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு