மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

இறை மூர்த்தங்களை பாலாலயம் செய்த பிறகு எத்தனை நாட்களுக்குள் அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்த்த வேண்டும். திருப்பணிகள் முழுமை அடையாத சூழலில், கும்பாபிஷேகம் தள்ளிப்போனால் குற்றமாகுமா?

- கே. ராமமூர்த்தி, மதுரை-2

திருப்பணியின் தரத்தை ஒட்டி நீண்ட நாட்கள் காத்து இருக்கலாம். மொத்த கோயிலையே புதுப்பிக்க நேர்ந்தால் பல நாட்கள் தேவைப்படுவது பொருந்தும்.

கருவறை தொடர்பான திருப்பணியில் பாலாலயம் கட்டாயம் ஆகும். ஒரு மண்டல காலம் பாலாலயத்தில் இறையுருவத்தை குடி இருத்தலாம். திருப்பணியில் இறங்குபவருக்கு, ஏறக்குறைய அந்தப் பணி எப்போது நிறைவுறும் என்பது தெரிந்திருக்க வேண்டும். வீட்டைப் புதுப்பிக்கும் நாம் ஓர் இடைவெளியை நிர்ணயிப்பது உண்டு. துரதிர்ஷ்டவசமாக நாள் நீண்டுபோனால் தவறு இல்லை. சண்டை-சச்சரவு, செயற்கையான தாமதம், அசிரத்தை, அலட்சியம் ஆகிய காரணங்களால் நாட்கள் நீண்டால் குற்றம் உண்டு.  இறைவனின் சாந்நித்தியமே கேள்விக்குறி ஆகிவிடும். விழாக்களும், காலாகாலம் நடக்கும் உத்ஸசவங்களும் தொடர்ந்து பாலாலயத்தை வைத்து செயல்படுவது பொருந்தாது. வேலையில் அமர்ந்து ஓரிரு வருடங்களில் எல்லாம் நிரந்தர ஊழியராகிவிட நாம் விரும்புவோம். தாமதமானால் நீதிமன்றம் உதவும். ஆக, எதற்கும் ஒரு வரையறை உண்டு.

உலக நன்மைக்காக ஏற்பட்ட கோயில்களை அலட்சியப்படுத்தாமல் சுறுசுறுப்போடு இயங்கி, விரைவில் கும்பாபிஷேகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுது சா£ந்நித்தியம் மேலோங்கி எல்லோரும் பயன்பெறுவர். சடுதியில் செயல்பட வேண்டிய ஒன்று கும்பாபிஷேகம்.

ஸ்மிருதியில் இடம்பெற்ற மகா புண்ணிய ஸ்தலங்களான காசி, கயா, திரிவேணி சங்கமம், பத்ரிநாத், கேதார்நாத், காஞ்சி, ஸ்ரீரங்கம் முதலான தலங்கள் போற்றப்படுவதில் வியப்பில்லை. ஆனால், புதிது புதிதாக பல நவீன கொயில்களையும் செவிவழிப் புராதனப் பெருமைகளுடன் இணைத்து விவரிக்கிறார்களே... இது சரிதானா?

- கோபால கிருஷ்ணன், சென்னை-2

##~##
கோயிலில் உறைந்திருக்கும் இறைவனிடம் பக்தி ஏற்படுவதற்காக, அவரது சிறப்பை சேர்த்துச் சொல்வதில் தவறில்லை. ஆனால் இல்லாத சிறப்பையும், இட்டுக்கட்டின கதைகளையும், கோயில் சம்பந்தப்பட்ட இடத்தின் அருமைபெருமைகளையும் அளவு கடந்து புகழ்ந்து பக்தர்களை ஈர்க்க முயற்சிப்பது எல்லை மீறிய செயல். இந்த முயற்சியானது அதிக காலம் நீடிக்காது; பக்தர்களின் வேண்டுகோள் நிறைவேறாவிட்டால் பெருமைகள் சரிந்துவிடும். ஆன்மிகத்தில் வியாபார நோக்கமானது விரும்பிய பலனை அளிக்காது.

புராணங்களும் இதிகாசங்களும் சிறப்பை பெரிதுபடுத்திச் சொல்லும். ஆனாலும் தற்போது தென்படும் 'புகழ் பாடுதல்’ போன்று வரம்பு மீறிப் போகாது. 'இவர் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர், மடாதிபதிகள் இவரைப் போற்றியிருக்கிறார்கள், முக்காலமும் உணர்ந்தவர், அவர் இங்கு வந்ததே நமது புண்ணிய பலன்...’ இப்படியெல்லாம் ஆஹா ஓஹோவென்று புகழாரம் பாடுவதைத் தவிர்த்து, அடக்கி வாசித்தால் அழகு!

இவர் நித்யம் ஒளபாசனம் பண்ணுபவர், இவர் நித்யம் அக்னி ஹோத்ரம் பண்ணுபவர், இவர் நித்யம் சந்த்யா வந்தனம் பண்ணுபவர், இவர் நித்யம் பசு மாட்டுக்கு அகத்திக் கீரை அளிப்பவர்... இப்படி, கடமைகளையே சிறப்பம்சமாக மாற்றிப் பழக்கப்பட்டுவிட்ட நம் மக்களுக்கு, இல்லாத பெருமைகளைக் கேட்டால் ஈடுபாடு வந்துவிடும். மக்களுக்கு ஆன்மிகம், ஆச்சாரம் போன்றவற்றில் விழிப்பு உணர்ச்சி இல்லாத குறையே, அளவு கடந்த புகழாரத்துக்கு வழிவகுக்கிறது.

இங்கே தில தர்ப்பணம் சிறப்பு, இது ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம், இந்தத் தலம் ஸ்ரீராமர் அமர்ந்த இடம், அந்த இடத்தில் கிருஷ்ணன் விளையாடியிருக்கிறான், அந்த ஊர் சங்கரர் தங்கிய இடம்... இப்படி பல பெருமைகளைக் காட்டி, இடத்தின் சிறப்பைப் பெருக்கும் மனம் இருக்கும் வரையிலும் இதை தடுத்து நிறுத்த இயலாது. இறைவனுக்கு சிறப்பு சேர்க்க மற்றொரு பொருள் இல்லை. இறைவன் முழு சிறப்பைப் பெற்றவர். அவரது தொடர்புதான் மற்ற பொருட்களுக்கு சிறப்பளிக்கும். அப்படியான பொருட்களை விட, சிறப்பளித்த இறையுருவத்தை வணங்க வேண்டும்.

அதேபோன்று அங்கே மற்றொரு தெய்வ வடிவத்தின் சேர்க்கையால் தனிச்சிறப்பு கிடைத்ததாகச் சொல்வதும் தவறு தான். ஆகாயத்தில் உலவும் கிரகங்கள் அங்கு இருந்தால்தான் பெருமை. அதுவே உலக இயக்கத்துக்கும் உறுதுணையாக அமையும். கிரகங்களின் தாக்கம் அத்தனைப் பொருட்களிலும் தென்படுவதால் அதன் சாந்நித்தியமானது எங்கும் பரவியிருக்கும். சூரிய கிரணமோ, சந்திர கிரணமோ படாத இடமே இருக்காது. வீட்டுக்குள்ளும் அதன் தாக்கம் ஊடுருவி வந்துவிடும். மறைத்துக்கொண்டாலும் அதன் வெப்ப-தட்பம் செயல்பட்டுவிடும். ஆக, ஒவ்வொரு இறை உருவத்தோடும் அவர்களை இணைத்து பெருமை அளிக்க வேண்டிய தேவையில்லை.  நம் மனம் இறைவனை, நவக்கிரகங்களை நினைக்கிறது; வழிபடுகிறது. இறைவனை நேரடியாக வழிபட இயலாது. பல வடிவங்களில் இறைவனைப் பார்ப்போம். நவக்கிரகங்களிலும் இறை சாந்நித்தியம் ஊடுருவி உள்ளதால் அவர்களையும் வழிபடுவோம்.

அளவுக்கு மீறிய பெருமையை அள்ளி வீசிப் பழகினால் உண்மையான பெருமையும் மறைந்து விடும். அளவுக்கு மீறிய பெருமையானது மக்களைக் கவர ஓரளவு பயன்பட்டாலும், உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ள இயலாதபடி மக்களை பலவீனமாக்கி விடும். அப்படியரு பலவீனத்தை வைத்து ஆன்மிக வியாபாரத்தைப் பெருக்குவது பண்பல்ல. உலகம், அதன் இயக்கம் அத்தனையும் கடவுளின் சைதன் யத்தில் விளங்குவதால், குறிப்பிட்ட ஒன்றில் மட்டும் தனிப்பெருமையை ஏற்றும் செப்படி வித்தையை விட்டுவிடும் மனம் வேண்டும்.

கேள்வி-பதில்

திருக்கோயில்களில் விபூதி-குங்குமம் முதலான பிரசாதங்களை குருக்கள் தவிர மற்றவர்கள் விநியோகிக்கலாமா?

- கோபாலகிருஷ்ணன், சென்னை-2

விபூதி- குங்குமம் போன்ற பிரசாதங்களை குருக்கள் கையால் வாங்குவது சிறப்பு. ஒரு சந்நிதி ஒரு குருக்கள் இருக்கும் இடத்தில் அது சுலபம். பல சந்நிதிகள் பல குருக்கள் குழாமோடு விளங்கும் இடங்களில், மற்றவர் அளித்தாலும் தவறாகாது. அளிப்பவரைவிட அளிக்கும் பொருளுக்கு இருக்கும் சிறப்பு முக்கியம். ஆற்றி லும் குளத்திலும் மூழ்கி நீராடவேண்டிய நாம் குழாய் தண்ணீரை ஏற்கிறோம். கிணற்றில் இருந்து எடுக்க வேண்டிய தண்ணீரை... தொட்டியில் என்றைக்கோ சேமித்து வைத்திருந்து பிறகு குழாய் மூலம் பெற்று பயன்படுத்துவோம். இங்கெல்லாம் நம் மனம் நெருடலைச் சந்திக்க வில்லை; பிரசாதத்தில் சந்திக்கிறது!

பழநி விபூதியையும், பஞ்சாமிர்தத்தையும் கிடைத்த இடத்தில் இருந்து பெற்றுக்கொள்வோம். நம் மனம் பிரசாதத்தை இறையருளாகப் பார்த்தால், அது எவர் வழி வந்தாலும் குறை இருக்காது. பட்டம் அளிப்பு விழாவில் சில நேரம் நிறையபேர் கலந்துகொள்ளும்போது, முதல் இருவருக்கு மட்டும் தலைமை விருந்தினராக வந்திருப்பவர் பட்டம் அளிப்பார். மற்றவர்களுக்கு அதிகாரியே அளிப்பது உண்டு. அது பட்டத்தின் தரத்தை குறைத்துவிடாது. ஆகையால் பிறர் தந்தாலும் ஏற்கலாம்.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்