Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

பிரீமியம் ஸ்டோரி
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'தண்ணீர்ப் பஞ்சத்தை நிரந்தரமா போக்கணும்னா என்ன செய்யணும்?' - ஒருமுறை நான் இப்படி மாணவர்களிடம் கேட்டபோது, 'ஆகாய கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டியதுதான்!' என்றார் ஒரு மாணவர், நக்கலாக. ஒரு மாணவி எழுந்து, 'இந்தியாவின் நதிகளை இணைக்கலாமே, ஐயா!' என்றாள். 'அதுக்குப் பதிலா ஆகாய கங்கையையே கொண்டு வந்துடலாம்' என்றார் இன்னொரு மாணவர், அலுப்போடு!

மாணவர்களின் உரையாடல் தொடர... 'மதுரையின் பெருமைக்குக் காரணமான நதி என்ன நதி? தமிழ்நாட்டில் கடலில் கலக்காத நதி என்ன நதி?' என்று கேட்டேன். திருதிருவென விழித்தார்கள் மாணவர்கள்.

##~##
'கவலைப்படாதீர்கள். நானே பதில் சொல்கிறேன். இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்... வைகை நதி. மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது உணவுச் சாலையில் இருந்த உணவு முழுவதையும் தனியருத்தனா வந்து உண்டு தீர்த்தானில்லையா குண்டோதரன்... அப்போ அவனுக்கு அளவு கடந்த தண்ணீர் தாகம் ஏற்பட்டுச்சு. தவியாத் தவிச்சான். அவன் தாகத்தைத் தணிக்க, 'பூமியில் கை வை’ன்னார் சிவனார். அதன்படி அவன் கை வைத்த இடத்தில் நீர்ப் பெருக்கெடுத்து, அதுவே வைகை நதி ஆனதாகச் சொல்கிறது திருவிளையாடற்புராணம்'' என்று சொல்லிவிட்டு, ''சரி... இந்த நதி கடலில் சென்று கலக்காததற்கான காரணம் என்னன்னு தெரியுமா?' என்று கேட்டேன்.

'தண்ணீர் இருந்தாதானே கடலில் கலக்கும்? வருசத்துல பாதிநாள் வைகைல தண்ணீரே இருக்காதே!' என்று கவலையோடு சொன்னார் ஒரு மாணவர்.

'அதுவும் நியாயம்தான்! ஆனா, வைகை நதிக்கு இன்னொரு பெயர் 'வேகவதி’. சீறிப்பாய்ந்து வரும் ஆறுகளில் இதுவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, பல நூற்றுக்கணக்கான மைல்கள் பாய்ந்தோடி, கிழக்கே வங்கக்கடலில் சென்று கலக்காமல், ராமநாதபுரம் கண்மாய்களோடு முடிகிறது இந்த நதி. இதற்கான காரணத்தை,

'நாரி இடப்பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரி இடம் புகுதா வையையே! - வாரி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப்பாண்டி நாடு’

என அழகாக விளக்குகிறது ஒரு பாடல் (தனிப்பாடல் திரட்டு).

அதாவது, சிவனாரால் உருவான வைகை நதியானது, 'பார்வதிதேவியை இடப்புறம் கொண்ட நம் பெருமானுக்குக் கடல்தானே நஞ்சு கொடுத்தது’ எனக் கோபித்து, அதனாலேயே கடலில் சென்று கலக்காமல் இருப்பதாகச் சொல்கிறது இந்தப் பாடல்!'' என்று விளக்கினேன்.

'நம்ம ஊர்ல மனுஷங்களுக்கு மட்டுமில்ல, ஓடுற நதிக்குக்கூட மான- ரோசம் இருக்கு!' என்று சொன்ன ஒரு மாணவர், 'இனிமேல் வைகைத் தண்ணியிலதான் குளிப்பேன்; வைகைத் தண்ணியைத்தான் குடிப்பேன். இது சத்தியம்!' என்று வீர சபதமிட்டார். கலகலவென மணி அடித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு