Published:Updated:

அருள் பொங்கும் ஆடி அமாவாசை!

அருள் பொங்கும் ஆடி அமாவாசை!

பிரீமியம் ஸ்டோரி
அருள் பொங்கும் ஆடி அமாவாசை!
அருள் பொங்கும் ஆடி அமாவாசை!
##~##
மாவாசை -முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த, அவர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு உரிய நன்னாள். அதிலும் ஆடி, தை மற்றும் மகாளயபட்ச அமாவாசை தினங்களுக்கு அதீத மகத்துவம் உண்டு. ஏன் அப்படி?

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களில் தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலகட்டத்தை உத்தராயனம் என்றும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள். இந்த அயன காலங்களின் துவக்கத்தில் வரும் அமாவாசை தினங்களையும் விசேஷம் வாய்ந்தவையாகப் போற்றுகின்றன ஞானநூல்கள். அதன்படி தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதமான ஆடியில் வருவது ஆடி அமாவாசை.

அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புனிதமான தீர்த்தங்களில் நீராடுவதும், அதன் கரைகளில் முன்னோருக்கு உரிய கடமைகளை நிறைவேற்றுவதும் சிறப்பு. இதனால் நம் தோஷங்களும் பாவங்களும் விலகும்; புண்ணியம் சேரும் என்கின்றன சாஸ்திர நூல்கள். அவ்வாறு அன்று புனித நீராடும்போது, நம் முன்னோரை மனதில் நினைத்து அவர்களுக்கு முக்தி அளிக்குமாறு இறைவனைப் பிரார்த்தித்தபடி நீராட வேண்டுமாம்.

மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மூன்று கடமைகளை வலியுறுத்து கின்றன ஞானநூல்கள். அவை: தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன்.

அருள் பொங்கும் ஆடி அமாவாசை!
அருள் பொங்கும் ஆடி அமாவாசை!

தினசரி பூஜை-வழிபாடுகள் மற்றும் ஹோமம் போன்றவற்றால் தெய்வக்கடனை நிவர்த்தி செய்கிறோம். முனிவர்கள் மற்றும் ரிஷிகள் அருளிய திவ்விய படைப்புகளை உபாஸித்து அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், மகான்கள், சாதுக்களை ஆராதிப்பதன் மூலமும் ரிஷி கடனை நிவர்த்தி செய்கிறோம். அதேபோன்று, ஆடி அமாவாசை போன்ற பூரணத்துவமான நாளில் முன்னோரை வழிபட்டு, ஆராதித்து, அவர்களுக்கான தர்ப்பணாதிகளைச் செய்வதன் மூலம் பித்ருக் கடனையும் குறைவின்றி நிறைவேற்றலாம். தர்ப்பணம் முடிந்ததும் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வதும் சிறப்பு. இந்த வழிபாடுகளாலும் தானத்தாலும் பித்ருக்கள் மகிழ்வார்கள். அவர்களது பரிபூரண அருளாசியினால் நம்முடைய பித்ரு தோஷங்கள் யாவும் நீங்கும். நமக்கு மட்டுமல்ல, நம்முடைய ஏழேழு தலைமுறை சந்ததிக்கும்... அவர்களுக்கு என்னென்ன புண்ணிய பலன்கள், பேறுகள் கிடைக்க வாய்ப்பு உண்டோ அவை அத்தனையும் தடையின்றி கிடைக்கும்; வாழ்க்கை வளமாக அமையும்.

ஆடி அமாவாசை தினத்தன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் ஆகிய கடற்கரை திருத்தலங்களில் பிதுர் தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். காவிரி முதலான நதிக்கரை தலங்களுக்கும் இந்த விசேஷம் உண்டு.

அப்பருக்கு திருக்கயிலை காட்சி!

திருநாவுக்கரசராகிய அப்பர் பெருமானுக்கு இறைவன் திருக்கயிலாயக் காட்சி காட்டியருளியதும் ஓர் ஆடி அமாவாசை நன்னாளில்தான் என்றும் சொல்லப்படுவது உண்டு.

எண்ணற்ற தலங்களைத் தரிசித்தாகிவிட்டது. பாடல்களால் பரமனைப் பாடிப் பரவி, எட்டுத் திக்கும் ஈசனின் புகழ் பரப்பி பெரும்பணி செய்த அப்பருக்கு திருக்கயிலையைக் காண விருப்பம். சற்றும் தாமதிக்காமல் புறப்பட்டுவிட்டார்.

நீண்ட நெடும்பயணம். வழியில் சோர்வும் தள்ளாமையும் சேர்ந்து கொள்ளத் தடுமாறினார். இனி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலை. கைகளைத் தரையில் ஊன்றி நகர்ந்தார். ஒரு கட்டத்தில் கைகளும் வலுவிழந்தன. 'இறைவா! இதென்ன சோதனை? கயிலையைக் காணத்தானே இத்தனை பிரயத்தனமும்! எம்மை நீவிர் சோதிக்கலாமா? அருள் செய்யும்... நமசிவாயனே துணை செய்யும்!’ என்று பிரார்த்தித்தபடி, தவழ்ந்தும் உருண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அருள் பொங்கும் ஆடி அமாவாசை!

ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்த திருநாவுக்கரசர், ஓரிடத்தில் மயங்கி விழுந்தார். அதற்கு மேலும் நாவுக்கரசரைச் சோதிக்க விரும்பவில்லை ஈசன். 'நாவுக்கரசரே! அருகில் உள்ள பொய்கையில் மூழ்கி எழுந்தால், உமது விருப்பம் நிறைவேறும்!’ என்றோர் அசரீரி ஒலிக்க... துள்ளி எழுந்தார் நாவுக்கரசர். ஓடோடிச் சென்று பொய்கையில் இறங்கினார். நீருக்குள் மூழ்கி எழுந்தவர், தான் திருவையாறு தலத்தின் திருக்குளத்தில் இருப்பதை அறிந்தார்.  உடனே, ''இறைவா, இது என்ன திருவிளையாடல்? நான் கயிலாயத்துக்குச் செல்ல முடியாதா?'' என்று கலங்கினார். மறுகணம், அந்த இடமே கயிலாயமாக மாறியது. திருநாவுக்கரசருக்கு, அம்பிகையுடன் அருட்காட்சி தந்தார் சிவபெருமான். (வழியில்... இறைவன் ஓரு முனிவராக வந்து, பயணத்தைக் கைவிட்டு திரும்பிவிடும்படி கூறியும் நாவுக்கரசர் மறுத்து கயிலை பயணத்தைத் தொடர்ந்ததா கவும், அவரின் திடமான பக்திக்கு மகிழ்ந்து இறைவன் அருள் செய்ததாகவும் கூறுவர்). இப்படி, திருநாவுக்கரசர் திருக்கயிலாய தரிசனம் பெற்ற நாள், ஆடி மாத அமாவாசை திருநாள்.

தஞ்சையிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவையாறு. இங்குள்ள ஸ்ரீஐயாரப்பர் திருக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில்... இறைவன், நாவுக்கரசருக்கு திருக்கயிலாய தரிசனம் தந்ததற்கு சாட்சியாக, 'வட கயிலாயம், தென் கயிலாயம்’ என்று இரு கோயில்கள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருநாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சி பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அருள் பொங்கும் ஆடி அமாவாசை!


சதுரகிரியிலும் திருவிழா!

துரை- விருதுநகர் மாவட்டங்கள் இணையும் இடத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி. இங்கே சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரு லிங்க மூர்த்தங்களாகக் கோயில் கொண்டுள்ளார் சிவபெருமான். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 4 மணி நேரம் மலையில் நடைப்பயணம் மேற்கொண்ட களைப்புகூட தெரியாமல், அங்கே இறைவன் சந்நிதியில் பக்தர்கள் மெய்ம்மறந்து தரிசிப்பது இந்தத் தலத்தின் தனிச்சிறப்பு!

ஆடி அமாவாசை இங்கே விசேஷம். முதல் நாளே பக்தர்கள் மலையேறத் துவங்கிவிடுவார்கள். ஆடி அமாவாசை அன்று இந்த மலையில் காணப்படும் மூலிகைகளில் இருந்து அபூர்வ சக்தி வெளிப்படுவதாகவும், அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்குமேல் காலை 8 மணிக்குள் மலையேறினால் அந்த மூலிகைகளின் அபூர்வ சக்தி நமக்குக் கிடைத்து நோய்- நொடியற்ற தன்மையைப் பெறுவோம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை தினத்தில் இங்குள்ள மூலிகைகளுக்கு அபூர்வ சக்தி கிடைப்பதால், அன்றைய தினம் இங்குள்ள புனித நீர்நிலைகளில் நீராடுவதும் கூடுதல் பலன் தரும்.

மதுரை- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவில் சென்று, அங்கிருந்து வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை அடிவாரப் பகுதியை அடைந்து, அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் சதுரகிரி மலை உச்சியை சென்றடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு