மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 8

ஞானப் பொக்கிஷம்! - 8

ஞானப் பொக்கிஷம்! - 8
ஞானப் பொக்கிஷம்! - 8
##~##
'எ
னக்கு எல்லாம் தெரியும். இங்கிலீஷ்ல இருக்குற எல்லா எழுத்துலயும் பட்டம் வாங்கியிருக்கேன். ஒரு பயலுக்கும் நான் பயப்பட மாட்டேன்; பயப்படவும் வேண்டாம்!’ - இந்த எண்ணம் படித்தவர்களிடையே பலருக்கு உண்டு.

படிப்புக்குப் பஞ்சம் இல்லை. கணினியைத் தட்டினால், கை விரலில் உலகத் தகவல்கள் கொட்டுகின்றன. படிப்பறிவு இல்லாவிட்டால்கூட, விஞ்ஞான வசதி மிகுந்த இந்தக் காலச் சுற்றுப்புறச் சூழல் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது. செல்ஃபோனை இயக்குவது எப்படி என்று பள்ளிக்கூடம் வைத்தா சொல்லிக் கொடுக்கிறார்கள்?

இப்படி, கல்வியும் விஞ்ஞானமும் கொடி கட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில் உலகெங்கும் அமைதி, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் நிறைந்திருக்க வேண்டாமா? இல்லையே! ஏன் இப்படி  எனக் கேள்வி கேட்டு, பதிலையும் தருகிறது ஒரு நூல்...

படிப்பு அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை. அதற்காக, எல்லாவற்றையும் படிக்கக் கூடாது; எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

அப்படி, அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து, கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். ஓரளவு அறிந்துகொண்டு விட்டோம், படித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... 'ஹ..! பார்த்தாயா? இதையெல்லாம் நான் தெரிந்துகொண்டு விட்டேனாக்கும்!’ என்று ஆடக்கூடாது. படித்ததைப் பயன்பாட்டில் கொண்டு வரவேண்டும். அடக்கம் வேண்டும்; பொறுமை வேண்டும். அடுத்தது...

அச்சம் வேண்டும். ஆம்! பயப்பட வேண்டியவற்றுக்குப் பயந்துதான் ஆகவேண்டும். ''ஹூம்! எனக்குத் தன்னம்பிக்கை அதிகம். நீச்சல் தெரியாவிட்டால்கூட, வெள்ளமாக ஓடும் ஆற்றில் குதித்து, மீண்டு வந்துவிடுவேன்'' என்று காட்டாற்று வெள்ளத்தில் குதிக்கக் கூடாது. சற்றுநேரக் குளியலுக்கே இப்படி பயம் தேவை எனும்போது, வாழ்க்கையில் வரும் இன்ப- துன்பக் குளியல்களுக்கு எவ்வளவு பயம் வேண்டும்?!

'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்கிறார் வள்ளுவர். தவறு செய்ய அஞ்ச வேண்டும்; தீங்கு செய்ய அஞ்ச வேண்டும்; அடுத்து... நாம் செய்யக்கூடிய செயல்களால், பிறர் மகிழ வேண்டும். நமது செயல்கள் அடுத்தவரைப் பயமுறுத்தக் கூடாது. அடுத்தது... நன்றாக உழைத்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எவ்வளவு இருந்தாலும் திருப்தி அடையாதவர்கள் பட்டியலில் நம் பெயர் இடம் பெறக்கூடாது.

இப்படிப்பட்ட இயல்பு உடையவர்கள் எப்போதும் துன்பமின்றி இன்பமாக வாழ்வர் என அறிவுறுத்துகிறது அந்த நூல்.

ஆனால், இன்றைய நிலையோ...

தெரிந்துகொள்ள வேண்டாதவற்றை எல்லாம் ஏராளமாகத் தெரிந்துகொண்டு, குப்பை பேப்பர் காற்றில் பறப்பதைப் போல், அடக்கமின்றி கர்வத்தில் பறந்து ஆடிக்கொண்டிருக்கிறோம். 'என் இஷ்டம். நான் அப்படித்தான் செய்வேன். அதைக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது!’ என்று அச்சுறுத்தவும் செய்கிறோம். நல்லது செய்ய யோசிக்கும் நாம், பயமே இல்லாமல் தவறுகளைச் செய்கிறோம். அதன் மூலம் ஏராளமான செல்வமோ அல்லது பதவியோ கிடைத்தாலும், திருப்தி இல்லாமல் தவிக்கிறோம். பிறகு, துன்பக் கொடி பறக்காமல், இன்பக் கொடியா பறக்கும்?

இந்தத் தகவலைச் சொல்லி, நமக்குப் பாடம் நடத்தும் நூலின் பெயர்- நாலடியார். பாடலைப் பார்த்துவிட்டு, நாலடியார் உருவான வரலாற்றைப் பார்க்கலாம்.

அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பு உடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது

நாலடியார் எனும் இந்நூலில் 400 வெண்பா பாடல்கள் உள்ளன. இதற்கு 'நாலடி நானூறு’ என்று மற்றொரு

பெயரும் உண்டு.

'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, 'பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’- என்று பழந் தமிழ் வாக்குகள் பாராட்டுகின்றன. நாலடியாரின் சிறப்பையும் திருக்குறளின் பெருமையையும் விளக்கும் அருமையான வாக்குகள் அவை. இந்த நாலடியார் உருவானதற்கே ஓர் அற்புதமான வரலாறு உண்டு.

ருமுறை, வடநாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அங்கிருந்து 8,000 சமண முனிவர்கள், பஞ்சம் பிழைக்கப் பாண்டிய நாட்டுக்கு வந்தனர். மதுரையில் தங்கினர். பாண்டிய மன்னரும் அவர்களை அன்போடு ஆதரித்து வந்தார். 12 ஆண்டுகள் கடந்தன. வடக்கே பஞ்சம் தீர்ந்தது. சமண முனிவர்கள் நாடு திரும்ப விரும்பினர். நல்லவர்களும் நீதியை எடுத்துச் சொல்பவர்களுமான அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதைப் பாண்டிய மன்னர் விரும்பவில்லை. ஆனால், மன்னரின் கருத்தை அறிந்த சமண முனிவர்கள், அதற்கு ஒப்பவில்லை.

மதுரையில் இருந்த 12 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியை நன்றாகக் கற்றுக் கவி பாடும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்த அந்த 8,000 சமண முனிவர்களும் ஒருநாள், தாங்கள் தங்கியிருந்த குடிசைகளில் தங்களின் ஆசனங்களின் அடியில், ஆளுக்கொரு வெண்பாவாக ஓலையில் எழுதி வைத்துவிட்டு, மன்னரிடம் தகவல்கூடத் தெரிவிக்காமல் இரவோடு இரவாக மதுரையை விட்டுப் போய்விட்டார்கள்.

ஞானப் பொக்கிஷம்! - 8

மறுநாள் மன்னருக்குத் தகவல் தெரிந்தது. அவர், சமண முனிவர்கள் தங்கியிருந்த குடிசைகளைச் சோதனையிட்டார். பாடல்கள் எழுதப்பட்ட 8,000 ஓலைகள் கிடைத்தன. அவற்றைப் படித்துப் பார்க்கும்படி தமது அவைப் புலவர்களுக்கு ஆணையிட்டார். பாடல்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன. பார்த்தார் மன்னர். ''சரி, இவற்றால் பயன் இல்லை என்றால், இந்த ஓலைகளை எல்லாம் வைகை ஆற்றில் போட்டுவிடுங்கள்!'' என்று உத்தரவிட்டார். அதன்படியே 8,000 ஓலைகளும் வைகை ஆற்று வெள்ளத்தில் போடப்பட்டன. அவற்றில் 400 ஓலைகள் மட்டும் வெள்ளத்தோடு போகாமல் எதிர்த்து வந்து கரையில் ஒதுங்கின. அவற்றை எடுத்து முறைப்படி தொகுத்த புதுமனார் என்ற புலவர், அதற்கு 'நாலடியார்’ என பெயரிட்டார்.

வைகையில் போடப்பட்ட ஏடுகளில் வெள்ளத்தில் போனவை போக, அங்கங்கே பல ஏடுகள் வேறு சில இடங்களில் கரை ஒதுங்கியிருந்தன. அவற்றையெல்லாம் எடுத்து ஒன்றுசேர்த்துப் பார்த்தார்கள். அங்கேயும் 400 ஏடுகள் இருந்தன. அவற்றில் இருந்த வெண்பாக்களை எல்லாம் ஒன்று சேர்த்து, 'பழமொழி நானூறு’ எனப் பெயரிட்டதாகவும் சொல்வது உண்டு. நாலடியாரும் பழமொழி நானூறும் தனித்தனி நூல்கள். இரண்டு நூல்களும் இப்போது கிடைக்கின்றன.

திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் இருப்பதைப் போல, நாலடியாரிலும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் உள்ளன. இப்படி 40 அதிகாரங்களில் 400 பாடல்கள் நாலடியாரில் உள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் இளமைப் பருவப் பெருமை, கொடை, உயர்ந்தவர்களின் தன்மை, நட்பு, சுயநலம், கல்வி- கொடை ஆகியவற்றில் அகம்பாவம் எனப் பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும், தன்னம்பிக்கையைப் பற்றிய ஒரு பாடலும், தென்னாடான தமிழ் நாட்டைப் பற்றிய ஒரு பாடலும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதித்து வைத்துக்கொள்ள வேண்டியவை. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டின் பெருமையைத் தூக்கி நிறுத்தும் ஒரு பாடலையாவது பார்க்க வேண்டும். இதுவரை நாம் அறியாத புதுத் தகவல், திடுக்கிடும் தகவல், வரலாற்றுத் தகவல் கிடைக்கும். அதைப் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் ஒரு கொள்கை இருந்ததாம்... அதாவது- வடநாடு புண்ணிய பூமி; தென்னாடான தமிழ்நாடு பாவ பூமி! வட நாட்டில் உள்ளவர்கள் புண்ணியம் செய்வர்; அவர்கள் சொர்க்கத்தை அடைவர். தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் வட நாட்டுக்குப் போனால், அவர்கள் ஒழுக்கத்தில் உயர்ந்து உத்தமர்களாக ஆவார்கள். அதே நேரம், வடநாட்டுக்காரர்கள் தென்னாட்டுக்கு வந்தால், அவர்கள் ஒழுக்கம் கெட்டுப் போய்க் கீழ்மைக் குணம் அடைவர். ஏனென்றால், தென்னாடுதான் பாவ பூமி ஆயிற்றே... அதனால்தான்!

இந்தத் தவறான கொள்கையை மறுத்து, நாலடியார் அழுத்தமாக பதில் சொல்கிறது. 'நாடு என்ன செய்யும்? அவரவர் தன்மைக்கு ஏற்றபடிதான் நன்மை தீமைகளை அடைவார்கள். அதற்கு அவர்கள் வாழும் நாடு காரணமல்ல. தென்னாட்டுக்காரர்களுக்குச் சொர்க்கமும் உண்டு; வடநாட்டுக்காரர்களுக்கு நரகமும் உண்டு’ என்கிறது நாலடியார்.

'எந்நிலத்து வித்து இடினும் காஞ்சிரம்காழ் தெங்கு ஆகா
தென்னாட்டவரும் சொர்க்கம் புகுதலால்
தன் ஆற்றான் ஆகும் மனுமை; வட திசையும்
கொன் ஆளர் சாலப் பலர்’ என்பது பாடல்.

நாம் நலம் பெறுவதற்காகவாவது, நாலடியாரைப் படித்து உணர்ந்தால் நல்லது.

(இன்னும் அள்ளுவோம்...)