பிரீமியம் ஸ்டோரி
கலியுகக் கடவுள்!
கலியுகக் கடவுள்!
##~##
கே
ரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆன்மிக மணம்  பரப்பும் பிரபலமான ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி கோயில், ஸ்ரீபழவங்காடி கணபதி கோயில், ஸ்ரீஆற்றுக்கால் பகவதி கோயில்களின் வரிசையில் அமைந்தது ஸ்ரீலட்சுமி வராக ஸ்வாமி கோயில். ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயத்துக்குத் தென்மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தன் இடது தொடையில் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீலட்சுமிதேவியை அமர்த்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீலட்சுமி வராக ஸ்வாமி!

கடும் தவம் இருந்து, தன்னை எவராலும் வெற்றிகொள்ள முடியாதபடி அரிய வரத்தைப் பெற்ற ஹிரண்யாட்சன் என்ற அசுரன், தேவர்களை வென்றான்.வருணனை வென்று சமுத்திரத்தையும் கைப்பற்றினான். நிறைவாக பூமியைக் கைப்பற்றி, அதைக் கொண்டுபோய் சமுத்திரத்துக்கு அடியில் மறைத்து வைத்தான். இதைத் தொடர்ந்து, இந்த அசுரனால் பாதிக்கப்பட்டவர்கள் மகா விஷ்ணுவிடம் முறையிட்டதையும், அவர் ஸ்ரீவராகராக அவதரித்து கடலுக்குள் சென்று அந்த அசுரனை அழித்து, பூமியை மீட்டு வந்த கதையையும் நாமறிவோம்.

அதனால் ஈரேழுலகமும் நிம்மதி அடைந்தது. தேவர்கள் 'கோவிந்தா! கோவிந்தா!' என்று விஷ்ணு வைப் போற்றித் துதித்தனர். 'கோ’ என்றால் பூமி; 'விந்தன்’ என்றால் காத்தவர் என்று பொருள். வராக புராணத்தில் ஓர் உரையாடல் வருகிறது. மகா விஷ்ணுவால் காப்பாற்றிக் கொண்டுவரப்பட்ட பூமா தேவி விஷ்ணுவைப் பார்த்து, 'பிரபு! பிரளய ஜலத்தில் அமிழ்த்தப்பட்ட என்னைக் காத்தருளினீர். இதேபோல், உலகின் ஜீவன்கள் முக்தியை அடைய சுலபமான வழியன்றை அருளுவீராக!'' என்று கேட்கிறாள்.

கலியுகக் கடவுள்!
கலியுகக் கடவுள்!

இதற்குப் பரமாத்மா, 'வராக சரம ஸ்லோகம்’ என்று குறிப்பிடப்படும் இரண்டு ஸ்லோகங்களில் பதிலளிக்கிறார்: 'ஓ, பூமாதேவியே! என் உடல்தான் இந்த உலகம். எனக்குப் பிறப்பு- இறப்பு கிடையாது. எவன் ஒருவன் நல்ல மன நிலையிலும், நல்ல உடல் நிலையிலும் இருக்கிறபோது பக்திபூர்வமாக மலர்கள் தூவி என்னை வழிபட்டுச் சரணடைகிறானோ, அவன் அந்திமக் காலத்தில் தன் இறுதி மூச்சை விடும்போது அவனைப் பரமபதம் (மோட்சம்) அடையச் செய்வேன்!''

அவ்வாறு மனிதர்கள் உய்யும் பொருட்டு பூமாதேவிக்குப் பதிலளித்த மகாவிஷ்ணு, திருமலையில் உள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரர் கோயிலின் குளக்கரையில் வராக அவதாரத்தில் காட்சியளிக்கிறார்; தமிழகத்தில்- திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் ஸ்ரீலட்சுமி வராகப் பெருமாளாக அருள்கிறார். இந்த வரிசையில், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் அனக்கரா என்னுமிடத்தில் அமைந்த பன்னியூர் ஸ்ரீவராகமூர்த்தி ஆலயம், தொடுப்புழா அருகில் பண்ணூர் என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீவராக ஸ்வாமி ஆலயம் மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீலட்சுமி வராக ஸ்வாமி ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை. இவற்றில் வெகு சிறப்பாக, கேரளக் கலை வேலைப்பாடுகளுடன் அமைந்த மிகப் பழைமையான கோயில், திருவனந்தபுரம் ஸ்ரீலட்சுமி வராக ஸ்வாமி ஆலயம்தான்.

கலியுகக் கடவுள்!

கோயிலுக்கு எதிரில் ஆறு ஏக்கர் பரப்பில் புனிதமான ஸ்ரீவராக தீர்த்தக் குளம் உள்ளது. அதனைப் பார்த்தபடி ஸ்ரீலட்சுமி வராக மூர்த்தி காட்சி தருகிறார். கோயிலின் கருவறையில் பகவான் பத்ர பீடத்தில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க, அவருடைய இடது மடியில் ஸ்ரீலட்சுமிதேவி! பகவானுக்கு நான்கு கைகள். மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம். கீழ் இடது கரத்தால் தேவியை அணைத்துக் கொண்டிருக்கிறார்; கீழ் வலது கை அபயம் காட்டுகிறது. இந்த மூலவரின் விக்கிரகம் கருங்கல் சிலா ரூபம். உத்ஸவ மூர்த்தியும், சீவேலி மூர்த்தியும் பஞ்சலோக சிற்பங்கள். இங்கே நாம் காணும் அனுமான், வெள்ளிக் கவசத்துடன் காட்சி தருகிறார். கருவறையின் இரு கதவுகளிலும் ஜெயன், விஜயன் என்ற துவார பாலகர்கள் காணப்படுகின்றனர். ஸ்ரீகணபதி, ஸ்ரீசிவன், ஸ்ரீகிருஷ்ணர், நாகராஜன் மற்றும் நாக யக்ஷி ஆகியோரும் இந்த ஆலயத்தில் அருள்கிறார்கள்.

கோயிலின் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) சுப்ரமணிய போத்தியைச் சந்தித்தோம். 'அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு. 11 மணிக்குக் கோயில் சாத்தப்பட்டு, மறுபடியும் மாலை 5 மணிக்குத் திறந்து இரவு 8 மணிக்குச் சாத்துகிறோம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 நாள் திருவிழா இங்கு விசேஷம்! இந்த  எட்டு நாளும் உத்ஸவமூர்த்தியை அலங்கரித்த யானையின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு செல்வோம்.

இரவில் உத்ஸவர் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். வேத பாராயணம், அஷ்டபதி கச்சேரி ஆகியவை காலை யில் நடக்கும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம். மாலையில் கலை நிகழ்ச்சிகள். விழாவின் 7-வது நாளில் பள்ளி வேட்டை நடைபெறும். எட்டாவது நாளில் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி கோயில் ஊர்வலத்தோடு சேர்ந்து, இந்தக் கோயில் உத்ஸவர் ஸ்ரீலட்சுமி வராகமூர்த்தியும் ஊர்வலமாக சங்குமுகம் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்படுவார். இந்த ஆலயத்தில் பக்தர்கள் வேண்டுதலின்பேரில் ஐந்து போத்தி(அர்ச்சகர்)களைக் கொண்டு லட்சார்ச்சனை செய்யப்படும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் இங்கு விசேஷம்! அசுரனை அழித்து பூமியைக் காப்பாற்றிய ஸ்ரீவராகரைத் தரிசித்து வேண்டினால், பக்தர்களுக்கு நேரும் துயரங்கள் பனி போல விலகும். ஸ்ரீலட்சுமியைப் பிரார்த்திக்க, சகல ஐஸ்வர்யங்களையும் அருளுவாள்!'' என்றார் மேல்சாந்தி சுப்ரமணிய போத்தி.

கலியுகக் கடவுள்!

கோயிலின் பிராகாரத்தில் நாம் கண்ட பக்தை மீனா நம்பி என்பவர், கடந்த பத்து வருடங்களாக ஒரு வியாழக் கிழமை கூடத் தவறாமல் ஆலயத்துக்கு வந்து ஸ்ரீலட்சுமி வராகரைத் தரிசிப்பதாகச் சொல்ல, அவரிடம் பேசினோம்.

'என் கணவர் பிரபல விஞ்ஞானி. செய்யாத குற்றத் துக்காக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை. நான் தினமும் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கும், இந்த ஸ்ரீலட்சுமிவராக ஸ்வாமி கோயிலுக் கும் வந்து என் குறையைக் கண்ணீருடன் கொட்டுவேன். அதற்கு பலன் கிடைச்சது. என் கணவர் நிரபராதின்னு தீர்ப்பு தந்ததோட, அவருக்கு நேர்ந்த துயரத்துக்காக அரசாங்கம் ஒரு பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டது நீதிமன்றம். ஸ்ரீவராகரின் கருணையே இதற்குக் காரணம். கலியுகத்தின் கண்கண்ட கடவுள் இவர்!'' என்று கண்களில் நீர்மல்கச் சொன்னார் மீனா நம்பி.

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு