Published:Updated:

அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!

அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!

பிரீமியம் ஸ்டோரி
அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!
அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!
அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!

நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் திருத்தலம் திருவண்ணாமலை. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு 9 கோபுரங்கள். அதில் ஒன்று... அம்மணி அம்மன் கோபுரம். அருள்மொழி அம்மணி அம்மாள் என்பவர் கட்டியதால் அந்தப் பெயர்.

 யார் இந்த அருள்மொழி அம்மணி அம்மாள்? அவர் ஏன் இந்தக் கோபுரத்தைக் கட்ட வேண்டும்?

அதைத் தெரிந்து கொள்ள, பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சென்ன சமுத்திரம் என்ற கிராமத்துக்கு பயணித்துத் திரும்புவோம்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சென்னசமுத்திரத்தில் இருந்தது அந்த எளிமையான வீடு. அதுதான் சிறுமி அருள்மொழியின் வீடு. அங்கிருந்த மற்ற வீடுகளைக் காட்டிலும் இந்த வீட்டில் இருந்து மட்டும்

அடிக்கடி பக்தி மணம் கமகமக்கும். பூஜை என்று உட்கார்ந்து விட்டால், அதிலிருந்து மீண்டெழ பலமணி நேரம் ஆகிவிடும், அருள்மொழிக்கு.

'அருள்மொழி! இந்தச் சின்ன வயசுல உனக்கு இவ்ளோ பக்தி ஆகாதும்மா. இத நான் சொல்லல... பக்கத்து வீடுகள்ல உள்ளவங்கதான் இப்படிச் சொல்றாங்க. எனக்கும்கூட அவங்க சொல்றது சரிதானோன்னு தோணுது. நீ பெரிய மனுஷி ஆனபிறகு நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டு, நல்லபடியா- சந்தோஷமா வாழணும்கிறதுதான் இந்த அம்மாவோட ஆசை!' - அருள்மொழியின் அம்மா இப்படி ஆசைப்பட்டாலும், அவரது நினைவெல்லாம் அருணாசலேஸ்வரர் மீதுதான் இருந்தது.

'நான் என்னம்மா செய்வது? தென்னாடுடையானை நினைத்தாலே நான் என்னையே மறந்துவிடுகிறேன். அடுத்தவர்களுக்குத் தீங்குதானே செய்யக்கூடாது? சதா காலம் கடவுளை நினைத்திருப்பதில் தவறில்லையே... அம்மா!'

அருள்மொழியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, அவரது தாயாருக்கு! எல்லாம் இறைவன் விருப்பம் என்று விட்டுவிட்டார். அருள்மொழி பெரிய மனுஷி ஆனபிறகும், இறைவன் மீதான அவரது பக்தி குறையவில்லை.

அற்புதம்... ஆச்சரியம்... அம்மணி அம்மாள்!

ஒருநாள், அருள்மொழியின் இல்லத்தில் அத்தனை பேர் முகத்திலும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் அண்ணாமலையானை தரிசிக்கப் புறப்பட்டதுதான் அதற்குக் காரணம்! கட்டுச்சோறு கட்டிக்கொண்டு நடைப் பயணமாகவே புறப்பட்டார்கள், திருவண்ணாமலைக்கு!

பல மணி நேர பயணத்துக்குப் பிறகு தெரிந்த அண்ணாமலையின் கம்பீரம் அவர்களைப் பரவசப்படுத்தியது. அருள்மொழிக்கோ, இன்னும் கூடுதலான பரவசம்! தான் நித்தமும் வணங்கும் இறைவனை நேரில் தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆவலில் வேகமாக நடந்தார்.

எல்லோரும் கோயிலை அடைந்தார் கள். பிராகாரங்களை வலம் வந்தார்கள். அருணாசலேஸ்வரர் சந்நிதி முன்பு போய் நின்றார்கள். அங்கே... என்னவொரு அற்புதக் காட்சி! இறைவனின் திருமேனி யைப் பார்த்த மாத்திரத்தில் கையெடுத்துக் கும்பிட்டார் அருள்மொழி. அவரது உடலும் ஏதோ பரவசத்தில் லேசாக நடுங்கி அடங்கியது. அர்ச்சகர் தந்த விபூதியை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார்.

உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களின் திருச்சந்நிதி தரிசனமும் முடிந்தாயிற்று. எல்லோரும் வெளியே வந்தார்கள். ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். அருள்மொழியை அழைத்தார்கள்.

'அம்மா... நான் ஊருக்கு வரவில்லை. எனக்கு அண்ணாமலை மிகவும் பிடித்துப்போய்விட்டது. நான் இங்கேயே இருந்து விடுகிறேன்' என்றார் அருள்மொழி.

'என்னம்மா சொல்கிறாய்? வயதுக்கு வந்த பெண்ணை எப்படியம்மா தனியாக விட்டுப்போக முடியும்? உன் விருப்பப்படி நான் அந்தக் காரியத்தைச் செய்தால், ஊரார் என்னை கேலி பேசுவார்களே! 'பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்க வக்கத்துப் போய்விட்டாள். அதனால்தான், யாத்திரை போன இடத்தில் எங்கேயோ விட்டுவிட்டு வந்துவிட்டாள்’ என்றல்லவா புரளி பேசுவார்கள்? அப்படியரு கெட்டப் பெயர் உன்னால் எனக்கு ஏற்பட வேண்டுமா?' - அழுதேவிட்டார் அருள்மொழியின் தாயார். பிறகு,  சமாதானமாகி தனது உறவினர் வீட்டில் அவரைச் சிறிது காலத்துக்குப் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, சென்னசமுத்திரம் புறப்பட்டுச் சென்றார்.

##~##
உறவினர் வீட்டில் தங்கியிருந்த அருள்மொழி, அண்ணாமலையானை தரிசிக்க தினமும் கோயிலுக்கு வந்து விடுவார். பெரும்பாலான நேரங்களை அண்ணாமலையான் சந்நிதியிலேயே கழித்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தன. திருவண்ணாமலையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் அருள்மொழி. திருமண வயது கடந்த பிறகு துறவியாக மாறினார். அண்ணாமலையான் அருளால் தெய்விக சாந்நித்தியம் அவருக்குக் கிடைத்தது. பக்தர்கள் பலர் அவரைத் தேடி வந்தார்கள். தீராத நோய்களுடன் வந்தவர்களும், மன நிம்மதி வேண்டி வந்தவர்களும் அதில் உண்டு! எல்லோருக்கும் விபூதி தந்து குறைகளைப் போக்கினார். எல்லோரும் அவரை 'அம்மணி அம்மாள்’ என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான், முழுமை பெறாமல் திருப்பணி தடைபட்டுப் போயிருந்த அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரத்தை முழுமையாகக் கட்டி முடிக்க முயற்சிகள் மேற்கொண்டார் அம்மணி அம்மாள். திருப்பணி என்றால் சும்மாவா? நிறையப் பொன்- பொருள் தேவைப்பட்டது. வீடு வீடாக மக்களைத் தேடிப் போனார், நன்கொடைகள் கேட்டார். பலர் இல்லையென்று கை விரிக்க... சிலர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். கிடைத்த உதவிகளைக் கொண்டு வடக்குக் கோபுரத் திருப் பணிகளைத் தொடங்கிவிட்டார். திருப்பணிகள் முழுமைபெற இன்னும் நிறைய செலவாகும்போல் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில்தான், ஒரு செல்வந்தர் வீட்டுக்கு நன்கொடை வாங்கச் சென்றார் அம்மணி அம்மாள். துறவிக் கோலத்தில் நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு வந்து நின்ற அவரை உரிய மரியாதையுடன் வரவேற்றார் செல்வந்தர். இருப்பினும், 'கோயில் திருப்பணிக்காக நன்கொடை வேண்டி வந்திருக்கிறேன்' என்று அம்மணி அம்மாள் சொன்னபோது, செல்வந்தரின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

'அடடா..! நீங்கள் நேற்றே வந்திருக்கக் கூடாதா? நேற்றுதான் கையில் இருந்த பணத்தை எல்லாம் ஒரு காரியத்துக்காகச் செலவு செய்தேன். இப்போது என் கையில் சுத்தமாகப் பணம் இல்லையே..!' என்று பொய் சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் செல்வந்தர்.

இவர் மட்டுமல்ல, இவரைப் போன்று எண்ணற்றவர்களிடம், 'இப்போது என்னிடம் பணம் இல்லையே!’ என்ற வார்த்தைகளைக் கேட்டு பழக்கப் பட்டவர்தானே அம்மணி அம்மாள்? திடீரென்று என்ன நினைத்தாரோ... கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்தார். சில நொடி நேரத்துக்குப் பிறகு, கண்களைத் திறந்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பதற்றத்தில் அவரது முகத்தையே செல்வந்தர் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். அப்போது அம்மணி அம்மாள் சொன்னார்...

'உங்கள் வீட்டுப் பணப் பெட்டியில் பத்தாயிரத்து இருபது ரூபாய் இருக்கிறதே... கோயில் திருப்பணி நன்கொடைக்கு அவ்வளவு பணம் வேண்டாம். அதிலிருந்து நூறு ரூபாய் தந்தாலே போதும்!'

செல்வந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அம்மணி அம்மாள் இப்படிச் சொல்வார் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. 'நம்மிடம் பணம் இருப்பது இந்த அம்மாவுக்கு எப்படித் தெரியும்?’ என்று மனதுக்குள் யோசித்தவர், 'அப்படியா..! என் கவனத்தையும் மீறி, வீட்டில் ஏதாவது பணம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்...' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார். சிறிது நேரத்தில் ஒரு பொட்டலம் நிறைய காசுகளை முடிந்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

'அம்மா... நீங்கள் கேட்டதைவிட இதில் இரு மடங்கு பணம் இருக்கிறது. இதை நன்கொடையாக வைத்துக்கொள்ளுங்கள். நான் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்...' என்று கூறி, சட்டென்று அம்மணி அம்மாளின் கால்களில் விழுந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினார் அந்தப் பெண் துறவி.

இப்படிக் கஷ்டப்பட்டு பக்தர்களிடமிருந்து நன்கொடைகளாகத் திரட்டப்பட்ட பண உதவியில் பிரமாண்டமாக எழுந்தது அண்ணாமலையார் கோயில் வடக்குக் கோபுரம். பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், இன்றைக்கும் அதே கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது அந்தக் கோபுரம். அம்மணி அம்மாளின் பெருமுயற்சியில் எழுந்ததுதானே இந்தக் கோபுரம்? அதனால், 'அம்மணி அம்மன் கோபுரம்’ என்றே அதற்குப் பெயர் சூட்டிவிட்டார்கள்! வடக்குக் கோபுரத் திருப்பணிக்குப் பிறகும் தன்னை முழுமையாக ஆன்மிகப் பணியில் அர்ப் பணித்துக்கொண்ட அம்மணி அம்மாளின் சமாதி கோயில், திருவண்ணாமலை ஈசானிய குளத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு