Published:Updated:

காளி கோயிலில் தாலி காணிக்கை!

ஆடி மாதம் அருள் தரிசனம்...

கொற்றவை, துர்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி எனப் பற்பல திருநாமங்களுடன், பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி செய்யும் ஆதிசக்தி, ஸ்ரீபத்ரகாளி அம்மனாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலம் கள்ளிமேடு. நாகை மாவட்டத்தில், நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்; வேதாரண்யத்தில் இருந்து சுமார் 15 கி.மீ.

ஆற்றங்கரைமேட்டில் அமர்ந்து அன்னை பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கும் ஊர் என்பதால், இந்த ஊருக்குக் காளிமேடு எனும் பெயர் வந்ததாம். அதுவே பிறகு கள்ளிமேடு என்றானதாகச் சொல்கிறார்கள்.

காளி கோயிலில் தாலி காணிக்கை!

ஒருமுறை, திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) இருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்ட காளமேகப் புலவர் இந்தப் பகுதிக்கு வந்தார். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறினார். அதற்கான கட்டணத்தைத் தந்தவருக்கு பாக்கிப் பணத்தைக் கொடுக்கவில்லையாம் பரிசல் ஓட்டி. இதனால் கோபம் கொண்ட காளமேகப் புலவர் ஒரு பாடல் பாடினார்.

'கங்கைநாடு, உங்கள் தேசம்,
கள்ளிமேட்டுவரமுறையாற் கையில்
கொடுத்தபொருள் கடலில் கவிழ்ந்தவாறே
கள்ளிமேடு கொள்ளிமேடு என்று
கொளுத்தடி பத்ரகாளி’
என்று

அவர் பாடியதும், கள்ளிமேடு கிராமமே பற்றி எரிந்ததாம்! அப்போது ஆற்றின் வடக்கரையில் இருந்த கோயில், அதன்பிறகு தென்கரையில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

கோயிலின் ஸ்தல விருட்சம் தென்னை. திருக்கோயில் தீர்த்தக்குளம் தென்புறமாக அமைந்துள்ளது. இதில் நீராடிவிட்டு அல்லது இதன் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகே தரிசனத்துக்கு ஆயத்தமாகிறார்கள் பக்தர்கள். சகல சரும நோய்களையும் தீர்த்தருளும் தீர்த்தமாம் இது!

காளி கோயிலில் தாலி காணிக்கை!

ஆகம முறைப்படி தினமும் இரண்டு வேளை வழிபாடுகள் நடைபெறும் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! இதுபோன்ற தினங்களில் இங்கு வந்து அம்மனைத் தரிசித்து வழிபட, குறைகள் யாவும் நீங்கும்; வறுமையும் பகையும் ஒழியும்; புத்திரப் பேறு உட்பட 16 பேறுகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆடிப் பெருவிழா இங்கே விசேஷம்! ஐந்து நாட்கள் தொடர்ந்து கோவலன்- கண்ணகி கதாகாலட்சேபம், கடைசி வெள்ளியன்று அன்னதானம், விசேஷ அபிஷேக ஆராதனைகள்... என ஆடி மாதம் முழுவதுமே விழாக்கோலம்தான்!

சுமங்கலிப் பெண்கள், தங்களின் கணவர் நோய்நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளுடன் வாழ, இந்த அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதேபோன்று, பிணிகள் விலக மாவிளக்கு பிரார்த்தனையும், குழந்தைகள் நலமுடன் வாழும் பொருட்டு அம்மனுக்கு வருடம் ஒருமுறை நடைபெறும் தத்தம் கொடுக்கும் பிரார்த்தனையும் இந்த ஆலயத்தின் சிறப்பம்சம்!

காளி கோயிலில் தாலி காணிக்கை!

''வரப்பிரசாதியான இந்த அம்பாளைத் தரிசித்தாலே போதும், தீவினைகள் காணாமல் போகும். தோஷங்கள், பில்லி- சூனியம் போன்றவை விலகும் பொருட்டு, தொடர்ந்து 3 அல்லது 5 செவ்வாய்க்கிழமைகள் இங்கே அம்பாளின் சந்நிதிக்கு வந்து இரவில் ஆலயத்தில் தங்கி வழிபட்டுச் செல்லும் பக்தர்களும் உண்டு. அதன் பிறகு அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள் என் தாய் பத்ரகாளி!'' என்கிறார் ஆலயத்தின் பாஸ்கர குருக்கள். நீங்களும் ஒருமுறை கள்ளிமேடு சென்று ஸ்ரீபத்ரகாளி அம்மனின் வரம் பெற்று வாருங்கள். வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைவீர்கள்!

            - மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு