Published:Updated:

குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி!

ஆடி மாதம் அருள் தரிசனம்...

பிரீமியம் ஸ்டோரி
குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி!
குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி!
குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி!

'எனக்குக் கல்யாணமாகி 10 வருஷமா குழந்தை இல்லை. தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் உடனுறை பொன்மலைநாதர் மகிமைகள் பற்றிக் கேள்விப்பட்டு, இங்கு வந்து வழிபட்டோம். என்ன ஆச்சரியம்... அடுத்த சில நாட்கள்ல என் மனைவி கர்ப்பம் தரித்தாள். ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்ட எங்களுக்கு இன்று முத்து முத்தாக மூன்று பிள்ளைகள். இங்கு வந்து வழிபட்டுக் குழந்தை வரம் கிடைத்த காரணத்தால், நாங்கள் இந்த ஊரிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டோம்...' என நெகிழ்ச்சியோடு பேசுகிறார் சகாயம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சென்னை - போளூர் நெடுஞ்சாலையில், போளூருக்குக் கிழக்கே 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேவிகாபுரம். இந்த மாவட்டத்தில், திருவண்ணாமலை

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக உயரமான கோபுரம் கொண்ட கோயில் இதுதான். ஆரம்பக் காலத்தில் 'தேவக்காபுரம்’ என அழைக்கப் பட்ட இந்தத் தலம், காலப்போக்கில் 'தேவிகாபுரம்’ ஆகிவிட்டது. இங்குள்ள கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், அவர்களே இக்கோயிலைக் கட்டினார்கள் என்பதும், தொடர்ந்து திருப்பணிகளை மேற்கொண்டார்கள் என்பதும் தெரிய வருகிறது.

தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் ஊருக்கு மத்தியிலும், பொன்மலைநாதர் மலை உச்சியிலுமாகத் தனித்தனியாகவே கோயில் கொண்டுள்ளனர். முதலில், நாம் ஸ்ரீபெரியநாயகியை தரிசிப்போம்...

ஏழு நிலைகளுடன் சுமார் 150 அடி உயரத்தில் கம்பீர மாக நிமிர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். கோயிலுக்குள் நுழைந்து பலி பீடம், கொடிமரம் கடந்தால் அம்மனை நோக்கியபடி நந்திதேவர். இவரை வணங்கி வழிபட்டு, தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானையும், இடதுபுறத்தில் முத்தமிழ்க் கடவுள் முருகப்பெருமானையும் தரிசிக்கிறோம்.

அடுத்ததாக 5 நிலைகோபுரம் அமைந்துள்ள 36 கால்களைக் கொண்ட மகா மண்டபத்துக்குள் நுழைகிறோம். இங்குள்ள தூண்களில் செதுக்கப் பட்டுள்ள அழகு சிற்பங்கள் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால், 2-வது பிராகாரம். அங்கே... வலதுபுறம் மடைப்பள்ளியும், விசுவநாத ஸ்வாமி சந்நிதியும், இடது புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் அமைந்துள்ளன. இந்தக் கோயில் தொடர்பான அரிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் இந்த மண்டபத்திலேயே அதிக அளவில் காணப்படுகின்றன.

2-வது பிராகாரத்தைக் கடந்து, அர்த்த மண்டபத்துக்குள் செல்கிறோம். இங்கே, தென் திசை நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜரை முதலில் தரிசிக்கிறோம். பிறகு, உத்ஸவ மூர்த்திகள், ஸ்ரீவிநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருமேனிகளை வணங்குகிறோம்.

இதையடுத்து முதல் பிராகாரத்துக்குள் நுழைகிறோம். இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதிருமால், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசண்டீஸ்வரர் ஆகிய தெய்வ மூர்த்தங்களை தரிசித்தவாறே, உள் மண்டபத்தை அடைகிறோம். அங்குதான் அன்னை பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறாள். பேரழகு நிரம்பி வழியும் அவளது திருமேனியை நாள்முழுக்க தரிசித்துக்கொண்டே இருக்க லாம்போல் தோன்றுகிறது, நமக்கு! அன்னையின் மேலிரு கரங்களில் முறையே அங்குசம்- பாசம் இருக்க... மற்ற இரு கரங்கள் அபய- வரத முத்திரை தாங்கியவாறு காட்சி தருகின்றன. இந்த அன்னையைத் தேடி வந்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இனி, மலை உச்சியில் கோயில் கொண்டுள்ள பொன்மலை நாதரை தரிசிக்கப் புறப்படுவோம்...

சுமார் 500 அடி உயரமும், 5 கி.மீ. சுற்றளவும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி எனும் மலைமீது கோயில் கொண்டுள்ள பொன்மலை நாதரை தரிசிக்கச் செல்ல 302 படிக்கட்டுகள் உள்ளன. கருவறையில்... எங்கும் இல்லாத அதிசயமாக இரண்டு சிவலிங்க மூர்த்தங்கள் உள்ளன. ஒருவர் பொன்மலைநாதர் அல்லது கனககிரீஸ்வரர் என்றும், இன்னொருவர் காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பொன் மலைநாதர், சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர். கோயில் கல்வெட்டுத் தகவல்கள் இவரை 'திருமலை உடையார்’, 'திருமலை உடைய நாயனார்’ என்று குறிப்பிடுகின்றன.

குழந்தை வரம் தருவாள் பெரிய நாயகி!

ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு உலகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிப்போக... ஒரேயரு மலை மட்டும் வெள்ளத்தில் மிதந்து பொன் (தங்கம்) போன்று பிரகாசித்தது. அதுவே இந்தப் பொன்மலை என்றும், அதனால் அங்கே வீற்றிருக்கும் இறைவன் பொன்மலைநாதர் என்று அழைக்கப் படுவதாகவும் சொல்கிறது இந்தக் கோயில் தலவரலாறு.

மலைக் கோயில் உருவானதற்கு இன்னொரு செவிவழிச் செய்தியும் சொல்கிறார்கள், தேவிகா புரத்து மக்கள்.

ஒருமுறை, வேடன் ஒருவன் அடர்ந்த வனமாக இருந்த இந்த மலைப் பகுதியில் கிழங்கை அகழ்ந்து எடுப்பதற்காக இரும்புக் கம்பியால் தோண்ட... திடீரென்று அதிலிருந்து ரத்தம் வந்தது. வேடுவன், ஊர் மக்களிடம் அதுபற்றிக் கூற, மக்கள் அந்த இடத்தில் மேலும் தோண்டிப் பார்த்தார்கள். அங்கே அழகிய சிவலிங்கத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது. அதை, மலை உச்சியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்கள். இரும்புக் கம்பியால் காயம் ஏற்பட்டதால், அந்தச் சிவலிங்க திருமேனிக்கு ஆரம்ப காலத்தில் வெந்நீர் கொண்டே அபிஷேகம் செய்தனர். அந்த நடைமுறை இன்றளவும் இங்கே தொடர்கிறது!

பொதுவாக, கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்களைக் காண முடியாது. ஆனால், இங்கு அந்த அற்புதக் காட்சியைக் கண்டு நாம் பரவசம் அடையலாம். இங்கு மட்டும் எப்படி ஒரே கருவறையில் 2 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன?

முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன், பெரிய அளவில் கோயில் கட்ட விரும்பினான். கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் காலம் நெருங்கிய நேரத்தில், கோயிலுக்குள் இருந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனி திடீரென்று மாயமாய் மறைந்துபோனது. மனம் வருந்திய மன்னன், காசி விஸ்வநாதர் விக்கிரகத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்தான். கும்பாபிஷேகம் செய்த நாளன்று, திடீரென்று அந்த விக்கிரகத்துக்கு அருகில் இன்னொரு லிங்கம் சுயம்புவாக- தானாகத் தோன்றியிருந்தது. நடந்தது எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணிய மன்னனும் ஊர் மக்களும் அதிசயித்துப் போனார்கள்.

இப்படித்தான் இரட்டை சிவலிங்கங்கள் இங்கே வந்தன. தவிர, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீசண்டீஸ்வரர், ஏழுகன்னியர், தென்முகக் கடவுள் ஆகிய தெய்வங்களும் இங்கே தனிச் சந்நிதி கொண்டுள்ளனர்.

மலை உச்சியில் இறைத் திருவுருவங்களை தரிசித்துவிட்டுக் கீழே இறங்கும் வழியில், அன்னை பார்வதிதேவி சிவனாரை நினைத்து தவம் இருந்ததாக கூறப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்கே... தேவியின் திருப்பாதங்களைத் தரிசிக்கிறோம். மலையின் அடிவாரத்தில் ஸ்ரீகோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் ஆலயமும் உள்ளது.

தவிர, கடைத்தெரு பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர், மாரியம்மன், முத்தாலம்மன், திரௌபதியம்மன், காளியம்மன், கங்கையம்மன், அய்யனார், ஆஞ்சநேயர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, கன்னிமார் ஆகிய தெய்வங்களும் இந்த ஊரில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.

தெய்வீக மணம் கமழும் இந்த ஆடி மாதத்தில் நீங்களும் தேவிகாபுரம் வந்து, இந்தத் தெய்வங்களை எல்லாம் தரிசித்து இறையருளைப் பெற்றுச் செல்லலாமே!

- படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு