Published:Updated:

கல்யாண மாலை தருவாள்!

ஆடி மாதம் அருள் தரிசனம்...

கல்யாண மாலை தருவாள்!
கல்யாண மாலை தருவாள்!

துரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது பரவை கிராமம். இங்கே, வருவோர்க்கு இல்லையென்று சொல்லாத கருணைத் தாயென அருள்பாலித்து வருகிறாள் ஸ்ரீமுத்துநாயகி அம்மன்.

ஒருகாலத்தில் செழித்துக் கிடந்த விவசாய பூமி இது. ஒருநாள், நிலத்துக்குச் சொந்தக்காரர் கலப்பையைப் பூட்டி ஏர் உழுது கொண்டிருந்தார் இங்கே! ஓரிடத்தில்... பூமியில் பட்டதும், அங்கிருந்து கலப்பை நகரவே இல்லை. அதேநேரம், அந்த இடத்தில் இருந்து குபுக்கென்று ரத்தம் பீய்ச்சி அடித்தது. அந்த விவசாயி பதறிப் போய், மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, ஊர்மக்கள் அங்கே கூடினார்கள். மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசனின் உத்தரவுப்படி, ரத்தம் வந்த இடத்தை படைவீரர்கள் தோண்டினர். அந்த இடத்தில் இருந்து, அழகே உருவெனக் கொண்டு அம்மனின் திருவிக்கிரகம் வெளிப்பட்டது. அதைக் கண்டு அங்கிருந்த பலர், மருள் வந்து ஆடினர். பிறகு அந்த இடத்திலேயே அம்மனின் திருவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறிய அளவில் கோயில் கட்டி வழிபடப்பட்டது.

கல்யாண மாலை தருவாள்!

இந்தத் தலத்து அம்மனின் திருநாமம் - ஸ்ரீமுத்துநாயகி அம்மன். எட்டு திருக்கரங்களுடன், காலில் அசுரனை மிதித்தபடி காட்சி தரும் அம்மனிடம் வந்து கண்ணீர் விட்டு முறையிட்டால்... நம் எல்லா இன்னல்களையும் நீக்கி நம்மைக் காத்தருள்வாள் தேவி எனப் பூரிப்புடன் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள்.

வழக்கில் நீதி கிடைக்காமல் அல்லல்படு பவர்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்திருக் கும் தம்பதிகள், எதிரிகளின் தொல்லையால் தவித்து மருகுபவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு விளக்கேற்றி, வழிபட்டால்... வழக்கில் வெற்றி கிடைக்கும்; பிரிந்த தம்பதி விரைவில் சேருவார்கள்; எதிரிகள் தொல்லை பொடிப்பொடியாகும் என்பது ஐதீகம்!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மதுரையின் பல இடங்களில் இருந்தும் பரவை முத்துநாயகியைத் தரிசிக்க... இங்கு வந்து செல்கின்றனர். ஆடி மாதம் வந்துவிட்டால் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் எனப் பரவை கிராமமே களைகட்டியிருக்கும். சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என வெள்ளிக் கவசத்தில் காட்சி தரும் அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும்!

##~##
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், தங்கக் கவசத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிப்பது ரொம்பவே சிறப்பு என்கின்றனர், பக்தர்கள். அந்த நாளில்... இங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!

புரட்டாசி மாதத்தில், முத்துநாயகி அம்மனுக்குத் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனைத் தரிசிக்க, பரவையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இங்கு வந்து அம்மனைத் தரிசித்துச் செல்வது வழக்கம்.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்துபவர்கள் முத்துநாயகி அம்மனுக்கு விரதம் இருந்து, எலுமிச்சை மாலை அணிவித்து வழிபாடு செய்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்!

- ரா.அண்ணாமலை
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு