பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
'வ
ரம் கொடுப்பது யாரோ... வரம் பெறுவது யாரோ... இடையில் நீயென்ன பூசாரி?’ என்று கிராமத்தில் பழமொழி ஒன்று சொல்வார்கள். இந்தப் பழமொழி எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... சுக்கிராச்சார்யருக்கு நன்றாகவே பொருந்தும்!

பின்னே என்ன... ஸ்ரீமகாவிஷ்ணு தானம் வாங்குவதற்காக வாமன அவதாரம் எடுத்து வந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி தானம் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். இது இரண்டு பேருக்கும் உள்ள உடன்பாடு. 'சரி... மூன்றடி மண்தானே, எடுத்துக்கொள்!’ என்று வாமனனிடம் மகாபலிச் சக்கரவர்த்தி சொல்லிவிட்டார். வந்திருப்பது திருமால் என்பது... பாவம், மகாபலிக்குத் தெரியாது!

ஆனால், சுக்கிராச்சார்யருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? திருமாலின் எண்ணத்தை அறிந்துகொண்ட சுக்கிராச்சார்யர் உடனே வண்டாக மாறினார். தானம் கொடுக்கும்போது தண்ணீர் விட்டுத்தான் தத்தம் கொடுக்கவேண்டும். கெண்டியில் இருந்து தண்ணீர் வரும் வழியை அடைத்துவிட்டால், தத்தம் எப்படிச் செய்யமுடியும், தானம் எவ்வாறு வழங்கமுடியும் என்று நினைத்த சுக்கிராச்சார்யர், வண்டாக மாறினார்; கெண்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் துளையை அடைத்தவாறு புகுந்துகொண்டார்.

ஆலயம் தேடுவோம்!

அவ்வளவுதான்... கெண்டியை எத்தனை முறை கவிழ்த்தும் தண்ணீர் வரவே இல்லை. சுக்கிராச்சார்யரின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட திருமால், கையில் இருந்த தர்ப்பைப் புல்லால் துளை வழியே குத்தினார். தர்ப்பையின் நுனி, வண்டின் கண்ணில்பட... சுக்கிராச்சார்யரின் பார்வை பறிபோனது!

பிறகு, மகாவிஷ்ணு விஸ்வரூபமெடுத்து, தானம் பெறுவதற்காக இரண்டு அடிகளை எடுத்து வைத்த பின்பு, மூன்றாவது அடிக்கு இடமில்லாது போயிற்று. அந்த மூன்றாவது அடியைத் தன் சிரசில் வைக்குமாறு மகாபலி வேண்ட, அவ்விதமே செய்து அவரை ஆட்கொண்டு அருளினார் மகாவிஷ்ணு.

பார்வையை இழந்த சுக்கிராச்சார்யர், 'அடியேனின் பிழையை மன்னித்துவிடுங்கள், ஸ்வாமி! இழந்த பார்வையைத் தந்தருளுங்கள்’ என வேண்டினார். உடனே திருமால், ''பூலோகத்தில் வெள்ளி நிலவென இரவிலும் வெளிச்சத்துடன் திகழும் தலத்தில், ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கியிருந்து, சிவபெருமானைத் தொழுது வா! பார்வை கிடைக்கப் பெறுவாய்'' என அருளினார்.

அதன்படி, காடு- மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஊர் ஊராக வந்தவர், தனது ஞானதிருஷ்டியால் திருவெள்ளியங்குடி எனும் தலத்தில் சந்திரனின் பிரகாசத்தை உணர்ந்தார். அங்கே... திருக்குளம் ஒன்றை உருவாக்கினார். சிவபெருமானை சிவலிங்கத் திருமேனியில் ஸ்தாபித்தார். தீர்த்தக் குளத்தில் தினமும் நீராடிவிட்டு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். காலையும் மாலையும் அனைத்து அனுஷ்டானங்களையும் குறையறச் செய்தார். இதில் மகிழ்ந்த சிவபெருமான், 48-வது நாளில் சுக்கிராச்சார்யருக்கு கண்ணொளி வழங்கி அருளினார்.

அதே நேரம்... திருமாலின் ஆலயத்தில் உள்ள வைகுண்ட வாசலிலும் தீபமேற்றி வழிபட்டு வந்தார் சுக்கிராச்சார்யர். எனவே, இன்றைக்கும் இங்கேயுள்ள பெருமாள் கோயிலில் தீபமேற்றி வழிபட்டால், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும் என்பது ஐதீகம்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருவெள்ளியங்குடி. மிகச் சிறிய இந்தக் கிராமத்தில்தான் சைவத்துக்கும் வைணவத்துக்குமான இரண்டு ஆலயங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.

இந்தக் கிராமத்தில் உள்ள சைவ ஆலயத்தின் நிலைமைதான் மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது. இங்கே... ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசோழீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீசௌந்தர்ய நாயகி. சோழ தேசத்தின் கலைநுட்பங்களைப் பறைசாற்றும் வகையிலான ஆலயமாக அமைந்திருக்கிறது இது. ஆனால், அத்தனை அழகையும் இப்போது பார்க்கமுடியவில்லை. அப்படியே சிதைந்து, பெயர்ந்துவிட்டது!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

அதேபோல், சாந்நித்தியம் நிறைந்த இந்தக் கோயிலில், சௌந்தர்யத்தைக் காணோம். சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக வழிபாடுகளே இல்லாமல், பக்தர்கள் உள்ளே சென்று தரிசிப்பதற்கு முக்கியமான விக்கிரகங்களும் இல்லாமல், சில காலத்துக்கு முன்பு வரையிலும் முள்ளும் புதருமாகக் கிடந்த ஆலயம் இது! இன்றைக்கு அன்பர்கள் பலரின் முயற்சியால், ஸ்ரீசௌந்தர்ய நாயகி திருப்பணி கைங்கர்ய சபா எனும் கமிட்டி அமைக்கப்பட்டு, திருப்பணிகள் மெள்ள மெள்ள நடந்தேறி வருகின்றன.

''இந்தக் கோயில்ல, கும்பாபிஷேகம் கடைசியா எப்ப நடந்துச்சுன்னே தெரியலை. ரொம்ப வருஷமா கோயிலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமா, முட்புதர்களோட இருந்துச்சு கோயில். இங்கே வந்து வேண்டிக்கிட்டா, பிரிந்த தம்பதி ஒண்ணு சேருவாங்க; கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்; சந்ததி சிறக்கும்; வம்சம் விருத்தி அடையும்னெல்லாம் சொல்றாங்க. இந்தக் கோயிலுக்குச் சீக்கிரமே நல்லது நடந்து, நாங்க எல்லாம் தினமும் வந்து வழிபடுற அளவுக்குப் பொலிவு பெறணும்'' என்று ஏக்கத்துடன் சொல்கின்றனர் ஊர்மக்கள்.

சுக்கிராச்சார்யர் உருவாக்கிய தீர்த்தக் குளம், சுக்கிர தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் தீர்த்தக் குளத்தில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து, ஸ்ரீசோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார் சுக்கிராச்சார்யர். அவருக்குக் கண்ணொளி தந்த ஆலயத்தைக் கண்ணால் பார்க்கவே முடியாத வகையில் பரிதாபமாக இருப்பது, வேதனை இல்லையா? கண்ணொளி தரும் ஆலயம், இருளில் மூழ்கிக் கிடக்கலாமா?

ஆலயம் தேடுவோம்!

காஞ்சி மகா பெரியவா, ஓர் ஆடி மாதத்தில் இங்கு வந்து ஒரு மண்டலம் தங்கி, தன் அனுஷ்டானங்களைச் செய்திருக்கிறாராம்; இங்கேயுள்ள ஸ்ரீசோழீஸ்வரருக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட்டுள்ளாராம்!

ஆலயம் தேடுவோம்!

அதேபோல், அருகில் உள்ள பெருமாள் கோயிலில், ஸ்ரீகோலவிழி ராமர் திருச்சந்நிதியில் சுக்கிராச்சார்யர் ஏற்றி வைத்த தீபம், அணையா தீபமாக, இன்றைக்கும் எரிந்துகொண்டே இருப்பதாக ஐதீகம்! அகோபில ஜீயர் சுவாமிகள் இங்கு வந்து, சில நாட்கள் தங்கி, திருமாலை திவ்வியமாக தரிசித்து, வணங்கியிருக்கிறார்.

இத்தனைப் பெருமைகள் கொண்ட இந்தத் தலத்தின் சிவாலயம், இடிபாடுகளுடன் இருக்கலாமா? எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் கோயிலின் சுவர்களும் கதவுகளும் இருந்தால், நாட்டில் சுபிட்சம் எப்படி நிலவும்?

ஒரு காலத்தில் மகா சிவராத்திரியும் மாத சிவராத்திரியும் சிறப்புறக் கொண்டாடப்பட்ட கோயில்..., திருக்கார்த்திகையும் திருவாதிரையும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஆலயம்... பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என ஊரே களைகட்டிய திருவிழாக்கள் என்று கோலாகலமாக இருந்த ஆலயம், இன்றைக்குக் கும்மிருட்டில், வழிபாடுகள், பிரார்த்தனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் என எதுவுமே இல்லாமல் இருப்பதை நினைக்க நினைக்க... நெஞ்சமே அடைத்துப் போகிறது!

சுக்கிர வழிபாடு செய்த சிவாலயம், சுபிட்சமுறுவதற்கு நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம். அந்தச் சோழீஸ்வரரின் அருளும் சுக்கிரனின் அருளும் நமக்குக் கிடைக்கட்டும். ஸ்ரீசௌந்தர்யநாயகி குடிகொண்டிருக்கும் ஆலயப் பணியில் பங்கெடுத்தால், நம் வீட்டில் சௌந்தர்யம் பெருகும் என்பது உறுதி!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு