Published:Updated:

பிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்!

ஆடி மாதம் அருள் தரிசனம்...

பிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்!
பிரசாத வளையல் அணிந்தால்... பிள்ளை பேறு உண்டாகும்!

சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மேற்கு மாம்பலம், ஒருகாலத்தில் விளை நிலங்கள் சூழ்ந்திருந்த விவசாய பூமியாக இருந்தது என்றால், நம்புவீர்களா?

ஆமாம்... பச்சைப் பசேலென வயல்களால் நிரம்பியிருந்த மேற்கு மாம்பலம் பகுதியை, பொன் விளையும் பூமியாக்கி, ஊரையே செழிக்கச் செய்தவள் என்று ஏரிக்கரை பகுதியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமுத்தாலம்மனைப் போற்றிக் கொண்டாடு கின்றனர், மக்கள்!

சென்னை மேற்கு மாம்பலத்தையட்டி அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்தாலம்மன். ஆரம்ப காலத்தில் ஊரின் எல்லையில், விளைநிலங்களுக்கு நடுவில், காவல் தெய்வமாக இருந்த அம்மன் இவள். கால ஓட்டத்தில், கிராமங்கள் நகரங்களாகவும் நகரங்கள் பெருநகரங்களாகவும் மாறிய வேளையில்... எப்போதும் போல் இந்தப் பகுதி மக்களுக்கும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கும் அருள்மழை பொழிவதையே குறிக்கோளாகக் கொண்டு, கோயில் கொண்டிருக்கிறாள், தேவி!  

கோயிலுக்குக் கோபுரம் இல்லை. ஆனால் மேற்கு மாம்பலம் மட்டுமின்றி சென்னை முழுவதும் முத்தாலம்மனின் புகழ், நன்றாகப் பரவியுள்ளது. கருவறையில்... அம்மனின் கழுத்து வரை யிலான திருமேனி. அதன் பின்னே, நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடி, ஐந்து தலை நாகத்தைக் குடையெனக் கொண்டு வீற்றிருக்கிற திருமேனியைப் பார்க்கும்போதே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்!  

உள்ளே நுழைந்ததும் ஸ்ரீகணபதியும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

##~##
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் விசேஷங்கள் என அமர்க்களப்படுமாம், ஆலயம். நான்காவது ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ்வார்த்தல் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பு பூஜைகள் உண்டு என்றாலும் ஆடிப் பூர நன்னாளில், அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்புத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்களாம்! அந்த நாளில், சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பிரார்த்த னைக்காக வந்து, கை நிறைய வளையல்களை அம்மனுக்கு வாங்கி வருவார்கள். அந்த வளையல்களை அம்மனுக்கு அணிவித்துவிட்டு, அந்த வளையல்களை வேண்டுதலுக்கு வந்த பெண்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். பிரசாத வளையலை அணிந்து கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்; சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்! பிள்ளை பாக்கியம் வேண்டும் பெண்களுக்கு, முளைப் பயறுப் பிரசாதம் வழங்குகின்றனர்.

இந்த முளைக்கட்டிய பயறு பிரசாதத்தை, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் பக்தர்கள் பெற்று அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்கள் வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து அம்மனை வழிபடுவது இங்கே சிறப்பு!

       - சா.வடிவரசு
படங்கள்: க.கோ.ஆனந்த்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு