Published:Updated:

மாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..!

ஆடி மாதம் அருள் தரிசனம்...

பிரீமியம் ஸ்டோரி
மாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..!
##~##
தி
ருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது குடவாசல். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீரணங்குடி ஸ்ரீபுற்று மாரியம்மன் திருக்கோயில்.

முன்னொரு காலத்தில், நரசிங்கம்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி, கீரணங்குடிக்குத் திருமணமாகி வந்தாளாம். அவளைப் பார்த்ததும் ஊர்மக்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டு, 'அம்மனாட்டம் எவ்ளோ அழகா இருக்கா; கண்ல ஒளி மின்னுது பாருங்க...’ என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போனார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுச் சென்றால், அன்றைய நாள் மிக இனிமையான நாளாகக் கழியும் என்றும், 'போன வேலை நல்லபடியா முடிஞ்சுச்சு’ என்றும் ஒவ்வொருவரும் பாராட்டிப் பேசினார்கள்.

ஒருநாள்... அந்தப் பெண்ணுக்கு திடீரென அம்மை நோய் வந்தது. வீட்டைவிட்டு எங்கும் செல்லாமல், உள்ளேயே படுத்துக் கிடந்தாள். அவளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அந்தக் கிராமமே தவித்தது. இந்த நிலையில் ஒருநாள்... அவள் இறந்துவிட, வீட்டு வாசல் முன்பு திரண்ட ஊர் மக்கள் கதறினர்.  'இவ இருந்த வரை ஊர்ல எல்லாமே நல்ல விதமாவே நடந்துச்சு. இனி என்ன ஆகுமோ!’ என்று வருந்தினர்.

சில காலம் கழித்து... கீரணங் குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விளைநிலத்தில் உழுது கொண்டிருந்த போது, பூமியில் ஏதோ ஒன்று இடறித் தள்ளவே... அங்கிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த... அங்கே அம்மனின் விக்கிரகத் திருமேனி! 'இந்த அம்பாளின் முகத்தைப் பார்த்தியா..! சில வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஊர்ல குடி வந்த பொண்ணு மாதிரியே முகம், சிரிப்பு, கண்கள் எல்லாம் இருக்கு பாரு!’ என்று வியப்போடு சொல்லிச் சொல்லி மகிழ்ந்த கிராம மக்கள், அந்த இடத்திலேயே அம்மனைப் பிரதிஷ்டை செய்து, கோயிலும் எழுப்பினர். புற்று போல் இருந்த மேட்டில் இருந்து விக்கிரகம் கிடைத்ததால், ஸ்ரீபுற்று மாரியம்மன் என்றே திருநாமம் சூட்டி வழிபட ஆரம்பித்தார்கள். இங்கே, பரிவார தெய்வங்களான ஸ்ரீகருப்பன், ஸ்ரீகழுவடியான், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியாச்சி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

மாவிளக்கு ஏற்றினால்... மழலை வரம் தருவாள்..!

பங்குனித் திருவிழா இங்கு விசேஷம்! அப்போது, அம்மன் திருவீதியுலாவாக வருவாள். பிறகு, அப்படியே நரசிங்கம்பேட்டைக்குச் சென்று திரும்புவாள். ஆவணி மாதத்தில், காத்தவராய சுவாமியின் சரித விழா நடைபெறும். ஆடி மாதம் வந்துவிட்டால், தினந்தோறும் திருவிழாதான்!

திருமணம் ஆகாத பெண்கள், பச்சரிசி மற்றும் சர்க்கரை கலந்து படையலிட்டு, மஞ்சள் சரடை (கயிறு) கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி விட்டு ஸ்ரீபுற்று மாரியம்மனைப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரன் கைகூடும்; ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து, வயிற்றில் மாவிளக்கு ஏற்றி வழிபட, விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்கின்றனர் பெண்கள்!

விழாக்களின்போது, ஊர்மக்கள் மொத்தமாக விரதம் மேற்கொள்வது இந்தக் கோயிலின் சிறப்பு. அந்தக் காலகட்டங்களில், கல்யாணம்- காது குத்து போன்ற வீட்டு விசேஷங்களைச் செய்யமாட்டார்கள். பாயில் படுக்கமாட்டார்கள். விழாக் காலங்களில், வெளியூர்க்காரர்கள் இங்கு தங்க அனுமதியில்லை. உள்ளூர்க்காரர்களும் வெளியூரிலும் தங்குவதில்லை.

தீராத நோயால் அவதிப் படுபவர்கள், மரணப் படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோர் கோழி மற்றும் ஆடு தருவதாக நேர்ந்து கொள்கிறார்கள். அவர்களது பிரார்த்தனையும் விரைவில் பலிக்கிறது. ''பிறந்தது முதல் ஏதேனும் நோய் வந்து தாக்கி அழுதுகொண்டே இருக்கும் குழந்தை யைக் கோயிலுக்கு அழைத்து வந்து, தொட்டில் கட்டிப் பிராகார வலம் வந்து, அம்மனின் சந்நிதியில் வைத்து விட்டு, எடுத்துச் சென்றால் போதும்... பிறகு, குழந்தை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வளரும்'' என்கிறார் பாஸ்கர குருக்கள்.  

             - மா.நந்தினி
படங்கள்: அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு