Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

Published:Updated:
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

றைவனுடைய படைப்பில் உருவத்தில் பெரியது யானை; சிறியது எறும்பு. யானை முதல் எறும்பு ஈறாக சொல்லப்பட்ட பற்பல உயிர்களும் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளதை அருளாளர்களது பக்தி இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அதன்படி, யானை வழிபட்ட தலம்- திருவானைக்கா; எறும்பு வழிபட்ட தலம்- திருஎறும்பியூர். இரண்டு திருத்தலங்களுமே திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளன. இவற்றில் நாம் இங்கே தரிசிக்கப் போகும் பாலசந்த்ர விநாயகர், திருஎறும்பியூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

'திருவெறும்பூர்’ என்று தற்காலத்தில் அழைக்கப்படும் இந்தத் தலம் திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்த இந்தக் கோயிலில் இறைவன் 'எறும்பீசர்’ என்றும், அம்பிகை 'நறுங்குழல் நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சரி... இந்தத் தலத்தில் அருளும் விநாயகருக்கு பாலசந்த்ர விநாயகர் என்று பெயர் வந்தது எப்படி?

ஸ்ரீவிநாயகர் தமது வாகனமான மூஷிகத்தின் மேல் ஏறி அனைத்து உலகங்களி லும் ஆனந்தமாக வலம் வருவது வழக்கம். அப்படி ஒருமுறை சந்திர லோகத்துக்குச் சென்றார். சந்திரனுக்கு எப்போதுமே தன்னுடைய அழகைப் பற்றி அதிக கர்வம் உண்டு. அழகான முகம் கொண்டவர்களை 'பூரண சந்திரனைப் போல’, 'பௌர்ணமி நிலவு போல’ என்று நாம் வர்ணிப்போம் அல்லவா? அதனால் சந்திரனுக்கு கர்வம் தலைக்கேறி, தன்னைத்தானே மெச்சிக் கொள்ளத் தொடங்கினான். அந்தக் காரணத்தால் மூஷிகத்தின் மேலேறி வந்த விநாயகரைக் கண்டதும், அவரது முகம் சந்திரனுக்கு விகாரமாகத் தோன்றியது.

''இதென்ன அழகில்லாத தும்பிக்கை! முறம் மாதிரி காது! பானை போன்ற வயிறு! (குட்டையான) கூழைக்கால்!'' என்று விநாயகரைப் பார்த்துப் பரிகாசம் செய்து, கேலியாகச் சிரித்தான் சந்திரன். விநாயகருக்குக் கடும் கோபம் வந்தது. தன்னை அவமதித்துவிட்டானே என்பதற்காக அல்ல; தான் மட்டுமே அழகு என்கிற ஆணவம் அவனிடம் ஒட்டியிருந்ததால்!

''அடேய் சந்திரா! நீ வெண்மை நிறுத்துடன் குளிர்ச்சியாக இருக்கின்றாய்! உன்னைக் கவிஞர்கள் ஓஹோ என்று பாடிப் புகழ்வதால் உனக்குக் கர்வம் தலைக்கேறிவிட்டது. உனக்குத் தெரியுமா? உன்னுடைய வெளுப்பு நிறம் உன் சொந்தச் சரக்கு அல்ல; சூரிய வெளிச்சத்தை இரவல் வாங்கிக் கொண்டல்லவா நீ பளபளக்கிறாய்! அந்த வெளிச்சம் படாத உன் உடலின் பல பாகங்கள் சந்திர மண்டத்திலே ஆங்காங்கே கறுப்பாக- அசிங்கமாக இருக்கின்றன என்பதை மறந்துவிட்டாயா?

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

அதுமட்டுமல்ல; உன் குணத்திலும் உனக்குக் களங்கம் உண்டு. உன் 27மனைவியருள் ரோகிணியிடம் மட்டுமே நீ பிரியத்துடன் இருக்கிறாய்; மற்றவர்களை வெறுக்கிறாய். அதனால் உன் மாமனார் தட்சனின் சாபம் ஏற்பட்டுத் தேய்ந்து போனாய்! ஆனால், உன் மீது பரிவு காட்டி, உன்னை அந்த மூன்றாம் பிறை ரூபத்திலேயே தமது தலையில் சூடிக்கொண்டவர் எமது தந்தை சர்வேஸ்வரன். அப்படிச் செய்ததன் மூலம், நீ முற்றிலும் தேய்ந்து மறைந்து போகாமல் வளரும்படி செய்தாரே... அதை மறந்துவிட்டாயா? இன்று 'மிகவும் அழகாக இருக்கிறோம்’ என்று கர்வப்படும் உன்னை, இனிமேல் எவர் ஒருவர் பார்த்தாலும் அவர்களுக்குக் களங்கம் ஏற்படட்டும். உன்னைப் பார்ப்பவர்களுக்கு அபவாதம் (வீண் பழி) உண்டாகட்டும்!'' என்று சபித்தார் விநாயகர்.

அந்தச் சாபத்தால், தன்னை இனிமேல் யாரும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்களே என்ற அவமானம் ஒருபுறமும், அப்படியே தப்பித்தவறி பார்த்துவிட்டால் பிறகு வீண் பழிக்கு ஆளாகித் திட்டித் தீர்ப்பார்களே என்கிற பயம் இன்னொரு புறமும் சேர்ந்து சந்திரனை வேதனைக்கு உள்ளாக்கியது. அதனால் யார் கண்ணிலும் படாமல், கடலின் அடியில் போய் ஒளிந்துகொண்டான்.

அதன் பாதிப்பு பூலோகத்தில் நிறையவே எதிரொலித்தது. இரவில் சந்திரன் இல்லாமல் உலக மக்கள் எல்லோரும் துன்பமடைந்தனர். மூலிகைகள் சந்திரனது ஒளியால் வளர்பவை அல்லவா? அதனால் நிலா இல்லாமல் அவை வாடிப்போயின. மூலிகைகள் கிடைக்காததால் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் நோய்கள் பெருகின. பால் நிலவு இல்லாததால் காதலர்கள் வருந்தினர். கவிஞர்களும் வேதனைப்பட்டனர். இதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டுமே என்று முனிவர்களும் தேவர்களும் யோசித்து பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.

''மகா கணபதி கொடுத்த சாபத்துக்கு நான் எப்படி பரிகாரம் செய்ய முடியும்? அது அவரது தந்தை சிவபெருமானாலும் முடியாதது ஆயிற்றே! எனவே, சாபம் கொடுத்தவரிடமே சென்று, அவர் காலில் வீழ்ந்து வேண்டுங்கள். அவருக்கு உகந்த தினமான சதுர்த்தியில் விரதமிருந்து விசேஷ பூஜை செய்யுங்கள். அவருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, அப்பம், தேங்காய், அவல், பொரி, பழங்கள் முதலான அனைத்தையும் நிவேதனம் செய்து பிரார்த்தியுங்கள். நிச்சயம் விநாயகர் அருள் செய்வார்'' என்று பிரம்ம தேவர், முனிவர்களிடம் அறிவுறுத்தினார்.

அதன்படி விநாயகரை பூஜித்து வழிபட்டார்கள் தேவர்கள். கடலுக்கு அடியில் சென்று சந்திரன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனுக்கு உபதேசித்தனர். சந்திரன் தனது தவற்றை உணர்ந்தான். விநாயகரைப் பணிவோடு வழிபடத் தொடங்கினான். கருணையின் வடிவமான கணபதி, சந்திரனின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார். சந்திரனைப் பார்க்கிறவர்கள் வீண் பழிக்கு ஆளாகவேண்டும் என்ற சாபத்தை நீக்கினார். எனினும், எந்தவொரு காரணத்துக்காகவும் மீண்டும் அவன் கர்வப்படக்கூடாது என்பதற்காக சிறிய நிபந்தனை ஒன்றையும் விதித்தார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

சந்திரன் தனது அழகுக்காக அகம்பாவம் கொண்டது போல வித்தை, செல்வம், அதிகாரம் முதலானவற்றுக்கு யார் கர்வம் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களால் அவமதிக்கப்படும் நிலைக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதை உலக மக்கள் உணர வேண்டும். இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் வகையில், வளர்பிறை (சுக்லபட்ச) சதுர்த்திகளில் மட்டும் எவரும் சந்திரனைப் பார்க்கக் கூடாது.

மீறினால் வீண் பழிக்கு ஆளாக வேண்டி வரும் என்று கட்டளையிட்டார் விநாயகர் (அதனால்தான் 4-ஆம் பிறைச் சந்திரனைப் பார்க்கக்கூடாது என்ற வழக்கம் ஏற்பட்டது). மேலும், சுக்ல சதுர்த்தி என்பது விநாயகருக்குத் தொடர்புடைய நாள் என்பதை சந்திரனுக்கு நினைவுகூரும் வகையிலும் இது அமைந்தது.

அதேநேரம், இதைவிட மிகச்சிறந்த பேரருளை சந்திரனுக்கு வழங்கவும் செய்தார் விநாயகர். அது... அந்த பிறைச் சந்திரனைத் தமது கீரிடத்தில் சூடிக் கொண்டதுதான்!

சிவபிரான், பார்வதிதேவி ஆகியோ ருக்கு சந்திர கலை உண்டு. அதுபோல விநாயகரும் சந்திரனைச் சூடி 'பால சந்த்ரன்’ என்று பெயர் பெற்றார். 'பால’ என்றால் குழந்தை என்று பொருள் அல்ல; வடமொழியில் உள்ள நான்காவது 'பா’ என்ற எழுத்தைப் போட்டு உச்சரிக்க வேண்டும். 'பாலம்’ என்றால் நெற்றியின் மேலே உள்ள இடம்; நடுவே வகிர்த்த முடியின் ஒரு பக்கம். அதில் சந்திரனைத் தரித்திருப்பவர் பாலசந்த்ரன். இவருக்கு 'தலையில் ஒரு பக்கம் சந்திரனைச் சூடிக்கொண்டவர்’ என்றும் பொருள். பொறுத்தருளும் குணத்தைக் காட்டும் பெயர்தான் பாலசந்த்ரன். தம்மைப் பரிகாசம் செய்த சந்திரனை மன்னித்து, அவன்மீது பரிவுகொண்டு, தமது தலையில் சூடிக்கொண்டதுதான் அந்த கணபதியின் கருணையின் எல்லை!

அவர் அருளும் திருஎறும்பியூருக்கு நீங்களும் வந்து வழிபட்டால், வேண்டிய வரம் தருவார் அந்த வள்ளல்!

பூமேவும் ஒரு கொம்பன் என்றதிருப்
பேரென்றும் பொலியக் கோடு
நாமேவும் ஆம்பல் முகத்தவுண னோடும்
சமர்புரிந்த ஞான்று மன்றிப்
பாமேவு பாரதம்கை யான்எழுதும்
அஞ்ஞான்றும் பரிவி னேந்தும்
காமேவும் எறும்பியூர்ப் பாலசந்திர
விநாயகனைக் கருதி வாழ்வாம்!

(திருஎறும்பியூர் தலபுராணம்)

- பிள்ளையார் வருவார்....
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism