Published:Updated:

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

Published:Updated:
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தொ
ண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ என்பது பழமொழி. இத்தகைய திருநாட்டில் 'உத்தம நகரம்’ என்று புகழப்பட்டது காஞ்சி மாநகர். 'நகரேஷ§ காஞ்சி’ - நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம் என்பார் காளிதாசர். கற்றார் தொழும் காஞ்சி என்பதற்கிணங்க, பல்லவர் காலத்தில் இங்கு பெரிய பல்கலைக்கழகம் சிறந்து விளங்கியது.

'காந்தக் கல்லும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர்பெறு காஞ்சிப்பதி’ என்று, காஞ்சி மாநகரைத் திருப்புகழில் போற்றுவார் அருணகிரியார். 'காந்தமும் இரும்பு ஊசியும் ஒன்றோடொன்று இழுபட்டுச் சேர்வதுபோல, ஆசிரியரும் மாணவனும் ஒருவரோடு ஒருவர் மனம் ஒருமித்து நூல்களை ஆய்ந்து தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய மாநகரம்தான் காஞ்சிப்பதி’ என்பது இதற்குப் பொருள்.

இத்தகைய பெருமை பெற்ற காஞ்சி மாநகர் என்னும் நங்கையின் முகம் போன்று விளங்குவது முருகப்பெருமான் அருள்பாலிக்கும் குமரக் கோட்டம்! ஒருகாலத்தில் இங்கு தினமும் பக்தியுடனும் சிரத்தையுடனும் இறைவனுக்கு அபிஷேக- அர்ச்சனை, வழிபாடுகளை மனம், மொழி, மெய்களால் மிகச் சிறப்பாகச் செய்து வந்தார் ஆதிசைவ குலத்தில் பிறந்த காளத்தியப்ப சிவாச்சார்யர் என்னும் பண்பாளர். இவரும் இவரது மனைவியும் இல்லற வாழ்க்கை இனிதே நடத்திவரும் நாளில், மகப்பேறு வேண்டி குமரக் கோட்ட இறைவனை வேண்டித் தவமிருந்தனர். குகப் பெருமான் அருளால், அவர்கள் ஓர் அழகான மகனைப் பெற்றனர். குழந்தையை குமரக் கோட்டம் கோயிலுக்கு எடுத்துச் சென்று, முருகன் சந்நிதி முன்பு கிடத்தி, 'கச்சியப்பர்’ என்று பெயரிட்டனர்.

குழந்தை கச்சியப்பர் நன்கு வளர்ந்து, இளமையிலேயே வடமொழி, தென் மொழிகளில் நன்கு தேர்ச்சி பெறத் தொடங்கினார். உரிய வயதில், காளத்தியப்பர் தம் மகனுக்கு சமய தீட்சை செய்து வைத்து, குமரக் கோட்டம் பூஜைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். கச்சியப்பரும் கோயில் பூஜை திருத்தொண்டை ஏற்று, குமரக்கோட்டத்து இறைவனைத் தினமும் அன்பாக பூஜித்து வந்தார்.

ஒருநாள், அர்த்தசாம பூஜை செய்து முடித்தபிறகு அன்பர்களுக்குப் பிரசாதம் வழங்கி, கந்தப் பெருமான் நினைவோடு கண்துயில் கொண்டார் கச்சியப்பர். அவரது கனவில் கந்தவேள் தோன்றினார். வடமொழி ஸ்காந்தபுராணத்தில், சங்கர சம்ஹிதை- சிவ ரகசிய காண்டத்தில் உள்ள தனது அருளாடலைக் கந்தபுராணமாக தமிழில் பாட கச்சியப்பருக்கு அருள் புரிந்தார். 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்று முதலடியை எடுத்துக் கொடுத்துப் பாடும் பணியைத் தொடங்கிவைத்தார்.

கனவு கலைந்ததும் கண்விழித்து எழுந்த கச்சியப்பர் பக்திப் பரவசத்தில் உள்ளம் நெகிழ்ந்தார். ''கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!'' என்று ஆனந்தப் பெருக்குடன் குகப் பெருமானின் பேரருள் திறத்தினை வியந்து போற்றினார். கந்தனின் பெருமைகளை சிந்திக்கத் தொடங்கினார்.

கந்தவேள் அடியெடுத்துக் கொடுத்தபடி பாடத்தொடங்கி, தினம் நூறு பாடல்கள் வீதம் ஏட்டில் எழுதி, அதை இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் குமரக்கோட்டப் பெருமானது திருவடியில் வைத்துவிட்டு வீடு திரும்புவார். மறுநாள் கோயிலைத் திறந்து ஏட்டுச்சுவடியை எடுத்து மேலும் எழுத முற்படும்போது, முன்பு எழுதியிருந்த பாடல்களில் சில இடங்களில் அந்த முருகப் பெருமானே தமது திருக்கரத்தால் சில திருத்தங்களை செய்திருக் கவும் கண்டு அதிசயமும் ஆனந்தமும் கொண்டார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

இவ்வாறு கந்தபுராணம் முழுமையும் ஆறு காண்டங் களாக அதாவது... உற்பத்தி, அசுர, மகேந்திர, யுத்த, தேவ, தட்ச காண்டங்களாக- 10,345 பாடல்களாகப் பாடி நிறைவு செய்தார் (ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தை அவரின் மாணவரான குகனேரியப்ப நாவலர் என்பவர் பாடியுள்ளார்).

கந்தபுராணம்தான் இயற்றியாகிவிட்டதே! அதை அரங்கேற்றம் செய்ய நாள் குறித்தனர் காஞ்சிவாழ் பெருமக்கள். குமரக்கோட்டம் கோயிலில் சித்தாந்த செல்வர்களும், சிவனடியார்களும், தமிழ்ப் புலவர்களும், செல்வந்தர்களும், பொதுமக்களும் கூடினர். கச்சியப்பர் கந்தபெருமானை வழிபட்டு அரங்கேற்றத்தைத் தொடங்கினார். ''திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்...'' என்று, இறைவன் அடியெடுத்துக் கொடுத்த முதலடியைப் படித்து, திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்துளான் என்று மொழி பிரித்து விளக்க முற்பட்டார்.

முத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்!

உடனே அங்கிருந்த புலவர் ஒருவர் எழுந்து, 'திகழ் தசம்’ என்பதை 'திகடசம்’ என்று சொல்வதற்கு இலக்கண விதியில்லை; ஆனால் தாங்கள் இவ்வாறு கூறுகிறீர்களே?'' என்றார். அதற்கு கச்சியப்பர், ''தாங்கள் கூறியது உண்மை. ஆனாலும், இந்த முதலடி யான் பாடியதன்று. குமரக்கடவுளே அடியெடுத்துக் கொடுத்ததாகும்!'' என்றார்.

''அப்படியென்றால், அந்த முருகப் பெருமானே எங்களுக்குக் காட்சியளித்து, 'இந்த பாடல் வரி நான் அருளியதுதான். இதனை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறட்டும்; ஒப்புக் கொள்கிறோம். அல்லது, எந்த இலக்கண நூலிலேனும் இவ்வாறு புணர்தற்கு விதியிருத்தல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும், இந்தப் புராணத்தை அரங்கேற்ற விடமாட்டோம்'' என்று தீர்மானமாகக் கூறினார் அந்தப் புலவர். 'இரண்டில் ஒன்று நாளை நடக்கும்’ என்று கச்சியப்பரும் தீர்மானமாகச் சொன்னார்.

கந்தபுராணத்தின் அரங்கேற்றம் தடைப்பட்டது கச்சியப்பருக்கு வருத்தமாக இருந்தது. உணவு உட்கொள்ளப் பிடிக்கவில்லை. நேராக முருகப்பெருமான் சந்நிதி முன்பு போய் நின்றார். ''ஏதும் அறியாத என்னை அம்பலத்தில் ஏறுமாறு செய்வித்த எந்தை நீவிர், நாளை சபையில் இதற்கு வழி செய்தல் வேண்டும்'' என்று உருகி வேண்டினார். அன்றிரவு குமரவேள் கச்சியப்பர் கனவில் காட்சியளித்தார். ''அன்பனே! வருந்துதல் வேண்டாம்! சோழநாட்டில் 'வீரசோழியம்’ என்ற பெயருடைய இலக்கண நூல் ஒன்று இருக்கிறது. அதில் 'திகழ் தசம்’ என்பது 'திகடசம்’ என்று புணர்தற்கு விதி உள்ளதற்கான ஆதாரம் உள்ளது. அந்த நூலில் சந்திப்படலம் 18-ஆம் பாடலில் இந்த விதியைக் காணலாம். அந்த நாட்டுப் புலவர் அந்த நூலை நாளை சபையில் கொண்டு வந்து, அந்த விதியை எல்லோருக்கும் காட்டுவார். கவலையற்க!'' என்று கூறி ஆசீர்வதித்தார்.

மறுநாள் அவை கூடியது. ஒரு புலவர் கையில் ஓலைச் சுவடியுடன் அங்கு தோன்றினார். ''யாம் சோழ நாட்டில் உள்ளோம். எமது கையில் இருப்பது 'வீரசோழியம்’ என்ற பெயருடைய இலக்கண நூலாகும்'' என்று அதனைப் பற்றி விளக்கினார். பிறகு அந்த இலக்கணச் சுவடியைக் கச்சியப்பர் கையில் கொடுத்து, ''இப்போது கந்தபுராணம் அரங்கேற்றம் செய்ய தடை நீங்கியதா?'' என்று கேட்டுவிட்டு மறைந்தார். புலவராக வந்தவர் முருகப்பெருமானே என்பதை கச்சியப்ப சிவாச்சார்யரும் மற்ற புலவர்களும் உணர்ந்தனர். குகப் பெருமானின் பேரருள் திறத்தை எண்ணி இன்பக் கடலில் மூழ்கினார் கச்சியப்பர். அவையில் உள்ள புலவர்கள் அனைவரும் கச்சியப்பரின் பக்தியையும் பெருமையையும் எண்ணி அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அதன்பிறகு அனைவரும் கந்தபுராணத்தை அரங்கேற்றம் செய்யுமாறு கச்சியப்பரைப் பணிந்து வேண்டினர். அதன்படி கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு முதலியன வழங்கப்பட்டன.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுபெற இருந்த நிலையில், கச்சியப்ப சிவாச்சார்யரை யானை தந்தத்தால் செய்யப்பட்ட சிவிகையில் மேலேற்றி, காஞ்சி நகர வீதிகளில் வலம் வரச் செய்து, பல பரிசுகளையும் அளித்துப் பாராட்டி மகிழ்ந்தனர் பொதுமக்கள்.

கச்சியப்பர் கந்தபுராணத்தைத் தமிழில் பாடி அரங்கேற்றம் செய்தபின், அதன் பெருமை தமிழகம் முழுவதும் பரவியது. பலரும் அதனைப் படித்து, முருகப்பெருமானின் திருவருட் பெருமைகளை அறிந்து இன்புற்றனர். ஒவ்வொரு சைவர் வீட்டிலும் கந்தபுராண நூல் பூஜிக்கப்பெற்று படிக்கப்பெற்றது.

கந்த சஷ்டியின் ஆறு நாட்களும் கந்த புராணத்தை அவசியம் படிப்பது என்ற வழக்கமும் உண்டாயிற்று. ஊர்கள்தோறும் கந்தபுராண பிரசங்கங்கள் நடைபெற்றன. மக்கள் சமய உணர்வு நிரம்பப் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். 'கந்தபுராணம் நம் சொந்த புராணம், கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை’ என்றெல்லாம் போற்றிப் புகழும் வகையில், அற்புதமான சைவப் பேரிலக்கியமாக இன்றும் திகழ்கிறது கந்தபுராணம். கச்சியப்பரின் மாணவர்கள் இருவர். ஒருவர், கோனேரியப்பர். மற்றவர் ஞானவரோதயர். காஞ்சி குமரக்கோட்டத்தில் கச்சியப்ப சிவாச்சார்யர் திருவுருவச் சிலையை இப்போது சென்றாலும் தரிசிக்கலாம். அந்தக் கோயிலின் வெளிப் பிராகாரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் உள்ளது.

செகதலம் கழிக்க மேலாஞ்
சிவநெறி தழைக்க அன்று
திகடசக் கரம்என் றோர்சீர்
திகழடி எடுத்துத் தந்து
குகனவன் தன்பு ராணம்
தமிழினில் கூ(று) என்றோதப்
பகருநல் கச்சியப்பர் பாத
பங்கயங்கள் வாழி!

- தணிகை மணி

- அடியார் வருவார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism