ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
News
தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
யோத்தியின் அடிவானில் மிதந்த பௌர்ணமி நிலவு, வழக்கத்தைவிட பெரிதாய்... மிகப் பெரிதாய் விஸ்வரூபம் எடுத்திருந்தது!

சரயு நதிக்கரை தென்றலையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, அந்த நகர் முழுக்க தண்ணொளி பாய்ச்சிக் கொண்டிருக்கும் அந்தப் பால்நிலவை பார்த்தோமானால்... காலையில் பகலவனிடம் பெற்றுக்கொண்ட ஒளி போதாது, இன்னும் ஒளிகூட வேண்டுமென்று சூரியனைத் தேடி வந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றும்.

அதுசரி, பூவுலகில் ஏது சூரியன்?!

அதோ... அரண்மனை மேல் மாடத்தில் சூரிய வம்சத்தின் இளஞ்சூரியன் ஸ்ரீராமன் நிற்கிறானே? அவன் அருகில் சென்றாலே போதுமே! இந்த பூமியை யுகயுகத்துக்கும் தருமம் எனும் அமிர்தத் தாரையால் குளிப்பாட்ட தேவையான ஒளி கிடைக்குமே!

ஆனால் பாவம்... அந்த பால்நிலவை முந்திக்கொண்டது ஒரு பெண் நிலவு!

ஆமாம்... ஸ்ரீராம சூரியனின் அணுக்கம் வேண்டி சீதை நிலவு வந்து சேர்ந்தது. சூரியனும் நிலவும் சேர்ந்தால் விளைவது, இருள் நிறைந்த அமாவாசை என்றுதானே ஞான நூல்கள் விவரிக்கின்றன. ஆனால் இங்கே... இந்தச் சூரியனும் சந்திரனும் இணைந்ததால் இன்னும் இன்னும் பேரொளியால் ஜொலித்தது பூமி!

காரணம் இன்றி காரியம் இல்லை.

அறம்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்(து) அறைந்த நீதித்
திறம்தெரிந்(து) உலகம் பூரணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்(து) உக நூறித் தக்கோர் இடர் துடைத்(து)ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

- என்று ஸ்ரீராமனின் அவதார காரணத்தை-

ரகசியத்தை கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடி வைக்கவில்லையா? அத்தகு அவதார காரியத்தை தங்குதடையின்றி நிறைவேற்ற, ஸ்ரீராம பரம்பொருள் நம் அன்னையையும் துணை சேர்த்துக்கொண்டது.

இனி, சீதை உடல் எனில் ஸ்ரீராமன் உயிர். அவள் ஸ்தூலம் எனில் அவன் சூட்சுமம்.

அவள் செயல் எனில், அவனே அதன் ஆக்கம்! ஆக, மூவுலகுக்கும் உத்தமமானதொரு தீர்வைத் தரப்போகும் காரணச் சம்பவங்கள் ஒவ்வொன்றாகத் துவங்கப் போகின்றன.

அதற்குள் நாம் பூமியின் புனிதம் கூட்டும் சில அருள் தலங்களைத் தரிசித்துத் திரும்புவோம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

காஞ்சிபுரம்-வேலூர் மார்க்கத்தில் காவேரிபாக்கத்தில் உள்ளது ஸ்ரீஅழகியராமர் திருக்கோயில். கோயில் ஸ்ரீராமனின் பெயரில் வழங்கப்பட்டாலும், மூலவர் ஸ்ரீவரதராஜனாக அருள்கிறார். கோயிலுக்குள் நுழைந்ததும் முதல் சந்நிதியாக அமைந்திருப்பது ஸ்ரீராமனின் சந்நிதி. வலப்பக்கத்தில் சீதாதேவியுடன், மறுபுறம் தம்பி லட்சுமணனுடன் அருள்கிறார் ஸ்ரீராமன். இவரின் உத்ஸவ விக்கிரகம் சிறிய உருவில் அமைந்துள்ளது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

மூலவர் ஸ்ரீராமர், சீதாதேவியை தன் மடிமீது அமர வைத்திருக்கும் திருக்கோலத்தை எருமைவெட்டிப் பாளையம் எனும் இடத்தில் தரிசிக்கலாம். மகிஷன் எனும் அசுரனை வீழ்த்திய தலமாதலால் இப்படியரு பெயர் வந்ததாம் இந்த ஊருக்கு. இங்கே அம்மன் கோயிலைத் தவிர, சிறிய குன்றின்மீது யோகராமர் கோயிலும் உண்டு. இந்த ஆலயத்தில்தான் மூலவர் சாளக்ராம திருமேனியராக, சீதாதேவியை தன் மடியின் மீது அமர்த்திய வண்ணம் அருள்கிறார். மேலும், சீதாதேவியின் விருப்பத்துக்கு இணங்க காகாசுரனை மன்னித்து ஸ்ரீராமன் அவனுக்கு உயிர்பிச்சை அளித்ததும் இங்குதான் என்கிறார்கள். சென்னை- பாரிமுனையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் (செங்குன்றத்தை அடுத்து) உள்ளது காரனோடை. இங்கிருந்து ஆட்டோ மூலம் எருமை வெட்டிப்பாளையத்தை அடையலாம்.

ம்பெருமான் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நான்கு திருக்கோலங்களில் அருளும் மிக அற்புதமான க்ஷேத்திரம் திருநீர்மலை. இந்தத் திருக் கோயிலில் ஸ்ரீகல்யாண ராமரைத் தரிசிக்கலாம்.

இந்தத் திவ்வியதேசத்தைத் தரிசிக்க வந்த வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து, ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம். அதனால்தான் என்னவோ இன்றும் எண்ணற்ற பக்தர்கள் தங்களின் திருமணத்தை நடத்திக்கொள்ள இந்தத் திருக் கோயிலை நாடி வருகின்றனர் போலும். சென்னை பல்லாவரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.

ஸ்ரீராமன் என்றதும் பக்தர்களின் நினைவுக்கு வரும் ஸ்ரீராம ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது கும்பகோணம் ஸ்ரீராமஸ்வாமி ஆலயம். கி.பி.1600-1645 வரை தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னன் அமைத்த அற்புதமான ஆலயம் இது.

சிற்பக் கலைத்திறன் நிறைந்த மண்டபங்களும், சந்நிதிகளும் நிரம்பிய இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய கருவறையில் ஸ்ரீராம ஸ்வாமியுடன் சீதை அமர்ந்திருக்கிறார். அருகில் குடை பிடித்தபடி பரதன், வணங்கிய நிலையில் லட்சுமணன், வெண்சாமரம் வீசும் சத்ருக்கனன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். எதிரில் ஆஞ்சநேயர், ஒரு கையில் வீணையுடனும் மறுகையில் ராமாயணச் சுவடியுடனும் அருள்வது விசேஷம்.

தஞ்சை ரகுநாத நாயக்கன் சிறந்த ராமபக்தன். தினமும் பண்டிதர்களைக் கொண்டு ராமாயணம் படிக்கச் செய்து மெய்ம்மறந்து கேட்பானாம். பின்னர், அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே வெற்றிலை மடித்துக் கொடுத்து உபசரிப்பானாம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

ராம பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவனது வாழ்விலும் ராமாயணம் போலவே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கூனியின் சூழ்ச்சியால் ராமருக்குத் துன்பம் விளைந்தது போன்றே, விஜயநகரப் பேரரசிலும் ஜக்கராயன் என்பவனால் கலகம் ஏற்பட்டு ராஜ குடும்பத்தினர் பலர் அழிந்தனர். அப்போது தஞ்சை நாயக்க மன்னர்கள், விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்டு ஆட்சி செலுத்தி வந்தனர். எனவே, மன்னன் தஞ்சை ரகுநாத நாயக்கனும் விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்து கலகத்தில் இருந்து அந்த அரச குலத்தோரைக் காக்க முற்பட்டான்.

விஜயநகரப் பேரரசின் விசுவாசியான யாசம நாயக்கர் என்னும் அமைச்சர், மாறுவேடம் பூண்டு சிறையில் இருந்த விஜயநகரப் பேரரசின் வாரிசான ராமன் எனும் கைக்குழந்தையை அழுக்குத் துணி மூட்டையில் கட்டிக் கடத்தி வந்து வளர்த்து ஆளாக்கினார். பின்னர் முறைப்படி அவனை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரியணையில் அமர்த்த முயற்சி எடுத்தார். 'இதை முறையாக நிறைவேற்றக் கூடியவன் ரகுநாத நாயக்கனே’ என்று தீர்மானித்த யாசம நாயக்கர், ரகுநாதனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

அறமே தனது மூச்செனக் கொண்ட ரகுநாத நாயக்கன், ஜக்கராயனை போரில் வென்று விஜய நகர வாரிசான ராமனுக்கு அரியணை கிடைக்கச் செய்தான் (வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகிலுள்ள தோகூரில் நிகழ்ந்ததாம்). அதன்பின் கும்பகோணத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி, ராமராயன் என்ற பெயரோடு அரியணை ஏற உதவினான் ரகுநாதன்.

ராமராயனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்த அதே இடத்தில், தான் வணங்கும் ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேக கோலத்தில் அழகிய ஆலயம் கட்டினான் ரகுநாதன். அதுவே இன்று கும்பகோணத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ராம சாமி திருக்கோயில் என்பது வரலாற்று தகவல். ஸ்ரீராம பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆலயம் இது.

- அவதாரம் தொடரும்...
படங்கள்: எம்.என்.ஸ்ரீநிவாஸன்