ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
தி
ருவோணம் நட்சத்திரத்தை, வேதம் 'ச்ரோணா’ என்று அழைக்கும். தமிழ் மொழியின் இயல்புக்கு ஏற்ப... ச், ர ஆகிய எழுத்துக்கள் சொல்லின் துவக்கத்தில் இருப்பதை தவிர்த்து, மிஞ்சிய 'ஓ’-எழுத்துடன் சேர்ந்து திருவோணம் உருவானது. 'ஆர்த்ரா’ என்ற சொல்லில் 'ர்’ கழண்டு 'த்’-க்கு பிறகு, 'இ’ சேர்த்து திருவாதிரை உருவானது என்று தமிழ்ப் புலவர்கள் விளக்கம் தருவார்கள்.

திருவோணம் நட்சத்திரத்தின் தேவதை விஷ்ணு. எங்கும் பரவியிருக்கும் பரம்பொருள் என்ற விளக்கமும் உண்டு. 'விஷ§- வ்யாப்தௌ’ என்ற தாதுவில் இருந்து வெளிவந்த சொல். இயற்கையில் தோன்றிய உயிரினங்களுக்குப் பாதுகாவலன் என்கிற பொருளும் உண்டு. உத்திராடம்- திருவோணத்துக்கு இடையே ஒரு நட்சத்திரம் உண்டு. அதற்கு 'அபிஜித்’ என்று பெயர் (அபிஜித் நாம நஷத்திரம் உபரிஷ்டாத் அஷாடானாம் அவஸ்தாத் ச்ரோணாயை). அதன் தேவதை பிரம்மா (ப்ரம்மனேஸ்வாஹாபிஜிதே ஸ்வாஹா). அபிஜித்தில் இணைந்து உயிரினங்களைப் படைப்பவன் பிரம்மன். படைத்த உயிரினங்களைக் காக்க அடுத்த நட்சத்திரத்துக்கு, அதாவது திருவோணத்துக்கு தேவதையாகக் காக்கும் கடவுள் விஷ்ணு இருப்பது தகும்.

திருவோணத்தில் பிறந்தவன் 9 கிரகங்களின் தசைகளை 120 வருடங்கள் சுவைத்த பிறகு, திருவாதிரையில் ருத்ரன் ஆட்கொள்கிறான் என்கிற தகவலும் பொருத்தமாக இருக்கிறது. ஒரு காலத்தில் உத்தராயனம் ஆரம்பமாகும் நட்சத்திரமாகவும் இருந்தது உண்டு. மகாபலியை அடக்கிய வாமனனை போற்றுவதற்கு... ஹஸ்தம் முதல் 10 நாட்கள் விஷ்ணுவை போற்றுவார்கள் கேரள மக்கள். விஷ்ணுவின் நட்சத்திரமான திருவோணத்துக்கு தனிச்சிறப்பை அளிப்பர். மண்ணையும் விண்ணையும் படைத்து, அதில் இணைந்து உலகுக்கும் உயிரினங்களுக்கும் அருள் பாலிக்கிறார் என்ற தகவல் வேதத்தில் உண்டு (த்வாபூமீ ஜயைன் தேவ ஏசு:... உருக்ரமஸ்ய...).

'ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்கள்...’ என்ற புருஷசூக்த வர்ணனை, உலகம் அனைத்திலும் அவரது கண்காணிப்பை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது. 'மூன்றடி யில் மூவுலகையும் அளந்தவன்’ என்ற வேத விளக்கம்... அவரது பாத ஸ்பரிசம் அத்தனை இடங்களையும் இணைத்துக் கொண்டிருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் (இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதாநிததெ பதம்).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அழிவற்றது கர்மபலம். அதை அளிப்பவர் அவர். திருவோணத்துடன் இணைந் திருப்பதைக் கேட்டறிந்து, அவனை... 'குணாதி சயத்தில் உயர்ந்தவன், தனது ஒளியால் உலகத்துக்கு ஒளியூட்டுபவன், மக்களின் மூன்றுவித தாபங்களை (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்) அகற்றுபவன், எங்களைக் காப்பாற்ற எப்போதும் விழித்துக் கொண்டிருப்பவன். திருவோண உருவில் தென்படும் விஷ்ணு எங்களது ஹவிர் பாகத்தை ஏற்று (வேள்வியில் அளிக்கும் உணவை) அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (ச்ருண்வந்தி...).

இதன் ஆரம்ப தசையான சந்திர தசை 10 வருடங்கள் நீடிக்கும். ரோகிணிக்கும் அஸ்தத்துக்கும் அது பொருந்தும். தேய்ந்தும் வளர்ந்தும் செயல்படும் சந்திரனின் இயல்பு இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் தென்படும். தேய்பிறையிலும் ஒளி இருப்பதால், வாழ்க்கையில் மங்காத ஒளியைப் பெற்று விளங்குவார்கள். ராசிக்கு அதிபதி சனி கிரகமானாலும், அம்சகத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நால்வரின் இணைப்பு... விழித்துக் கொண்டு செயல்படுவது, பொருளாதாரத்தில் தன்னிறைவு, அறிவுத் திறனில் ஆராய்ந்து முடிவெடுப்பது, விளைவை மனதில் வாங்கிக் கொண்டு செயல்படுவது அத்தனையையும் இந்த நட்சத்திரத்தில் இணைந்தவனிடம் காணலாம் என்கிறது ஜோதிடம்.

சிறு வயதில் செவ்வாயின் சுறுசுறுப்பும், இளமையில் சுக்கிரன், புதன் ஆகியோரின் பொருளாதாரமும் அறிவாற்றலும்,  முதுமையில் சந்திரனின் மனோதிடமும் வாழ்க்கையை முழுமையாகச் சுவைக்க ஒத்துழைக்கும். கிரகங்களின் ஒத்துழைப்பும், வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அனுபவமும்... சுயநலத்தை பின்னுக்குத் தள்ளி, பொதுநலனில் மூழ்கடித்துப் பெருமையை பெருக்கும். சந்திரன், வடிவில் தேய்ந்தும் வளர்ந்தும் இருப்பான்; ஒளியில் நிறைந்திருப்பான். தேய்ந்த நிலையிலான வடிவிலும் ஒளி முழுமையாகப் பரவியிருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

சந்திரனை பரம்பொருளின் கண்ணாக குறிப்பிடும் புராணம் (சந்திர சூர்யைசை நேத்ரே...). பரம்பொருளின் மனதில் இருந்து வெளிவந்தவன் சந்திரன் என்கிறது வேதம் (சந்திரமா மனசோஜாத:). தேய்ந்தும் வளர்ந்தும் இருப்பது சந்திரனின் இயல்பு.

அது மனதிலும் தென்படுவதால், ஜோதிடம் சந்திரனை மனதுக்குக் காரகனாக ஏற்றுக் கொண்டது (மனஸ்துஹினகு....). மாறுபட்ட எண்ணக்குவியல்களின் இருப்பிடம் மனம், ஆன்மாவின் (சைதன்யம்) இணைப்பில் அதன் (எண்ணங்களின்) ஆட்சியும் வீழ்ச்சியும் நிகழ்வதால் மனம் தேய்தல், வளர்தல் இரண்டையும் சந்திக்கிறது. பருவகாலங்களின் மாற்றத்தை நடைமுறைப்படுத்தி, அதன் தாக்கத்தில் சிந்தனை மாற்றத்தை தோற்றுவிப்பவன் சந்திரன். எனவே, சிந்தனை மாற்றத்துக்கு காரணமாகிறான் (சந்திரமாஷட்ஹோதா ஸரிதூன் கல்பயாதி).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அமாவாசையில் சந்திரபலம் மிகவும் குன்றியிருப்பதால், மனப் பிணிகள் ஆக்கம் பெற்று அலைக்கழிக்கின்றன என்கிறது ஜோதிடம்; ஆயுர்வேதமும் ஆமோதிக்கும். மனத்தின் செயல்பாடு மனிதனின் தரத்தை வரையறுக்கும் (மனஏவமனுஷ்யாணம்..காரணம் பந்த மோஷயோ:). அவனது தசையை ஆரம்பத்தில் சந்திக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் மங்காத வாழ்க்கையை சுவைத்து மகிழ்வார்கள் என்று ஜோதிடம் சொல்லும்.

ராசிக்கு 4-ஆம் வீட்டுக்கு உடைய சந்திரன் உலகவியல் சுகங்களுக்கு பொறுப்பாளியாக இருப்ப தால், ராசி புருஷனின் கர்மத்தில் (பத்தில்) அமர்ந்து தனது வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதால், வாழ்வில் சறுக்கி விழாமல் நிமிர்ந்து நிற்பான் என்கிறது ஜோதிடம். சனி கர்மாதிபதியானதால் உழைப்பு உயர்வை அளித்துவிடும்.

செல்வச் சீமான், அறிஞன், மகிழ்வை அளிக்கும் மனைவி, உலகம் போற்றும் உத்தமன், அதாவது அவனிடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை உலகம் உற்றுநோக்கும். இத்தனை பெருமைகளையும் திருவோண நட்சத்திரத்தில் இணைந்தவனிடம் காணலாம் என்கிறது பிரஹத்ஸம்ஹிதை. செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோரது ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லாமல் இருந்தால், இன்னல்களையும் சந்திப்பான் என்கிறது ஜோதிடம். புயலுக்குப் பின் அமைதி போல், இன்னலுக்கு பிறகு இன்பமும் சேர்ந்துவிடும் என்கிற விளக்கமும் உண்டு. பிறப்பில் உயர்ந்தவன், செல்வச் சீமான், கொடையாளி, பிறருடன் இணைந்து செயல்படுபவன் செயல்திறனில் முதல்வன், ஆரோக்கியமான உடல்கட்டு, எதிரிகளை முறியடிப்பவன்... என்று இந்த நட்சத்திரத்தின் இணைப்பில் விளையும் குணாதிசயங்களை பட்டியலிடுகிறார் பராசரர். நான்கு பாதங்களுக்கும் நற்பலனைச் சொல்கிறார் வராஹமிஹிரர், பிருஹத்ஸம்ஹிதையில்.

தேவர்கள், வேதம் ஓதுபவர்களிடம் பக்தியுடனும் பண்புடனும் நடந்து கொள்பவன், அரசனுக்கு ஈடாக பெருமை பெறுவான், மக்களுக்கு தலைவனாக செயல்படுவான் என்கிறது ஜாதக பாரிஜாதம். தனது உழைப்பில் உயர்ந்தவன், சேமித்த செல்வத்தை முறைப்படி பயன்படுத்துபவன், தனது வீட்டைவிட்டு விலகி வேறு இடத்தில் வாழ்க்கையை நடத்து பவன், தாம்பத்திய வாழ்க்கையை சுவைத்து மகிழ்பவன், அன்பான மனைவி, அளவுக்கு மிஞ்சிய செலவு, உண்மையை உரைப்பவன், உற்றார்-உறவினர் தொடர்பு அற்றவன், பந்துக்களின் ஆதரவு அற்றவன், கடவுள் நம்பிக்கை ஆகியன இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறது ஜோதிடம்.

காலபுருஷனின் தொடைகளைச் சுட்டிக் காட்டும் ராசி இது. அதன் தரத்தை விளக்கும் 9 கிரகங்களில், திருவோணத்தின் நான்கு பாதங்களுக்கு அதிக பங்கு உண்டு. சனி, செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்களும் திருவோணத்தின் தகுதியை நிறைவு செய்ய ஒத்துழைக்கும். உழைப்புடன் இணைந்த சுறுசுறுப்பு காரியத்தில் வெற்றியை அளித்து, படிப்படியாக பொருளாதார முன்னேற்றம் கண்டு, தெளிவான சிந்தனையில் மனோதிடம் பெற்று, வாழ்வின் எல்லையைத் தொட்டுவிடுவான் என்கிறது ஜோதிடம். இவர்கள் தாறுமாறாக இருந்தால், விகிதா சாரப்படி பலனில் மாறுபாட்டைச் சந்தித்து முழு அமைதியை இழப்பவர்களும் உண்டு. பூர்வ ஜென்மத்தில் சேமித்த கர்மத்தின் அளவு கோளை வைத்து நிர்ணயம் செய்ய இயலும்.

மூன்று தாரைகளை உள்ளடக்கியது திருவோண நட்சத்திரம். மென்மையானதும் அல்ல; கடினமும் அல்ல. இந்த நட்சத்திரம் சர நட்சத்திரத்தில் அடங்கும். அசையும் பொருளின் மேன்மைக்கு இது உதவும். யானை, குதிரை போன்றவற்றைப் பராமரித்தல்,  பசுக்களை வளர்த்தல், பரோபகாரத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு இதன் இணைப்பு வெற்றி தரும் என்கிறார் பராசரர்.

திருவோணம் முதல் பாதத்தில் உதித்தவன் குறைந்த குழந்தைச் செல்வத்தைப் பெறுவான். கெட்டிக்காரனாகவும், சுறுசுறுப்பு மிக்கவனாகவும் இருப்பான். அதேநேரம், சண்டை - சச்சரவில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டு தவிப்பான்.

2-வதில் மெலிந்த உடல் வாகு, பெண்ணாசையில் திளைப்பவன், உடல் ஆரோக் கியம் இழந்தவன், ஆன்மிக சிந்தனையில் ஆழ்ந்தவன், நிறைய நண்பர்களைப் பெற்றவனாகத் திகழ்வான்.

3-ல் காமி போகி, ரோகி - மூன்றும் இருக்கும், செல்வத்தில் திளைப்பான், ஈவு-இரக்கமற்று, மறைமுக எதிர்ப்புடன் இருப்பான். 4-ல் கெட்டிக்காரனாகவும், அதேநேரம் பரஸ்த்ரீக மனமும் இருக்கும். கொடையாளி, செல்வச் சீமான், சாகுபடியில் செயல்பட்டுப் பெருமை அடைவான்... இப்படி, பாதங்களுக்கு மாறுபட்ட பலனைச் சொல்கிறது, பலசார சமுச்சயம்.

'விம் விஷ்ணவே நம:’ என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யவேண்டும். தத்விஷ்ணோ: பரம் பதம் என்கிற மந்திரம் ஓதி வழிபடலாம். 'சாந்தகாரம்’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபடலாம். 'ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லியும் வழிபடலாம்.

'இதம் விஷ்ணு: விசக்ரமே’ என்ற மந்திரத்தைச் சொல்லி, இரண்டு கைகளிலும் புஷ்பத்தை அள்ளி புஷ்பாஞ்ஜலி அளித்து, தண்டனிட்டு வணங்கலாம். 'யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்மஸம்ஸாரபந்தனாத் விமுச்யதெ நம: தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே’ - என்ற செய்யுளைச் சொல்லி 16 உபசாரங்கள் செய்யலாம். அல்லது 16 தடவை வணங்கி வழிபடலாம். நேரம் கிடைக்காத நிலையில் கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர ஹ்ருஷீகேச, பத்மநாப, தமோதர என்று சொல்லி வணங்கலாம். உள்ளம் உருகி நாமாவைச் சொன்னால் நன்மை பெருகும்.

- வழிபடுவோம்...