Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கோயிலுக்குப் போகணும், ஸ்வாமி தரிசனம் பண்ணணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனா, என் வாழ்க்கைல 'எப்படா இந்தக் கோயிலுக்குப் போவோம்’னு ஆசை ஆசையா காத்திருந்ததுன்னா, அது திருப்பட்டூருக்குத்தான்! இந்தக் கோயில் பத்தியும், இதன் ஸ்தல புராணங்கள் பத்தியும் படிக்கப் படிக்க... என் ஆசை அதிகரிச்சுக்கிட்டே இருந்துச்சு. அது நிறைவேறினப்ப கிடைச்ச மனநிறைவுக்கு ஈடு இணையே இல்லீங்க!'' என்று பூரிப்பு விலகாமல் சொல்கிறார் லலிதா ராமன். பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும், தற்போது இவர் வசிப்பது மும்பையில்.

''திருப்பட்டூர் தலத்தை எங்களுக்கு அடையாளம் காட்டினது சக்திவிகடன்தான்! ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும், தமிழ்நாட்டுக்குப் போகும்போது திருப்பட்டூருக்கும் நிச்சயம் போயே தீரணுங்கறதுல உறுதியா இருந்தோம், நானும் என் கணவர் கணபதிராமனும்! அதிலயும் குறிப்பா... தலையெழுத்தையே மாற்றி அருளும் பிரம்மாவின் திருமேனி பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பா இருந்துச்சு. 'விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ங்கற அற்புதமான வாசகமும் மனசை அந்தக் கோயில் திசைப் பக்கமே வைச்சிருந்துச்சு!'' என்கிறார் லலிதா.

##~##
அவரின் கணவர் கணபதிராமன் தொடர்ந்தார்... ''இந்தத் தருணத்துலதான், எங்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது. எங்க சொந்தக்காரர் ஒருத்தர் நல்லா ஜாதகம் பார்ப்பார். ஒருநாள்... அவர் எங்க பையனோட ஜாதகத்தைப் பார்த்துட்டுப் பலன்களைச் சொன்னார். அப்புறமா, அந்தப் புத்தகத்துல இருந்த லலிதாவோட ஜாதகத்தை எடுத்துப் பார்த்தார். அவர் முகத்துல சட்டுன்னு ஒரு இறுக்கம். 'சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு. உங்களுக்கு இப்ப கொஞ்சம் நேரம் சரியில்ல. வர மே மாசம் வரைக்கும் எதுவும் சொல்றதுக்கு இல்லை. வண்டி வாகனங்கள்ல போகும்போது, ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும்; பயணம் பண்ணும்போது மிகவும் கவனமா இருக்கணும்’னு லலிதாவை எச்சரிச்சார்.

இதைக் கேட்டதும் கலங்கிப் போயிட்டேன். எனக்குப் பேச்சே வரலை. ஆனாலும், எதையும் வெளிக்காட்டிக்காம, 'லலிதா எப்பவுமே ஜாக்கிரதையாத்தான் இருப்பா. அதனால தவிப்போ பயமோ தேவையே இல்லை’ன்னு சொல்லி சமாளிச்சேன்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

அப்புறம் நாலு நாள் கழிச்சு, 'நீ சொன்னபடி திருப்பட்டூருக்குப் போகணும்மா! எனக்கும் ஆசையா இருக்கு’ன்னு அவகிட்ட சொன்னேன். 'என்ன... திருப்பட்டூர் திருப்பட்டூர்னு நீங்களும் புலம்ப ஆரம்பிச்சிட்டீங்களா! கண்டிப்பா போயிடுவோம்’னு சொன்னா. இங்கிருந்தபடியே மனசுக்குள்ளே, 'அப்பா பிரம்மா..! என் மனைவிக்கு எதுவும் ஆகிடக்கூடாதுப்பா! நீதான் காப்பாத்தணும். உன் சந்நிதிக்கு வரேம்ப்பா!’ன்னு வேண்டிக்கிட்டேன்'' என்று தழுதழுப்புடன் விவரித்தார் கணபதிராமன்.

''அவர் சொன்ன நாலாம் நாள், எங்க அப்பாவோட பிறந்த நாள் பத்தின ஞாபகம் வந்துது. 'அட... அடுத்த மாசம் அப்பாவுக்குப் பிறந்த நாளாச்சே! அந்த நாள்ல, அவர் பக்கத்துல இருந்து, அவரை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கின மாதிரியும் ஆச்சு... அப்படியே நம்ம விருப்பப்படி திருப்பட்டூருக்கும் போயிட்டு வந்துடலாமே’னு தோணுச்சு. திருப்பட்டூர்ங்கற திருத்தலத்தின் மீது அளவுகடந்த ஆசை வந்ததுக்கும் ஈடுபாடு ஏற்பட்டதுக்கும் இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு'' என்று சொல்லி, ஆர்வத்தைத் தூண்டினார் லலிதா. சிறிது இடைவெளி விட்டு, அவரே தொடர்ந்தார்...

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''என் அப்பா பேரு முத்துகிருஷ்ணன். அவரோட அப்பா... அதாவது என் தாத்தா குப்புஸ்வாமி ஐயர், ஆன்மிகத்துல கரை கண்டவர். ஒருகட்டத்துல, சந்நியாசம் வாங்கிண்டுட்டார். ராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் இருக்கில்லையா... அங்கே எங்க தாத்தா குப்புஸ்வாமி ஐயரோட திருச்சமாதி இருக்கு. வருஷா வருஷம் அங்கே போய் பூஜையெல்லாம் பண்ணிட்டு வருவோம். இங்கே... திருச்சிக்குப் பக்கத்துல திருப்பட்டூர் கோயில்லயும் அதே போல ஒரு திருச்சமாதி இருக்குன்னு படிச்சதும், என்னவோ தெரியலை... அந்தத் தலத்தின் மேலே ஈடுபாடு அதிகமாயிடுச்சு. ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில்ல வியாக்ரபாதருக்கும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்ல பதஞ்சலி முனிவருக்குமான திருச்சமாதிகளைப்  படிக்கறப்பவும் பாக்கறப்பவும் அந்தக் கோயில் இப்படி இருக்குமா, அப்படி இருக்குமான்னு நான் கனவெல்லாம் கண்டிருக்கேன்'' என்று சிரித்தபடி சொல்கிறார் லலிதா.

''அப்பாவோட பிறந்த நாள் விழா முடிஞ்சதும், திருச்சிக்கு வந்தோம். டிராவல்ஸ் கார்ல திருப்பட்டூருக்குப் போனோம். முதல்ல... ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்குப் போனோம். அங்கே நடை சார்த்தியிருந்துது. 'என்னடா இது’ன்னு தவிச்சபடி காத்திருந்தோம். பக்கத்துல இருந்த வியாக்ரபாதர் உருவாக்கின தீர்த்தத்தையே இமை கொட்டாம பார்த்துக்கிட்டிருந்தோம். எடுத்து, தலையில தெளிச்சுக்கிட்டு, கண்கள்ல ஒத்திக்கிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரத்துல குருக்கள் வந்துட்டார்.

அவசரத்துலயும் பரபரப்புலயும் நாங்க வந்திருந்ததால, பூவோ பழமோ அர்ச்சனைத் தட்டோ எதுவும் வாங்காமலேயே வந்துட்டோம். 'என்னங்க அர்ச்சனை பண்ணணுமா?’னு அந்தக் குருக்கள் கேட்டதும்தான் ஓடிப் போய், எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து, அர்ச்சனை பண்ணினோம். வியாக்ரபாதர் சந்நிதியில விளக்கேத்தி, நமஸ்காரம் பண்ணி, பத்து நிமிஷம் கண் மூடி உட்கார்ந்திருந்தோம். மனசு கொஞ்சம் கொஞ்சமா லேசாக ஆரம்பிச்சதை நல்லா உணர முடிஞ்சுது!'' என்று கண்கள் விரியச் சொல்கிறார் லலிதா.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

உண்மைதான். லலிதாவைப் போன்றவர்கள் இந்த தெய்வீக உணர்வை அடைந்து சிலிர்த்து இருக்கிறார்கள். 'என்ன... என்ன... என் மனம் தக்கையானது போல் இருக்கிறதே, இது எப்படி?!’ என்று உள்ளுக்குள் கேட்டும் பதில் கிடைக்காமல் வியந்தபடி, ஒவ்வொரு முறையும் வந்து இந்தச் சந்நிதியில் அமர்ந்து, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அப்படி வரும்போதெல்லாம் ஸ்ரீவியாக்ரபாதரின் திருச் சமாதிக்கு வஸ்திரம் வாங்கி வந்து, சமாதிக்கு அணிவித்து, விளக்கேற்றி வழிபடுகிறார்கள். அதேபோல், தங்களுக்கு இயன்ற நாள்களில்... அது வியாழனோ வெள்ளியோ ஞாயிற்றுக் கிழமையோ... இங்கு வந்து திருச்சமாதிக்கு அருகில் அமர்ந்து, கண் மூடி தன்னுள் தன்னை தான் பார்க்கிற நிலையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசனம் பண்ணிட்டு, ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குப் போனோம். இங்கே... இந்த முறை அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டுத்தான் கோயிலுக்குள் நுழைஞ்சோம். ஸ்ரீபிரம்மா சந்நிதிக்கு முன்னாடி வந்து நின்னதும், மொத்த உடம்பும் தூக்கிப் போட ஆரம்பிச்சிருச்சு. அவ்வளவு சாந்நித்தியமான இடம் அது! அன்னிக்கு நல்ல கூட்டம் வேற! அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து, எல்லார் பெயர் நட்சத்திரத்தையும் சொல்லி, ஸ்ரீபிரம்மாகிட்ட மனமுருகி வேண்டிக்கிட்டேன். தீபாராதனை முடிஞ்சுது. என்னைவிட என் கணவர் முகத்துலதான் அப்படியரு நிம்மதி! 'என் மனைவிக்கு ஏதோ கண்டம் இருக்குன்னு சொல்றாங்க. நீதான் பார்த்துக்கணும்’னு வேண்டிக்கிட்டதா சொன்னார் அவர்.

அப்புறம், அர்ச்சனை பண்ணினவங்களுக் கெல்லாம் தட்டு கொண்டு வந்து கொடுக்கும் போது, எனக்கு மட்டும் தரலை. 'என்னடா’ன்னு யோசிச்சுக் கேட்டப்போ, 'அடடா... அர்ச்சனைத் தட்டே தராத யாரோ ஒருத்தங்க உங்க தட்டை தவறுதலா வாங்கிட்டுப் போயிட்டாங்க போல! இல்லேன்னா இங்கே ஒரு தட்டு மிஞ்சியிருக்கணுமே!’ன்னு சொல்லிட்டு, பிரம்மாவின் பாதத்திலேருந்து பூவையும் மஞ்சளையும் எடுத்துக் கொடுத்தாங்க.

இது சரியா- தப்பா, நடக்கறது நல்லதுக்காங்கற குழப்பத்தோடயே சந்நிதியை விட்டு வெளியே வரும்போது, யாரோ ஒருத்தர், 'உங்க விதியை, உங்க பாபத்தை வேற யாரோ வாங்கிட்டுப் போயிட்டாங்க. நீங்க நல்லா இருப்பீங்க’னு சொல்லிட்டு நிக்காமலயே போயிட்டார்.

இது அந்தத் தலத்தின் மகிமை! ஸ்ரீபிரம்மாவின் பேரருள். என் தாத்தாவும் முப்பாட்டனும் தேடித் தந்த ஜென்மக் கொடை. வேற என்ன சொல்றது?'' என்று சொல்லிக் கரகரவெனக் கண்ணீர் விட்டார் லலிதா ராமன்.

ஸ்ரீகுரு பிரம்மாவே... உனக்கு நமஸ்காரம்!

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism