

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'ஏம்பா! இந்த முறுக்கு கை படாம செய்ததா? நெய் படாம செய்ததா?' என்று அவர் கேட்க, பையனும் விடாமல், 'பெரியவங்களோட ஆயுளைக் கூட்டுறதுக்காக, இது பட்டர் ஆயில் குறைவா போட்டுச் செஞ்சது சார்!' என்றான். நான் சிரித்துவிட்டேன்!
பிறகு எழுந்து மெள்ள நடக்க ஆரம்பித்தோம். திடுமென, 'சிலை உருவாக்கும் பழக்கம் எப்படி வந்தது?' என்று கேட்டார் பரமு. உடனே நான், 'பழங் காலத்தில் சாதனை புரிந்த மன்னர்களுக்கும், போரில் வீரமரணம் எய்திய வீரர்களுக்கும் 'நடுகல்’ என்ற பெயரில் கல் தூண்களை நட்டு வைப்பார்கள்.
பிற்காலத்தில் அவையே உருவச் சிலைகளாக மாறியிருக்க வேண்டும். உலகெங்கிலும் இந்த வழக்கம் உண்டு. இதைத் தொடர்ந்தே கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள், தற்காலத்தில்... திரைப்பட உலகில் சாதித்த நடிகர்களுக்கும் சிலை வைக்கும் பழக்கம் தொடர்கிறது' என விளக்கினேன்.
'அதுசரி... இந்தக் கடற்கரையில் இவ்வளவு சிலைகள் எப்படி?' - பரமுவின் அடுத்த கேள்வி!
'பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தினார். அப்போதுதான் தமிழுக்கு உழைத்தவர்கள், தமிழறிஞர்கள் என அனைவருக்குமாக சிலை வைக்க ஏற்பாடு செய்தார்கள். அந்த சிலைப் பட்டியலில் அப்பர் சுவாமிகளின் பெயரும் இருந்ததைப் பார்த்துச் சற்றே பதற்றமடைந்த அண்ணா, 'இத்தகைய ஆன்மிகப் பெரியவர்கள், அனைவராலும் வழிபடத் தகுந்தவர்கள். இவரைப் போன் றோரின் சிலைகள் கோயில்களுக்குள் இருப்பதுதான் நலம். ஏனைய வணங்கத்தக்க பெரியோர்களின் சிலைகளை மட்டும் கடற்கரை யில் அமைக்கலாம்’ என்றாராம். அதன்பிறகு எழுந்தவையே இந்தச் சிலைகள்' என்றேன்.
தொடர்ந்து, தீவுத்திடலில் சர் தாமஸ் மன்றோ வின் சிலை முன்பாகப் போய் நின்றோம்.
'இந்தச் சிலையைப் பத்தி ஏதாவது கதை இருக்கா?' - ஆர்வமாய்க் கேட்டார் பரமு.
'இருக்கிறது. அயர்லாந்தில் பிறந்து, தமிழகத்தில் 47 ஆண்டு காலம் (1780-1827) உயர் பதவிகளில் பணியாற்றிய போர் வீரர் இவர். சென்னையின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம். இவரோட இந்தச் சிலை திறக்கப்பட்ட அன்று, இதைச் செய்த சிற்பியும் இறந்துவிட்டதாக ஒரு வரலாறு உண்டு.
இந்தச் சிலையை உற்றுப் பாருங்கள், குதிரையின் மீது ஏறுவதற்கான 'அங்கவடி’ (STIRRUP) இல்லாமலேயே சிலை செய்யப்பட்டுவிட்டதால், தன் பிழையை உணர்ந்த சிற்பி மனம் வருந்தி இறந்திருக்கலாம்' என நான் சொல்ல, 'அட, ஆமாம்!'' என்று வியந்த பரமு, 'இருந்தாலும் அந்தச் சிற்பியை எப்பவும் நினைக்கணும்; அவர் திறமையைப் போற்றணும்!' என்று சொல்லி முடிக்க, வந்து நின்ற பேருந்தில் நாங்கள் ஏறிக்கொண்டோம்.