Published:Updated:

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

கலகலப் பக்கம்!

Published:Updated:
கலகலப் பக்கம்!
கலகலப் பக்கம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரு
த்ராட்சப் பெரியப்பாவின் கிராமத்துக்குப் போவதென்றால், எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதன் பெயர் சிவ பிரேமி. அங்கு போனால், அந்தச் சுட்டிக் கிளியை நாள் பூரா பார்த்துக் கொண்டே இருப்பேன். 'சிவக் கண்ணு’ என்று பெரியப்பா கூப்பிட்டால், 'வந்துட்டேன்... வந்துட்டேன்’ என்று அது மழலையாய்க் குரல் கொடுக்கும்.

ருத்ராட்சப் பெரியப்பா, கோயில் ஒன்றில் பிரதம குருக்களாக இருந்தார். உடம்பில் எங்கெங்கே ஆபரணங்கள் அணியமுடியுமோ, அங்கெல்லாம் ஏதாவது ஒரு நகையை மாட்டிக்கொண்டு ஜொலிப்பார். போதாக்குறைக்கு, கழுத்து நிறைய விதவிதமான ருத்ராட்ச மாலைகள். 'இது அந்த சதஸில் தந்தது, இது பெரியவா தந்தது, இது நேபாளத்தில் வாங்கினது, இது வாரியார் சாமி தந்தது’ என்று ஒவ்வொரு மாலைக்கும் வரலாறு சொல்லிச் சிலிர்ப்பார். தவிர, பூஜை அலமாரியில் சின்னச் சின்ன பேழைகளில் அவர் சேகரித்து வைத்திருக்கும் அபூர்வ ருத்ராட்சங்களையும் காட்டி, ''இது த்ரிபாஹி. மிக அபூர்வம். இது கௌரி ருத்ராட்சம். இது கௌரி சங்கர ருத்ராட்சம்...'' என்று பெருமைப்படுவதில் சளைக்கமாட் டார். இத்தனைக்கும் மத்தியில், கிளி மீது அளவற்ற பாசம் அவருக்கு!

பெரியப்பா கழுத்தில் உள்ள ருத்ராட்ச மாலைகள் எனக்கு வியப்பூட்டும். ''ஒரு டஜனுக்கும் மேலே இருக்கும் போலிருக்கே, உங்களுக்குக் கழுத்து வலிக்காதா பெரி யப்பா?!'' என்று கேட்டால், ''சுமக்கிறது ஒரு சுகம்டா!'' என்பார்.

தான் அணிவது போதாதென்று தன் செல்லக் கிளியின் கழுத்திலும் குட்டிக் குட்டி ருத்ராட்ச மாலைகள் போட்டு வைத்திருப்பார். கடந்த முறை ஊருக்குச் சென்றபோது, ''அதனுடைய முகத்தைப் பார். புதுசா ஒரு ருத்ராட்ச மாலை அதன் கழுத்தில் போட்டிருக்கேனில்லையா... அந்தப் பெருமை பிடிபடவில்லை என்பது அதன் கண் ணிலேயே தெரிகிறதே, கவனித்தாயா?'' என்று கேட்டார்.

'தெரிகிறது, தெரிகிறது’ என்று சொல்லி வைத்தேன்.

பெரியப்பாவின் ஊருக்கு ஒருமுறை, சாந்தானந்த சுவாமிகள் வந்து முகாமிட்டிருந்தார். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தார் பெரியப்பா. சுவாமிகள் நுழைந்ததும், அந்த சிவக்கண்ணு கிளி, 'வாங்கோ வாங்கோ’ என்று கூவி வரவேற்றது (அப்படிப் பழக்கி வைத்திருந்தார்).

சுவாமிகள் கிளியைப் பார்த்துவிட்டு, ''அட! உன் கிளி கூட ருத்ராட்சம் போட்டுண்டிருக்கே! ருத்ராட்சப் பூனை தெரியும். ருத்ராட்சக் கிளியை இப்பத்தான் முதன்முதலா பார்க்கறேன்'' என்றார்.

ருத்ராட்சக் கிளி வீடெங்கும் தத்தித் தத்தி நடந்தபடியும், மெள்ளப் பறந்தபடியும் இருந்தது.

''நான் கிளியைக் கூண்டில் அடைக்கிறது இல்லை. ஆனாலும் அது பறந்து வெளியே போகறதில்லை'' என்று பெருமிதத்துடன் சொன்னார் பெரியப்பா.

''போகாது'' என்று சிரித்தார் சுவாமி. ''எப்படிப் போகும்? இத்தனை ருத்ராட்சங்கள் போட்டு, நீதான் அதைப் பறக்க ஒட்டாமல் கனம் பண்ணிட்டியே..! கிளிக்கு மட்டுமில்லடா, உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்'' என்றார்.

மின்சாரம் தாக்கினாற்போல் பெரியப்பா திகைத்தார். சுவாமிகளின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். 'மன்னிக்கணும் சுவாமி’ என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.

''உயிர்களுக்கு, அவை வாழ என்ன அத்தியாவசியமோ, அவற்றைக் கடவுள் தந்தே அனுப்புகிறார். அவற்றை மட்டும் அந்த உயிர் சுமந்தாலே போதும்- ஒரு பறவை தன் இரண்டு சிறகுகளைச் சுமப்பதுபோல! பாவங்கள் மட்டுமல்ல, புண்ணியங்களும் ஒரு வகைச் சுமையே! 'ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்’ என்கிறார் திருமூலர். ஆசைகளை அறுப்பது எப்படி? அதற்கு வள்ளுவர் ஓர் உபாயம் சொல்கிறார்...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

எப்படி உத்தேசமோ?'' என்று கேட்டுச் சிரித்தார் சுவாமிகள்.

பற்றுகளையெல்லாம் உதறுவதுபோல பெரியப்பாவின் முதுகும் உடம்பும் குலுங்கிக்கொண்டு இருந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism