மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்! - 9

ஞானப் பொக்கிஷம்! - 9

ஞானப் பொக்கிஷம்! - 9
ஞானப் பொக்கிஷம்! - 9
##~##
தா
யின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எப்படி நிகழ்கிறது? கரு உண்டாவதில் இருந்து, அது குழந்தையாகப் பிறக்கும் வரை தாயின் உடலுக்குள் நிகழ்வது என்ன?

தந்தையின் உடலில் இருந்து தோன்றிய விந்து, தாயின் கருப்பைக்குள் நுழையும்முன்... அந்த விந்துவில் இருக்கும் ஏராளமான உயிர் அணுக்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ஓடும். அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும்தான் வெற்றி பெற்று கருப்பைக்குள் நுழையும்.

அவ்வாறு நுழைந்த ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்னை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது, ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களைக் கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும்.

இந்தச் செயல் சரிவர நடைபெறாவிட்டால், கரு உண்டாகாது. இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும்.

இரண்டாவது மாதத்தில்... நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த  மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்னையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கரு நிலைபெற்றுவிடுகிறது.

மூன்றாவது மாதத்தில்... உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா? அதற்காக, அதுவரை வெளியேறிக் கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும். அதனால் கருப்பை வீங்கும்; வயிறு சற்றுப் பெருத்துப் புடைக்கும். சில நேரங்களில் மதநீரைத் தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்னையில் இருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது மாதமும் கரு நிலை பெற்று விடுகிறது.

நான்காவது மாதத்தில்... கருப்பையில் கரிய நிறத்தோடு மதநீர் சேருவதால், பெரும் இருளாக இருக்கும். அந்தப் பேரிருளுக்கும் தப்பி, கரு நிலைபெற்றுவிடுகிறது.

ஐந்தாவது மாதத்தில்... கருப்பையில் மதநீரும் இருளும் அதிகமாகப் பெருகுவதால், சிலருக்கு இந்தக் காலத்தில் கருச்சிதைவு உண்டாகும். அதிலிருந்தும் தப்பி, கரு நிலைபெற்றுவிடுகிறது.

ஆறாவது மாதத்தில்... மெள்ள மெள்ளக் கரு வளர்கிறது அல்லவா? அந்த வளர்ச்சியால், கருப்பையில் வளரும் கருவுக்கு நெருக்குதல் உண்டாகும். இந்த மாதத்தில்கூட பலருக்குக் கருச்சிதைவு உண்டாகும். அதிலிருந்தும் தப்பி, கரு நிலை பெற்றுவிடுகிறது.

ஏழாவது மாதத்தில்... தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை நன்கு வளர்ந்து எல்லா உறுப்புகளும் ஒன்று கூடி உருவாகி இருக்கும். அப்போது அதனுடைய கனம் (எடை) தாங்காமல் கருப்பை கிழிந்து, குழந்தை வெளிப்படுவதும் உண்டு. அந்த ஆபத்தில் இருந்தும் தப்பி, வெற்றிகரமாக கரு நிலை பெற்றுவிடுகிறது.

ஞானப் பொக்கிஷம்! - 9

8- 9 மாதங்களில்... வயிற்றுக்குள் குழந்தை அசைந்து வளைய வரும். 'இந்தாங்க... இங்க பாருங்க! உங்க புள்ள உதைக்கிறான்!’ என்று மனைவி சந்தோஷக் கூச்சல் போடுவது இந்த மாதங்களில்தான். ஆனால், அதற்கு அவளது உடல் இடம் கொடுக்க வேண்டுமே! குழந்தையின் சுமை தாங்காமல் தாய் கஷ்டப்படுவாள். வயிற்றுக்குள் வளைய வரும் குழந்தையும் துயரப்படும். அதில் இருந்தும் வெற்றிகரமாகத் தப்பிவிடுகிறது குழந்தை.

பத்தாவது மாதத்தில்... சொல்லவே வேண்டாம். எப்போது பிறக்கும்? எப்படிப் பிறக்கும்? தெரியாது. 'மழை பெய்யும் நேரமும் மகவு பிறக்கும் நேரமும் கடவுளுக்குத்தான் தெரியும்’ என்பார்கள். ஆயுத கேஸ், அவசர கேஸ், பனிக்குடம் உடைந்து போய்விட்டது என்றெல்லாம் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். அந்தப் பிரச்னைகளில் இருந்தும் தப்பி, வெற்றிகரமாகக் குழந்தை பிறந்துவிட்டது!

''நிறுத்துங்க... நிறுத்துங்க..! இது என்ன சக்தி விகடனா? டாக்டர் விகடனா? ஒருவேளை... டாக்டர் விகடனுக்குப் போகவேண்டிய பக்கங்கள், தவறுதலாக சக்தி விகடனுக்கு வந்துட்டுதா?'' என்று நீங்கள் பதறுவது தெரிகிறது. சந்தேகமே வேண்டாம்! சக்தி விகடனின் 'ஞானப் பொக்கிஷம்’ பகுதியைத்தான் நீங்கள் இப்போது படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

அற்புதமான இந்த 'ஸ்கேனிங்’ தகவல்கள் அனைத்தும் ஓர் ஆன்மிக நூலில் இடம் பெற்றுள்ளன. அந்த நூலின் பெயர் திருவாசகம். எழுதியவர் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகரின் பெயரைவிட, அவர் எழுதிய திருவாசகத்தின் பெயர் பெருமளவில் மக்களிடையே பரவி இருக்கிறது. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற வாக்கே இதற்கு உதாரணம்.

'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்னும் அருள்வாக்கைத் தந்த வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளார், திருவாசகம் எழுதிய ஓர் ஓலையை எப்போதும் தன் தலைமேல் வைத்திருப்பார். முதலிரவிலும் திருவாசகம் படித்த ஞானி ராமலிங்க ஸ்வாமிகள் என்று, வள்ளலாரையும் அவர் போற்றித் துதித்த திருவாசகத்தையும் புகழ்வார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

அவர் மட்டுமா... அயல் நாட்டுக்காரரான ஜி.யு.போப் என்பவர் கிறிஸ்துவத் தமிழ் அறிஞர். திருவாசகம் படித்து, அதில் தன்னையே இழந்தவர். அவர் யாருக்குக் கடிதம் எழுதினாலும் திருவாசகப் பாடல் ஒன்றை எழுதிவிட்டுத்தான், மேற்கொண்டு கடிதத்தைத் தொடர்வார்.

ஒருமுறை, அவர் தன் வழக்கப்படி திருவாசகப் பாடலை எழுதிவிட்டுக் கடிதத்தைத் தொடர்ந்தார். அப்போது திருவாசகத்தை நினைத்து உருகி, அவர் கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் அவர் எழுதிய கடிதத்தில் விழுந்து, எழுத்துக்கள் சிலவற்றை அழித்துவிட்டது. வேறு கடிதம் எழுதலாம் அல்லவா? ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதே கடிதத்தைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்தார். அப்படி செய்ததற்கான காரணத்தையும் அவரே சொன்னார். ''திருவாசகம் மட்டுமல்ல; அதை நினைத்து வடித்த கண்ணீரும் புனிதமானது'' என்றார் ஜி.யு.போப். இப்படி... வாரியார் சுவாமிகள் தொடங்கி, அயல்நாட்டுக்காரரான தமிழறிஞர் ஜி.யு.போப் வரை அனைவரையும் கவர்ந்த ஞான பொக்கிஷமாம் திருவாசகத்தில்... கரு வளர்ச்சி குறித்த 'ஸ்கேனிங் தகவல்’ தரும் அந்தப் பாடல்:

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்...

(இன்னும் அள்ளுவோம்...)