Published:Updated:

’பிரிந்த தம்பதி சேருவர்!’

YOGARAJ K

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

’பிரிந்த தம்பதி சேருவர்!’
##~##
'ஒ
ழுகைமங்கலம் மாரியம்மன்கிட்ட வேண்டிக்கிட்டா... இனி நமக்கு ஒரு குறையும் வராம அவ பார்த்துக்குவா’ என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர் நாகை மாவட்ட மக்கள்!

நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஒழுகைமங்கலம். இங்கே குடிகொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஸ்ரீமாரியம்மன், சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம்! பசு பால் சொரிந்து, பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால், ஊருக்கு ஒழுகைமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

பங்குனிப் பெருந்திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, நவராத்திரி உத்ஸவம், தை மாதப் பிறப்பு ஆகியவை சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம் வந்துவிட்டால், ஸ்ரீமாரியம்மனைக் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வழிபடுவோர், இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். தவிர, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி வேண்டிக் கொண்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்! புதுமணத் தம்பதியர் இங்கு வந்து, தாலி பிரித்துப் போட்டுக் கொண்டால், குடும்பம் செழிக்கும்; வம்சம் தழைக்கும் என்கின்றனர், பெண்கள்!

’பிரிந்த தம்பதி சேருவர்!’

ஆடிப்பெருக்கு நாளில், கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உத்ஸவரான ஸ்ரீசீதளா பரமேஸ்வரி, ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபேச்சியம்மாள், ஸ்ரீகருப்பன் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

கோயிலின் தீர்த்தக் குளத்தில், சர்க்கரை மற்றும் உப்பு கரைத்துப் பிரார்த்தித்தால், உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும்! கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைகூடும்; தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார் கோயிலின் ரவிகுமார் குருக்கள்.

''எங்களோட கல்யாண நாள் அன்னிக்கி, திருக்கடையூர் போயிட்டு அப்படியே இந்த மாரியம்மனை தரிசிக்கறதை வழக்கமா வைச்சிருக்கோம். எங்க குடும்பத்தையே காத்தருளும் அம்மா, இவள்!'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் பெரியவர் ஒருவர்!  

- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபிஷிகா