Published:Updated:

திருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..!

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

திருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..!

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

Published:Updated:
திருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..!
திருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..!

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைவாசல். இங்கே பழையாற்றின் கரையில்  அமைந்துள்ளது ஸ்ரீஆயியாரம்மன் திருக்கோயில். இந்தக் கோயில், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்கின்றன கல்வெட்டுகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னொரு காலத்தில், பழையாற்றில் மிதந்து வந்த  பிரம்புக் கூடை ஒன்று இந்த ஊரில் கரை ஒதுங்கியதாம். ஊர்மக்கள் அனைவரும் திரண்டு சென்று, கூடையை எடுத்துப் பார்த்தனர். அதில் அழகிய ஓர் அம்மனின் திருவிக்கிரகம் இருந்தது கண்டு சிலிர்த்தனர். 'யார் இந்த ஆயி(தாய்)?’ என்று அனைவரும் கேட்க, யாருக்கும் விடை தெரியாது போகவே, அம்மனுக்கு 'ஆயியாரம்மன்’ என்றே திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினர்!  

சித்திரை, ஆவணி, பங்குனி மற்றும் ஆடி மாதங்களில் இந்தக் கோயிலில் விழாக்கள் சிறப்புறக் கொண்டாடப் படுகின்றன. சித்திரையில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். கடும் உக்கிரத்துடன் காட்சி தரும் அம்மனுக்குப் பால் குடம் ஏந்தி வந்து, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.  

ஆடி மாதத்தின் எல்லா நாட்களிலுமே செவ்வாய்- வெள்ளி போல் கூட்டம் கூடுமாம். ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையும் வெகு பிரசித்தம்! அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் கேரளா, புனே, டில்லி, பெங்களூரு எனப் பல பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொண்டு, அம்மனைத் தரிசித்துச் செல்வார்கள். காதணி விழா, முடி காணிக்கை செலுத்துதல், திருமணம் ஆகியவையும் இங்கே நடைபெறுகின்றன.

திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இங்கு வந்து வழிபடுவ துடன் திருவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டால், சீக்கிரமே நல்ல கணவன் அமையப் பெறுவர் என்பது ஐதீகம்! அதேபோன்று, கோயில் குளத்தில் நீராடிவிட்டு, பிராகாரத்தில் அங்கப்பிரதட்சணமாக வந்து அம்மனைத் தரிசித்து அன்னதானம் செய்தால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறுவர்.  

திருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..!
##~##
''ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியநாயகி, சப்த கன்னியர், ஸ்ரீபெத்தபெருமாள் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். பந்தமாணிக்க முனிவர் என்பவரின் திருச் சமாதியும் ஆலயத்தில் உள்ளது. இவரின் திருச்சமாதியில் விளக்கேற்றி அன்னதானம் செய்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட்டால், சத்ரு தொல்லை ஒழியும்; கல்வி ஞானம் பெறலாம்'' என்கிறார் கோயில் பூசாரி கார்த்திக்.

''எங்களுக்குச் சொந்த ஊர் மன்னார்குடி. இப்ப நாங்க சென்னைல இருக்கோம். எங்க குலதெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே ஆயியாரம்மன்தான். எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கிறதா இருந்தாலும், இந்த அம்மன் சந்நிதிக்கு வந்து சொல்லிட்டுதான் செய்வோம். வருஷாவருஷம் ஆடி, தை மாதங்களில் குடும்பமா இங்கே வந்து பொங்கல் படையல் வைக்கிறதும் வழக்கம். எங்க பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டோம். அதேபோல அவனுக்கு ஐ.ஐ.டி-ல நல்ல வேலை கிடைச்சிருக்கு'' என்று நெக்குருகிச் சொல்கிறார் உஷா ராஜேந்திரன்!

- மா.நந்தினி
படங்கள்: அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism