Election bannerElection banner
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
'இ
ந்த உலகத்துல யார்தான் உண்மையைப் பேசுறாங்க..? எவனும் இங்கே அரிச்சந்திரன் இல்லை’ என்று பொய்களால் சூழப்பட்ட உலகில், யாரோ யாரிடமோ இப்படிப் பேசியிருப்பார்கள்.

எவரேனும் ஒரு விஷயத்தைச் சொல்ல, அவர் வார்த்தையில் நம்பிக்கை இல்லாமல் மற்றவர் முகம் திருப்பிக்கொள்ள... 'என்னப்பா நம்பமாட்டேங்கிறே! சத்தியமா சொல்றேம்ப்பா’ என்று தங்களின் வார்த்தைக்கு உறுதி சேர்ப்பவர்கள் பலர் உண்டு; 'அடப்போய்யா... இவரு பெரிய அரிச்சந்திரன். உண்மையைச் சொல்ல வந்துட்டாரு’ என்று கேலி பேசுகிறவர்களும் அவர்களைவிட அதிகமாகவே இருக்கிறார்கள்.

இப்படி உண்மைக்கு உதாரண புருஷராக விளங்கிய அரிச்சந்திர மகாராஜா, சத்தியத்தைக் கடைசி வரை கைவிடவே இல்லை. சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் அரண்மனைப் படாடோபங்களை இழந்தார்; விலை உயர்ந்த பட்டாடைகளையும், கைகளிலும் கழுத்திலும் அணியும் விலை மதிப்பில்லாத ஆபரணங்களையும் இழந்தார்; கைதட்டினால் உதவிக்கு ஓடிவருகிற நூற்றுக்கணக்கான வேலையாட்களையும், கண்ணசைத்தால் எதிரிகளை நோக்கிப் பாய்கிற ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் இழந்தார். காடு- கரைகளைப் பறிகொடுத்தார். ஏரி- குளங்களை இழந்து நின்றார். மொத்தத்தில், ஆட்சி அதிகாரத்தையும், மன்னன் என்கிற பதவியையும் இழந்தார். இதனால் மனைவி- மக்களின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் அவர் இழக்க நேரிட்டது!

'சத்தியத்தைக் கடைப்பிடித்ததால் நான் இழந்திருப்பவை கொஞ்ச நஞ்சம் அல்ல. ஆனால், என் மிகப் பெரிய சொத்து, மிகப் பெரிய சந்தோஷம் சத்தியத்தின்படி நடப்பதுதான்! அந்தச் சந்தோஷத்தையும் சொத்தையும் ஒருபோதும் நான் இழக்கமாட்டேன். எதற்காகவும் யார்பொருட்டும் உண்மையைக் கைவிடமாட்டேன்’ என்று சூளுரைத்தார்.

ஆலயம் தேடுவோம்!

'சத்தியம் வலிமைமிக்கது என்பது உண்மையானால், சத்தியம் ஜெயிக்கும் என்பது சத்தியமானால், இழந்தவை அனைத்தும் தேடி வரும்; இறையருள் இருப்பின் இது சாத்தியமாகும். சத்தியம் எங்கு இருக்கிறதோ, தெய்வம் அங்கே நிற்கும்! ஏனெனில் சத்தியமே தெய்வம்’ என்று நினைத்தபடி, முழுக்க முழுக்க இறைச் சிந்தனையுடன் இருக்க முடிவு செய்தார். யாத்திரை மேற்கொள்வது என்று தீர்மானித்தார்.

ஊர் ஊராகச் சென்றார். காடுகளையும் மலைகளையும் கடந்து, ஆறுகளையும் ஏரிகளையும் கடந்து, வழியில் குறுக்கிடுகிற ஊர்களில் எல்லாம் தங்கினார். அங்கே இதமான சூழல் இருந்தால், அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து, கடும் தவத்தில் மூழ்கி, கடவுளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்.

ஆலயம் தேடுவோம்!

இப்படித்தான்... இலுப்பை மரங்கள் சூழ்ந்த அந்த வனப்பகுதிக்கு வந்த அரிச்சந்திரன், வனத்தின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தார். அந்த இடத்தில் சில நாட்கள் தங்கி, அங்கேயிருந்த சிவலிங்கத் திருமேனியை வணங்கித் தொழுதார். சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்தார்; வில்வம் சார்த்தினார்; கண்கள் மூடி, இடைவிடாது கடும் தவம் இருந்தார். 'இது மிகச் சாந்நித்தியமான சிவலிங்கம் என்று உள்ளுணர்வு சொல்கிறதே...’ என யோசித்தார்.

'இந்த லிங்கத் திருமேனி, காசியில் இருந்து எடுத்து வந்ததாக இருக்கவேண்டும். கங்கை நீரில் தினமும் நீராடிய லிங்கம் இது. இந்த காசி சிவலிங்கத்தை பூஜித்தால், பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்தும் போய்விடும். நாம் செய்த புண்ணியங்களின் பலன்கள் கிடைத்துவிடும்’ என அறிந்து மெய்சிலிர்த்தார் அரிச்சந்திரன்.

ஏற்கெனவே, அருகில் உள்ள வனத்தில் வழிபட்டதால் நல்ல அதிர்வுகள் உள்ளே தோன்றியிருப்பதாக உணர்ந்திருந்தார் அவர். அந்தத் திருத்தலம், மிக உன்னதமான இடம். அங்கேயுள்ள குப்த கங்கை தீர்த்தம் ரொம்பவே விசேஷம்! அதேபோல் இந்தத் தலமும் இங்கேயுள்ள தீர்த்தமும் சிறப்பானது என உணர்ந்தார் அரிச்சந்திரன்.

எனவே, அங்கே ஓர் அழகிய கோயிலை அமைத்தார் அவர். அந்தத் தலத்து நாயகனுக்கு, ஸ்ரீகாசி விஸ்வநாதர் எனத் திருநாமம் சூட்டினார். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீவிசாலாட்சி.

ஆலயம் தேடுவோம்!

கோயிலுக்கு அருகில் தீர்த்தக் குளம் உள்ளது. இது சூரிய பகவானால் உண்டாக்கப்பட்ட திருக்குளம். இந்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீகாசி விஸ்வநாதரையும் ஸ்ரீவிசாலாட்சியையும் வணங்கித் தொழுதால், வாழ்க்கையில் இழந்தவற்றையெல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது அச்சுதமங்கலம். திருவாரூர் - திருவீழிமிழலை வழியில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். புகழ்பெற்ற புண்ணிய க்ஷேத்திரமான ஸ்ரீவாஞ்சியம், இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது.  

அச்சுதமங்கலம் என்கிற பெயர் எப்படி உண்டானது?

ஆலயம் தேடுவோம்!

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது. தருமர் தவமிருந்து, சிவனாரைத் தொழுத சிலிர்ப்பான இடம். தேசத்தை இழந்து, சபையின் முன்னே எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்டு வனாந்திரத்தில் வசித்த காலத்தில், இங்கே வந்து சில காலம் தவமிருந்தனர் தரும சகோதரர்கள். தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு இங்கே தனியே கோயில் உள்ளது. அந்த ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீதர்மேஸ்வரர். அர்ஜுனன் தங்கியிருந்ததை நினைவுபடுத்தும் வகையில், அர்ஜுனன்மங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டு, பிறகு அதுவே அச்சுதமங்கலம் என மருவிற்று.

ஆக, சத்தியத்துக்குப் பெயர் பெற்று, சத்தியமாகவே வாழ்ந்த தரும புத்திரரும் பாண்டவ சகோதரர்களும் தவமிருந்து பலன் பெற்றதும் இந்தத் திருத்தலத்தில்தான்! அரிச்சந்திர மகாராஜா வணங்கித் தொழுத திருத்தலமும் இதுவே!

தேசம், பதவி, அதிகாரம், சொத்து சுகங்கள் என இழந்த அனைத்தையும் இவர்களுக்கு மீண்டும் வழங்கி அருளியது போலவே நமக்கும் அருளக் காத்திருக்கிறார் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர். ஆனால்... அவர் குடிகொண்டிருக்கும் கோயில், வழிபாடுகளும் விழாக்களும் இல்லாமல் களையிழந்து காட்சி தருகிறது.

''இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலீங்க. ஒருகாலத்துல ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில்ல திருவிழாக்கள் எல்லாமே அமர்க்களமா நடந்திருக்குன்னு பெரியவங்க சொல்றாங்க. மிகப் பெரிய பிராகாரத்தோட, அற்புதமான கோயிலா இருந்திருக்கு இது. திருவாரூர்லேர்ந்தும் கும்பகோணத்துலேர்ந்தும் இந்தக் கோயில் விழாவுக்கு வந்து கலந்துக்கிட்டிருக்காங்க. காலஓட்டத்துல, கோயில் மண்டபங்கள் இடிஞ்சு, சிதைஞ்சு, வழிபாடுகளும் அறவே இல்லாம போயிட்டுதுங்க!'' என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் அச்சுதமங்கலத்தைச் சேர்ந்த மதனமோகன். தற்போது ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருப்பணி மன்றம் அமைத்து, கோயில் திருப் பணிகளைச் செய்து வருகிறார்.

இழந்ததை மீட்டுத் தருகிற ஆலயம் இடிந்தும் சிதைந்தும் இருக்கலாமா? சத்தியத்துக்கும் உண்மைக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்த அரிச்சந்திர மகாராஜாவுக்கு அருளிய ஆலயம், வாரி வழங்கத் தன்னிடம் அருளை வைத்துக்கொண்டு, பொருள் இல்லாததால் பொலிவின்றி இருக்கலாமா?

சத்தியசீலருக்கு இழந்ததை மீட்டுத் தந்த ஆலயத்துக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம். நாம் செய்யச் செய்ய அந்தத் தர்மம் நம்மைக் காக்கும்; நம் சந்ததியைச் சிறக்கச் செய்யும். இழந்த பதவி, சந்தோஷம், மன அமைதி என எதுவாக இருந்தாலும் அவற்றை மீட்டுத் தரும். இது சத்தியம்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு