Published:Updated:

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
முதல் வணக்கம் முதல்வனுக்கே!

கோட்புலியார்... 63 நாயன்மார்களுள் ஒருவர்; சிவபக்திக்காக எதையும் செய்பவர்; அவ்வளவு ஏன்... கொலை செய்யக்கூடத் தயங்கமாட்டார்!

சோழ நாட்டில், திருநாட்டியத்தான்குடி என்னும் ஊரில் தோன்றிய இவர், அளவில் அடங்காத சிவபக்தி கொண்டவர். அவரைப் பார்த்தாலே மற்றவர்களுக்குப் புலி போலத் தோன்றுமாம். அதனால் 'கோட்புலியார்’ என்று அழைத்தார்கள். 'கோட்புலி’ என்றால் 'கொலை செய்வதில் புலி’ என்று பொருள்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

வேளாளர் குலத்தில் உதித்தாலும், இவரது தொழில் நாட்டை ஆளும் அரசனுடைய படைக்குத் தலைமை தாங்குவதாக அமைந்தது. பல நாட்டு அரசர்களை வென்று சோழநாட்டுக்குப் பெருமை சேர்த்து வந்ததால், மன்னரிடம் அவருக்கு நற்பெயர் இருந்தது. அதற்கு அடையாளமாக, அவ்வப்போது நிறைய பொன்னையும் மணியையும் அவருக்கு அளித்து வந்தார் மன்னர்.

போர்க்களத்தில் எதிரிகளுக்குப் புலிபோல விளங்கினாலும், உள்ளத்தில் ஆழ்ந்த சிவபக்தி கொண்டவர் கோட்புலியார். அதனால், மன்னன் வழங்கிய பொருள்களைக் கொண்டு நெல் மூட்டைகளாக வாங்கிக் குவித்து சேமித்து வைப்பார். அதை சிவபெருமான் திருக்கோயில்களில் இறைவழிபாட்டில் திருவமுது படைக்கப் பயன்படுத்துவது அவரது வழக்கம். அந்த இறைப் பணியில் பேரின்பம் கண்டார் கோட்புலியார்.

அவர் அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில்... ஒருமுறை அரசன் கட்டளைப்படி வேறு நாட்டுக்குப் போருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படிப் புறப்படும் முன்பு, தாம் திரும்பிவரும் வரை தான் செய்துவரும் சிவபூஜை நைவேத்தியத்தில் எந்தக் குறைபாடும் வரக்கூடாது என்று நினைத்தார். அதனால், அதற்கு தேவையான நெல்லைச் சேமித்து வைத்துவிட்டு, தம் உறவினர் ஒருவரை அழைத்தார்.

''இந்த நெற்குவியல் சிவபெருமானின் திருவமுதுக்காகச் சேர்க்கப்பட்டது. இதைப் பாதுகாத்து அந்த சிவப்பணியைக் குறைவின்றி நடத்தி வாருங்கள். இதிலிருந்து யாரும் தமக்கென்று சிறிது நெல்கூட எடுக்கக்கூடாது. இது சிவபெருமான் மீது ஆணை!'' என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார் கோட்புலியார்.

அவர் போருக்குச் சென்றபின், மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. கோட்புலியாரின் உறவினர்கள் உணவின்றி இறக்கும் நிலை ஏற்பட்டதால், அவர் சிவபெருமான் திருவமுதுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்து உபயோகிக்க முடிவு செய்தனர். இப்போதைய தேவைக்காகவே அந்த நெல்லை எடுப்பது என்றும், பிறகு அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றும் தீர்மானித்தனர். அதன்படி, சிவ நைவேத்தியத்துக்காக கோட்புலியார் சேமித்துவைத்த நெல்லை உணவாக்கி உண்டு, உயிர் பிழைத்தனர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. கோட்புலியார் போரில் வெற்றி பெற்றுத் திரும்பினார். நடந்ததை எல்லாம் அறிந்தார்.

வெகு நாட்களுக்குப் பிறகு தம்மைக் காணவந்த உறவினர் அனைவரும் வந்து சேர்ந்தபின் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு, ''சிவபெருமான் ஆணையாகச் சொல்லிய கட்டளையையும் மீறி, உங்களிடம் நான் நம்பி விட்டுச்சென்ற நெல் முழுவதையும் எடுத்துச் செலவிட்டுவிட்டீர்கள். அந்தத் தவற்றுக்காக உங்கள் அனைவரையும் கொல்லாமல் விடமாட்டேன்!'' என்று கோபம் கொந்தளித்தவர், அப்படியரு பயங்கர காரியத்தைச் செய்யவும் செய்தார். ஆம்... அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.

உறவினர் கூட்டத்தில் சிறு குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த பின்னரும், அவரது கோப வெறி அடங்கவில்லை. அடங்கா கோபத்தோடு அதன் அருகில் சென்றார்.

''இந்தக் குழந்தை பால் குடிக்கும் பச்சைக் குழந்தை. இது அந்த நெல்லின் சோற்றை உண்ணவில்லை. மேலும், இந்தக் குடிக்கு இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்'' என்று தடுத்தனர்.

அவர்கள் கருத்தை கோட்புலியார் ஏற்க தயாராக இல்லை. ''நீங்கள் சொல்வது போன்று இந்தக் குழந்தை சோறு உண்ணவில்லை என்றாலும், அதனை உண்ட தாயின் பாலைக் குடித்ததால் அதுவும் சிவ அபராதமே!'' என்று அந்தக் குழந்தையையும் தண்டித்தார்.

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

இப்படிச் சிவபக்தியில் அதிதீவிரமாக இருந்த கோட் புலியார் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப் பெறுகிறார்.

ஒருமுறை, திருவாரூரில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளது பெருமையையும் அற்புதங்களையும் கேட்டு மகிழ்ந்த கோட்புலியார் திருவாரூர் சென்று சுந்தரரை வணங்கி தமது ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு அழைப்பு விடுத்தார். சுந்தரரும் இசைந்து அவரது ஊருக்குச் சென்றார். கோட்புலியார், நகரை அலங்கரித்து பலவகையான மரியாதைகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தார். அவரைத் தம் இல்லத்துக்கு எழுந்தருளச் செய்து அர்ச்சித்து, மகேஸ்வர பூஜை செய்து பணிந்தார். அங்கே இருவரும் வெகுநேரம் அளவளாவி மகிழ்ந்தனர்.

கோட்புலியாருக்கு சிங்கடி, வனப்பகை என்ற பெயர் கொண்ட இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடியைத் தொழச் செய்து தாமும் வணங்கினார். அந்த இரண்டு பெண்களையும் சுந்தரர் தமது மனைவியராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். ஆனால், சுந்தரர் அந்தப் பெண்கள் இருவரையும் தம் குழந்தைகளாகப் பாவித்து, தமது மடியின் மீது அமர்த்தி வைத்துக்கொண்டு உச்சி மோந்து வாழ்த்தியருளினார். (இதுபற்றிக் கூறுகையில், தம்மைச் 'சிங்கடி அப்பன் திருவாரூரன்’ என்று திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் குறிப்பிடுகிறார் சுந்தரர். அத்துடன், தலப் பாடல்கள் பத்தில் வனப்பகையின் பெயரையும், எட்டு பாடல்களில் சிங்கடியின் பெயரையும் சுட்டி அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது).

கோட்புலியார் இல்லத்து வைபவங்களில் கலந்துகொண்ட சுந்தரர், பிறகு அங்கிருந்த சிவாலயத்துக்குச் சென்றார். மலை மங்கை என்னும் மங்கலநாயகி உடனாய மாணிக்கவண்ணர் என்னும் ரத்னகிரீஸ்வரப் பெருமானைத் தரிசிக்க முயன்றார். ஆனால், அந்தக் கோயில் கருவறையில் ஈஸ்வரனையும் அம்பிகையையும் காணவில்லை.

உடனே அங்கிருந்த விநாயகரை நோக்கி, ''அம்மையும் அப்பனும் எங்கு சென்றார்கள்?'' என்று வினவினார். அதற்கு விநாயகப் பெருமான், அவர்கள் இருவரும் சென்றுள்ள ஈசான்ய திசையை நோக்கிக் கைகாட்டினார். சுந்தரர் உடனே விநாயகர் காட்டிய திசையில் சென்றார். அங்கே உமாதேவியும் சிவபெருமானும் வயலில் நடவு நட்டுக் கொண்டிருந் தனர். சுந்தரர் அந்தக் காட்சியைக் கண்டார்.

உடனே,

''நட்ட நடாக்குறை நாளை நடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டது போதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான் குடி நம்பி'' என்று பாடினார்.

##~##
''இதுவரை நாற்று நட்டது போதும்; மீதம் உள்ளதை நாளை நடலாம்; நாளை நட வேண்டி யதற்கும் சேறு தயாராக உள்ளது. எனவே, கரையேறி வாரும் நாட்டியத்தான்குடி இறைவரே!'' என்பது இதன் வெளிப்படைப் பொருள். ஆனால், இப்பாடலுக்கு ஒரு மறைமுகப் பொருளும் உண்டு.

நட்டம் என்றால் நடனம்; அதாவது நாட்டியம். ''இதுவரை நடனம் இட்டது போதும். நாளைக்கு உன் அருள் வைத்து மீண்டும் ஆடலாம் (சேறு-அருள்; இனிமை) இதுவரை ஆடிய அளவு போதும் (கரை-அளவு) திருநாட்டியத்தான்குடியில் வாழும் பெருமானே!'' (நம்பி-கடவுள்; ஆணிற்சிறந்தோன்) என்று பாடியவுடன் அங்கிருந்த அம்மையும் அப்பனும் மறைந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளினர் என்கிறது தலபுராணம்.

சுந்தரர் சிவபெருமானைத் தரிசிக்க மீண்டும் கோயிலினுள் நுழையும்போது, இறைவனின் ஆபரணமாகிய சர்ப்பம் அங்கு வாசலில் தோன்றி ரீங்காரமிட்டது. அதைக் கண்ட சுந்தரர், ''பூணாள் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்'' என்று பதிகம் பாடத் தொடங்கினார். ''அடியவனைக் கடைக்கண்ணால் கண்டு அருளாவிடினும், நான் உன்னைக் கண்ணாரக் கண்டேன்; நீர் என்னை மறந்தாலும் கருதாவிட்டாலும், யான் உம்மை மனத்தால் நினைத்து பாடுவேன், நாட்டியத்தான்குடி நம்பி'' என்று போற்றுகிறார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை இன்றும் நினைவுகூரும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 'நடவு உத்ஸவம்’ ஐதீக விழாவாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு சென்று, அங்கிருந்து வடபாதி மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருநாட்டியத்தான்குடி. மயிலாடுதுறை- காரைக்குடி இருப்புப் பாதையில் மாவூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து வடமேற்கில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்குள்ள ரத்னகிரிநாதர் திருக்கோயில் கிழக்கு கோபுரவாயிலுக்கு எதிரே மேற்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் 'கைகாட்டி விநாயகர்’ காட்சியளிக்கிறார். சுந்தரருக்கு வழிகாட்டிய அந்த விநாயகரை வழிபட்டால் நாம் ஈடேற நமக்கும் கைகாட்டி அருள் புரிவார்.

(நிறைவுற்றது)

படங்கள்: ந.வசந்தகுமார்

நவக்கிரக விநாயகர்

 

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நர்த்தன கணபதி

திபெத், நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பல இடங்களில் காணப்படும் ஓவியங்களில் 'நர்த்தன கணபதி’ பிரதான இடம் வகிக்கிறார்.

இவர் அந்தி வெயில் போல் மஞ்சள் நிறம் கொண்டவர். ஒரு காலை தாமரை தாங்க, இன்னொரு கால் தூக்கிய திருவடியாகத் தாண்டவமாடும் கணபதியே 'நர்த்தன கணபதி’ என வர்ணிக்கின்றன ஞானநூல்கள். வாதாபி, திரிபுவனேஸ்வரம், திருக்கச்சூர், மதுரை ஆகிய தலங்களில் நர்த்தன கணபதியை தரிசிக்கலாம்.

ஹேரம்ப கணபதி

முதல் வணக்கம் முதல்வனுக்கே!

ஐந்து முகங்கள் கொண்ட பிள்ளையார் 'ஹேரம்ப’ கணபதி என்று அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலிலும், சேலத்துக்கு அருகிலுள்ள கந்தகிரியிலும், திருவானைக்காவிலும் கல்லால் அமைந்த ஐந்து முக விநாயகர் தரிசனம் தருகிறார்.

சிவகாசி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலிலும், திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலிலும் முகங்கள் வரிசையாக அமைந்த ஐந்து முகப் பிள்ளையாரை வழிபடலாம்.

நாகபாச கணபதி

சங்கரநயினார்கோவில்- ஸ்ரீகோமதியம்மன் சமேத ஸ்ரீசங்கரலிங்க ஸ்வாமி கோயிலில் தரிசனம் தரும் கணபதி, பாசம், அங்குசங்களுக்குப் பதிலாக பாம்பைப் பிடித்து நடனமாடும் திருக்கோலத்தில் காணப்படுகிறார்.

தொகுப்பு: எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை-88