Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ழ்ந்த அமைதியைப் போர்த்திக்கொண்டிருந்தது கங்கை தீரம். நாடாள வேண்டியவன் காடாள வந்ததை எண்ணி அழுது சிவந்த அயோத்தி கன்னிகையின் கன்னம் போன்று, கீழ்வானைச் சிவக்க வைத்திருந்தான் காலைச் சூரியன். அந்தப் பொழுதில், சலனமற்ற கங்கையின் மடியில் மெள்ள நகர்ந்தது ஒரு தோணி.

ஆம்... தர்மம், தியாகம் எனும் துடுப்புகள் கொண்டு பிறவிப் பெருங்கடலில் இருந்து மானுடத்தை கரையேற்ற வந்த பெரும் படகை தன்னில் சுமந்து சென்றது

அந்தத் தோணி.

வழக்கமாக நுங்கும் நுரையும் நீர்ச்சுழல்களும் நிறைந்து பொங்கி ஆர்ப்பரிக்கும் கங்கை என்னவோ அன்று அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால் தோணியின் மீது ஸ்ரீராமனின் அருகில் அமர்ந்திருந்த சீதாவின் உள்ளத்திலோ, ஆயிரமாயிரம் சிந்தனைச் சுழல்கள்!

அப்பப்பா... அடுத்தடுத்து என்னவெல்லாம் நடந்தேறிவிட்டன?! கைகேயியின் மாளிகைக்கு எவ்வளவு ஆனந்தமாக ஓடோடிச் சென்றார் தசரதச் சக்கரவர்த்தி. ஸ்ரீராமனுக்கு முடிசூடப் போகும் மகிழ்ச்சியை அவளிடம் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு. ஆனால் கைகேயி யிடம் அவர் எதிர்கொண்டது, இடிகளாய் இறங்கிய வரங்களை அல்லவா?

'என் மகன் பரதன் நாடாள வேண்டும்;

ராமன் காடாள வேண்டும்’

தசரதன் என்ன செய்தார்? இரண்டுக்கு பதில் மூன்றாக வரம் தந்தார்: ''ஸ்ரீராமன் வனம் ஆள்வான்; அவனைப் பிரிந்து நானும் வானுலகம் ஆளச் செல்வேன். நீயோ உன் மகன் பரதனுடன் நீண்ட நெடுங்காலம் உயிரோடிருந்து, பழியாகிய வெள்ளத்தில் அழுந்திக் கிடக்கப் போகிறாய்''

அதற்கு முன்னதாக அவரின் அறிவுரைகளும் கொஞ்சலும் கெஞ்சலும்கூட கைகேயியிடம் பலிக்கவில்லையே! அதனால் எழுந்த ஆற்றாமை யின் மிகுதியால் அவரின் திருவாய் உதிர்த்த வார்த்தைகள் அல்லவா அவை. அவர் மட்டுமா? அயோத்தி மாநகரமே நிலைகுலைந்து போனதே!

மரவுரி தரித்து துறவுக்கோலத்தில் ஸ்ரீராமனும் இளவலும் முன் செல்ல, நகர வீதிகளில் அவர்களைப் பின்தொடர்ந்தபோது, குடிமக்களின் நிலையைச் சொல்லி மாளாது.

உந்தாது நெய்வார்த்(து) உதவாது கால்எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்
செந்தா மரைத்தடங்கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ...

- என நின்ற அவர்களின் நிலையைச் சொல்வதா? 'ஆதி அரசன் அருங்கே கயன்மகள் மேல் காதல் முதிரக் கருத்தழிந்தார் - கைகேயின் மீது கொண்ட மோகத்தால் மதியிழந்து ஸ்ரீராமனுக்கு அநீதி இழைத்தார்’ என திரிபுவனச் சக்கரவர்த்தியை அவர்கள் பழிக்கத் துணிந்ததைச் சொல்வதா?

'மண் செய்த பாவம்’ என்று வேளாண்மைக் காரர்களும், 'இல்லையில்லை... மலர்மகளாம் திருமகள் செய்த பாவம்... ஸ்ரீராமன் காடேக, நம் தொழில்வளமெல்லாம் நசியப் போகிறது...’ என வியாபாரிகளும், 'இரண்டும் இல்லை; நம் கண் செய்த பாவமே இது’ என்று பொதுமக்கள் பலரும் கலங்கி நின்றார்களே... அதைச் சொல்வதா?!

ஆனால், அண்ணல் சிறிதும் கலங்கி னாரில்லை; அன்பொழுக ஆறுதல் சொன்னார். அறிவுரைகளும் வழங்கினார். அவர்களுக்கு மட்டுமா?

'என்னையும் கானகம் அழைத்துச் செல்’ என்ற தன் அன்னை கோசலையிடமும், ''தம்பி பரதன் என்னிலும் சிறந்தவன் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்ட தம்பிக்கு நாட்டைக் கொடுத்து, அருமைத் தந்தையின் வாக்கைக் காப்பாற்றி, வனத்தில் ரிஷிகளுடன் வாழ்ந்து திரும்பப் போகிறேன். ஆக எனக்கும், எந்தைக்கும், என் தம்பிக்கும் ஒருங்கே நன்மை விளைவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைத் தவிர்க்கலாமா? என்னைப் பிரியப் போகும் துக்கத்தில் இருக்கும் தந்தையின் அருகில் இருந்து அவரைத் தேற்றுவதே தங்களின் கடமை'' என்று தேறுதல் சொன்னார்; தாய்க்கும் தாயாகி நின்றார்!

அவ்வளவு ஏன்? இதோ... ஆழ் கடலையும் விஞ்சிய அமைதியை நெஞ்சில் தாங்கியபடி நிற்கிறாரே இளவல்... அன்று எரிமலையாக அல்லவா வெடித்தார்?

அவரின் அந்த கோபக்கனலை, ஸ்ரீராமன் எனும் கார்மேகம் எப்படியெல்லாம் ஆற்றியது.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழைநீ இதற்(கு) என்னை வெகுண்டதென்றான்

''குழந்தாய்! நதியில் நீர் இல்லாமல் போவதற்கு நதியா காரணம். அதற்கு இயற்கை காரணங்கள் பலவுண்டு. அதுபோலத்தான் வாழ்வின் பல நிகழ்வுகளுக்கும் காரணங்கள் பலவுண்டு. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. இந்த காரணகாரிய முறையையே விதி என்பார்கள். ஆக, விதியின் விளைவைக் குறித்து நீ கோபம் கொள்வதில் பயனென்ன?''

என்று புத்திமதி சொன்னார். அதையும் மீறி, 'விதிக்கும் விதியாகும் என் விற்றொழில் (வில் தொழில்)’ என்று இளையவர் பொங்கியெழ, உரிமையோடு கடிந்துகொண்டு  அவரை ஆற்றுப்படுத்திய அந்த தருணத்தில், என்னவர், தம்பிக்கு தந்தையானார்!

அதன்பிறகு, என்னைப்போலவே... அண்ணல் மறுத்தும் விடாமல் அவரின் அடியற்றி தானும் பின்தொடர்ந்து விட்டார் இளையவர்.

அதுமட்டுமா? குருதேவர் வசிஷ்டர், ''ராமா! முடிவை மாற்றிக்கொள். ராஜ்ஜியத்தை வேண்டுமானால் பரதனுக்குக் கொடு பாதகம் இல்லை. ஆனால், காடேகிவிடாதே. அது நிகழுமெனில் உன் தந்தை வானேகிவிடுவார்'' என்று கூறி தடுத்தபோது, அற்புதமான சில வார்த்தைகளை உதித்தாரே ஸ்ரீராமன்.

''ஒரு சேனாதிபதியின் உயிரைக்காப்பது படைவீரனின் கடமையன்று; அவரது கட்டளையை தலைமேல் ஏற்று செயல்படுவதே அவனது கடமை. அதுபோன்றே தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதே என் கடமை. தங்களின் கடமையோ அவரின் துயரத்தை ஆற்றுவது!'' என்று அழகான உபதேசம் அல்லவா அங்கு நிகழ்ந்தது. அப்போது என்னவர் குருவுக்கும் குருவானார்!

உற்றார்- உறவினர், குரு, குடிமக்களை மட்டுமா? இதோ துடுப்பு வலிக்கிறானே குகன் அவனையும் அல்லவா ஆட்கொண்டு விட்டது, காகுத்தனின் கருணையும் அன்பும். அவன் காதல் கிடைத்தது என் கொடுப்பினையே!

சட்டென்று ஏற்பட்ட சலனத்தில், முகத்தில் தெறித்து விழுந்த நீர்த்துளி, சீதாவின் சிந்தையை கலைத்தது; தோணி கரை சேர்ந்திருந்தது!

குகனின் தோள்பற்றி கரையில் கால் பதித்த ஸ்ரீராகவன், ''குக... சித்ரகூடத்துக்குச் செல்ல வேண்டும்... வழி சொல்வாயா?''

''தாங்கள் செல்லத்தான் வேண்டுமா? என்னுடனேயே தங்கிவிடக்கூடாதா? போகத்தான் வேண்டுமெனில் என்னையும் அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்காக உயிரையும் தர சித்தமாயிருக்கிறேன்'' என்றான் குகன்.

ஸ்ரீராமன் சிரித்தார். ''என் உயிரே நீதான். இதோ நிற்கிறானே லட்சுமணன்... இவன் உனக்கும் தம்பி. என்னுயிர் சீதா உன் தோழி. ஆம், குகா... இன்றிலிருந்து என் குடும்பம் பெருகி விட்டது. முன்பு நாங்கள் நால்வராகப் பிறந்தோம்.

இப்போதோ, முடிவில்லாத அன்பினால் இணைந்து உன்னையும் சேர்த்து ஐவரானோம்!'' என்று கூறி அவனை இறுக அணைத்துக்கொண்டார்.

''தாமதம் செய்ய மாட்டோம். விரைவில் திரும்புவோம்'' என்று ஸ்ரீராமன் புன்னகைக்க, கண்கள் பனிக்க விடைகொடுத்தான் குகன். ஸ்ரீராமன் சித்ரகூடம் நோக்கி பயணித்தார்!

நாமும் அவரைப் பின்தொடர்வோம்!

- அவதாரம் தொடரும்...