Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விட்டம் நட்சத்திரத்தை 'ச்ரவிஷ்ட்டா’ என்கிறது வேதம். தமிழின் இயல்பில் 'ச், ர், ஷ்’ ஆகியவை நகர்ந்துவிட்டால், அவிட்டம் என்று வரும். இதன் தேவதைகள் எட்டு வசுக்கள். இரண்டிரண்டு வசுக்களாக இணைந்து, நான்கு பாதங்களையும் எட்டு வசுக்கள் காப்பாற்றுகிறார்கள். அவர்களின் இணைப்பு, நட்சத்திரத்துக்கு பெருமை அளிக்கிறது.

வசுக்களில் ஒருவர் மஹாத்மா பீஷ்ம பிதாமஹராகத் தோன்றி மகாபாரதத்துக்குப் பெருமை சேர்த்தார். அவர் தனது திருமணத்தை விலக்கிய செயல், மகாபாரதம் உருவாகக் காரணமாயிற்று. எட்டு எழுத்துக்களை உடைய காயத்ரீ, வசுக்களின் உரிமையாயிற்று (வஸவோஷ்டாக்ஷரா காயத்ரி). எட்டெழுத்து காயத்ரீயை ஏற்பவர், வேதம் ஓதும் தகுதியைப் பெறுவார்.

இந்த நட்சத்திரத்தில் உத்தராயனம் ஆரம்ப மானதுண்டு (தனிஷ்டாத்யம்...). 'அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பணம்...’ என்ற சொல்வழக்கு உண்டு. 'வசு’ என்றால் ஐஸ்வர்யம். ஐஸ்வர்ய தேவதை அவிட்டத்துடன் இணைந்து இருப்பதால், அதில் பிறந்தவன் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவான். பெட்டியிலும் பேழையிலும் நிறைந்து வழிந்து, மாட்டுக் கொட்டகையில் இருக்கும் தவிட்டுப் பானையிலும் தவழ ஆரம்பித்துவிடும் செல்வம்.

குடும்பத் தலைவி அஞ்சறைப் பெட்டியில் பணம் சேமிப்பது உண்டு. மாடு இல்லாத வீடே இல்லாத காலம் ஒன்று இருந்தது உண்டு. மாட்டுத் தீவனத்தில் (தவிட்டில்) பணம் சேமிக்கும் பழக்கமும் அன்று இருந்தது. ஏ.டி.எம்-ல் பணம் பெறும் இன்றைய தலைமுறைக்கு அதன் பெருமை புரியாது. பல நாள் பாலை பாக்கெட்டில் பார்த்துப் பழகிய நம் குழந்தைகளுக்கு, அதுவே வரப்பிரசாதம் ஆகிவிட்டது. பஞ்சகவ்யத்தின் பெருமையை வெளிநாட்டு விஞ்ஞானி சொல்லி நாம் புரிந்துகொண்டு பெருமைப்படுகிறோம். மாட்டைப் பராமரிக்கும் கண்ணன் 'கோபாலன்’ (மாட்டைக் காப்பவன்) என்ற பெயரில் பெருமை கொண்டான்.

அவிட்டம் நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்களில் உயிர் பிரிந்தால், சாந்தி செய்யச் சொல்லும் சாஸ்திரம். அதற்கு 'தனிஷ்டா சாந்தி’ என்று பெயர். 'அவிட்ட நட்சத்திரத்தில் இணைந்த வசுக்கள், எங்களது செல்வச் செழிப்பு சரிந்துவிடாமல் இருக்க அருள வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (அஷ்டௌதேவாவஸவ:..). மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் சரிபாதியாக பரவிய நட்சத்திரம் அவிட்டம். இரண்டு ராசிகளுக்கும் அதிபதி சனி. ஆனாலும், அம்சகத்தில் நான்கு பாதங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோரின் தொடர்பு இருப்பதால் சுயமரியாதை, விவேகம், பொருளாதாரம், செயல்பாட்டில் சிறப்பு ஆகிய நான்கும் அவர்களிடம் தென்படும் என்கிறது ஜோதிடம்.

இந்த நட்சத்திரத்துக்கு செவ்வாய் தசை ஆரம்பம் 7 வருடங்கள் நீடித்திருக்கும். மிருகசீர்ஷத்துக்கும், சித்திரைக்கும் அது பொருந்தும். இவற்றை 'அர்த்தபம்’ என்று குறிப்பிடுவது உண்டு. 27 நட்சத்திரங்களில்... சம பங்காக இரண்டு ராசிகளில் பரவிய நட்சத்திரங்கள் இந்த மூன்றுதான். 'அர்த்தம்’ என்றால் பாதி; 'பம்’ என்றால் நட்சத்திரம். உடலில் இரு பக்கங்களுக்குப் பிரதிநிதியாக இருக்கும் சிரோ ரஜ்ஜுவில் இந்த மூன்றும் இணைந்திருக்கும். உடலில் 'சிரம்’ பிரதானம் என்று சொல்வதுண்டு. ரஜ்ஜுவில் சிரோ ரஜ்ஜு விலக்கத்தக்கது என்று பொருத்த சாஸ்திரம் கூறும்.

ராசிப் பொருத்தத்தில் ஷஷ்டாஷ்டகமாகவும், பஞ்சக நவமமாகவும் இந்த மூன்று நட்சத்திரங்கள் அமைவதால், அவற்றின் தாக்கமும் சிரோ ரஜ்ஜுவுடன் இணைந்திருப்பது... அவற்றை அறவே அகற்ற வழி வகுத்தது.

ஆறு, எட்டு ராசிகள் கேந்திர த்ரிகோண சம்பந்தம் இல்லாமலும், அதில் இருக்கும் கிரகங்களுக்கு ஒன்றுக்கொன்று பார்வை இல்லாத நிலை இருப்பதாலும், இருவரது பிரிவுக்குத் துணை போவதால், அதோடு இணைந்த சிரோ ரஜ்ஜுவை விலக்கினார்கள். சிரோரஜ்ஜுவை விலக்கும்போது ஷஷ்டாஷ்டகம், பஞ்சம நவமம் என்ற இரண்டு ராசிப் பொருத்தமின்மையும் தானாகவே விலகிவிடுகிறது. ஐந்து, ஒன்பது என்கிற ராசிப்பொருத்தத்தை விலக்கச் சொல்லும் ஜோதிடம் (பஞ்சமேநவவைதவ்யம்...). முக்குணங்களில் ரஜோ குணம் கலந்த தமோ குணத்தை செவ்வாய் எடுத்துக்காட்டுவதால், தரம் தாழ்ந்த வேளையிலும் சடுதியில் செயல்படும் உந்துதல், இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் ஓங்கியிருக்கும் என்கிறது ஜோதிடம்.

லக்னத்தில் இருந்து 7-ல் இருக்கும் செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பதால், மனைவியுடன் சச்சரவில் ஈடுபடும் உந்தல் இருக்கும். எனவே, செவ்வாய் தோஷத்தை விலக்கினார்கள். இவர்களில் (இந்த நட்சத்திரக் காரர்களுக்கு) முதல் தசையாக செவ்வாய் வருவதால், அவர்களின் இயல்பில் அந்தத் தன்மை இருப்பதால் சிரோ ரஜ்ஜுவை விலக்கினர்.

பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாய், கணவனை இழக்கவைக்கும் என்கிறது ஜோதிடம். பெண் ஜாதகத்தில் கணவனின் ஸ்தானம் 7-ஆம் வீடு. 7-ஐ கணவனின் லக்னமாக வைத்துப் பார்க்கும் தறுவாயில், அவனது இரண்டில் (அதாவது பெண்ணின் எட்டு) மாரக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய்...  கணவனின் எட்டை, அதாவது பெண்ணின் இரண்டை  (அவளது மாரக ஸ்தானம்) பார்ப்பது, கணவனின் ஆயுளை இழக்க வைக்கலாம். அதாவது, மாரக ஸ்தானத்தில் இருக்கும் பாப கிரகம் (செவ்வாய்) ஆயுள் ஸ்தானத்தை (எட்டை) முழுப் பார்வையாகப் பார்ப்பதால் ஆயுளைப் பாதிக்கலாம் என்கிற நோக்கில் பெண்ணின் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாய்க்கு தோஷம் என்றார்கள். ஆண் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாய் லக்னத்தைப் பார்ப்பதால், மனைவி யுடன் சச்சரவு இருக்க வாய்ப்பு உண்டு என்றார்கள்.

ஆண் ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாயை களத்ர தோஷம் என்பார்கள். 'களத்ரம்’ என்றால் 'மனைவி’ என்று பொருள். மனைவியின் இழப்பு, பிரிவு அல்லது சண்டை- சச்சரவு எது வேண்டுமானாலும் நிகழலாம். ரஜோகுணம் கலந்த தமோகுணம் கண்மண் தெரியாமல் நடந்துகொள்ளவும் வைக்கலாம். ஆத்திரம் மேலிட்டு திடீர் முடிவையும் எடுக்கலாம் என்பதால், அதை களத்ரத்துக்கு, அதாவது மனைவிக்குக் கெடுதல் என்றார்கள்.

ஆண் ஜாதகத்தில் 7-ஆம் பாவம்- பெண்ணின் லக்னம். லக்னத்தில் செவ்வாய் இருந்துகொண்டு (அதாவது ஆணின் 7-ல்), 7-ஆம் பாவமான லக்னத்தையும், 8-ஆம் பாவமான (ஆண் ஜாதகத்தின் மாரக ஸ்தானமான இரண்டு) ஆயுஷ் ஸ்தானத்தையும் பார்க்கிறான். இப்போது லக்னம் பாபக்ரஹ யோகம். 7-ஐ, அதாவது கணவனிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பையும், 8-ஐ பார்ப்பதால் தனது ஆயுளையும் சீர்குலைய வைப்பதால், மனைவி தன்னை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

லக்னத்தில் (அதாவது புருஷனின் 7-ல்) செவ்வாய் இருந்து தனக்கு கெடுதலைப் பண்ணக் காத்திருக்கிறான் செவ்வாய். 7-ஆம் பார்வையால் அவளது பதிசௌபாக்யத்தை அகற்றிவிடுகிறான். அத்துடன் நிற்காமல், அஷ்டமத்தில் பார்ப்பதால் அவளது ஆயுளை யும் முடிவுக்குக் கொண்டுவந்து விடுகிறான் என்ற எண்ணத்தில், புருஷ ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாய்க்கு களத்ர தோஷம் சுட்டிக்காட்டப்பட்டது.

தான், தனக்குக் கிடைக்க வேண்டிய பதியின் ஒத்துழைப்பு, தனது ஆயுள் இந்த மூன்றிலும் செவ்வாய் தொடர்பு இருப்பதால், லக்னத்தில் செவ்வாய் (கணவனின் ஏழு), ஏழு மற்றும் எட்டைப் பார்க்கிறான் (கணவனின் லக்னம், கணவனின் மாரக ஸ்தானம்). இப்படி ஆயுளையும் சேர்த்துப் பார்ப்பதால், தோஷம் செயல்படும் விதத்தை வரையறுத்தார்கள் ஜோதிட மேதைகள். செவ்வாய்க்கு மட்டும் ஏழு மற்றும் எட்டை ஒருசேரப் பார்க்கும் தகுதி இருக்கிறது. செவ்வாயின் பார்வைக்கு வலு அதிகம் என்கிறது ஜோதிடம் (க்ரூர த்ருக்).

ஏறக்குறைய 35 வயதுக்குப் பிறகு இவர்கள் சனி தசையைச் சந்திப்பார்கள். சனி தசையானது 4-வது தசையாக வரும். அது மத்யாயுஸ்ஸை சுட்டிக்காட்டும். இதை எண்ணியும் சிரோ ரஜ்ஜுவை விலக்கச் சொல்வது உண்டு ரிஷிகள் எழுதிவைத்த பொருத்தங்களை ஏட்டுச் சுரைக்காயாக எண்ணக் கூடாது. சிந்தனைவளம் பெற்றவர்களுக்குப் பொருத்தத் தின் தரம் புரியும். யூகத்தில் விளையும் நிகழ்வு களை ஆதாரமாக்கி மார்க்கட்டிங்கும் கம்பெனி லா-வும் செயல்படுவது  உண்டு. பங்குச் சந்தையும் யூகத்தில் ஊசலாடும். பார்வையில் இருக்கும் பேதம், பொருத்தத்தைப் புறம்தள்ளும். பொருத்தத்தின் தகுதி இழக்கப்படமாட்டது.

கர்பேச்வரனாகப் பிறப்பான், கொடையாளி யாகத் திகழ்வான், வாய்ப்பாட்டு, வாத்திய இசைக்கருவிகளில் திறமை வெளிப்படும், அவற்றைப் பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் இருக்கும் என்று அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவனின் குணாதிசயங்களை விளக்குவார் வராஹமிஹிரர். சிரமப்படாமலேயே காரியத் தின் வெற்றியை எட்டுவான், எதிரிகளை முறியடிப்பான், பிறரது விருப்பத்தைக் காலம் பார்த்து நிறைவேற்றுவான் என்று மாறுபட்ட விளக்கத்தை பராசரர் கூறுவார்.

முதல் பாதத்தில் பொய் பேசுவான்; 2-ல் செல்வச்செழிப்பு; 3-ல் ஈச்வர பக்தி, 4-ல் சங்கீதப் பிரியன் என்று விளக்கம் தருகிறது பிருஹத் ஸம்ஹிதை. புதுப் புது விஷயங்களை அறிவதில் ஆர்வம், செல்வம், செல்வாக்கு, இன்பத்தைச் சுவைத்து மகிழும் இயல்பு, வாட்டசாட்டமான உடல் அமைப்பு ஆகியன அமைந்திருக்கும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

நான்கு தாரைகளை உள்ளடக்கியது அவிட்டம்; சர நட்சத்திரத்தில் அடங்கும். அசையும் பொருட்களின் அபிவிருத்திக்கு இதன் சேர்க்கை உதவும். சராசரம் என்ற உலகில், அசையும் பொருளோடுதான் நமது செயல்பாடுகள் அத்தனையும் நிகழ வேண்டும். அதை நிறைவுசெய்ய இந்த நட்சத்திரத்தின் பங்கு பயன்படும். விலங்கினங்களை... மனித இனத்துக்குப் பலவிதங்களில் பயன்படும் யானை, குதிரை, பசுமாடு போன்றவற்றைப் பராமரித்தல், இனப் பெருக்கத்துக்கு வழிவகுத்து உலகுக்கு உதவுதல்... அதாவது, ஜீவகாருண்ய நோக்கில் கடவுளின் படைப்பை பேணிக் காத்தல் ஆகியவற்றில் வெற்றிபெற இந்த நட்சத்திரம் உதவும் என்கிறார் பராசரர். கால புருஷனின் முட்டு, கால் முட்டு ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவன மகரம் மற்றும் கும்ப ராசிகள். அதன் அதிபதியின் தரத்தை வைத்து முட்டு, கணங்கால் ஆகியவற்றின் தரத்தை ஆராயலாம் என்கிறது ஜோதிடம்.

முதல் பாதத்தில் பிறந்தவன் வாட்டசாட்ட மானவன், ஆசையில் உழன்று தத்தளிப்பவன், ஈவு இரக்கமற்றவன், பசி- தாகத்தில் துன்பப் படுபவன். 2-வதில் சுறுசுறுப்பானவன், உண்மை பேசுபவன், அறத்தில் பற்றுள்ளவன், சாஸ்திரம் அறிந்தவன். 3-வதில் தற்பெருமையில் ஆர்வம் கொண்டவன், அபிமானம் மிக்கவன், லோகாயத வாழ்வில் பற்று கொண்டவன். 4-ல் தலைக்கனம், வலுவான உடல், பிறரைத் துன்புறுத்துவதில் ஆர்வம், சுயநலத்தில் பற்று... என்று ஒவ்வொரு பாதத்துக்கும் பலன் சொல்லும் பலசார ஸமுச்சயம். 'வம் வஸுப்யோ நம:’ என்று கூறி 16 உபசாரங்களைச் செய்யலாம். 'அஷ்டௌ தேவா’ என்கிற மந்திரத்தை உச்சரித்து வழிபடலாம். 'வஸுனாம் த்வாதீதேன’ என்கிற மந்திரத்தை 12 முறை சொல்லி நமஸ்கரிக்கலாம். 'ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரக்நாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ: ஆரோக்யம் யச்சந்து வஸு தேவதா:’ - இந்தச் செய்யுளை சொல்லி கைகள் நிறைய புஷ்பத்தை அள்ளி அளித்து வணங்குவதும் சிறப்பு.

ஒளி வடிவில் மிளிரும் நட்சத்திரங்களை வணங்குவது, நமது வாழ்க்கை வளத்தைப் பெருக்க உதவும். தான் பிறந்த நட்சத்திரமாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஜாதகத்தில் தென்படும் கிரகங்கள் அவிட்ட நட்சத்திரத்திலும் தொடர்புகொண்டிருக்கும். ஆகையால், விண்வெளியில் உலக இயக்கத்துக்கு உதவும் நட்சத்திரங்களை வணங்குவது பண்பு.

- வழிபடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism