Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செ
ன்னைலேருந்து திருச்சிக்கு எத்தனையோ முறை பஸ்ஸுல போயிருக்கோம். சிறுவாச்சூர் மதுரகாளி, செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்னு போயிட்டு, சமயபுரம் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணியிருக்கோம். ஆனா, திருப்பட்டூர்னு ஒரு அற்புதமான தலம் இருக்கிறதை லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அடையாளம் காட்டினது, சக்திவிகடன்தான்!'' என்று தினந்தோறும் பரவசத்துடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்கிற அன்பர்கள் ஏராளம்!

''கடந்த ஒண்ணரை வருஷமா, அதாவது திருப்பட்டூர் கோயில் பத்தி எழுத ஆரம்பிச்சதுலேருந்து அங்கே போயிட்டிருக்கோம். பிறகு பிரதோஷம், என் நட்சத்திர நாள், எங்க கல்யாண நாள், பேரனோட நட்சத்திரப் பிறந்த நாள்னு இப்ப ரெகுலராவே அந்தக் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சிட்டோம். இப்பெல்லாம் வீட்ல என்ன நல்லது கெட்டதுன்னாலும், 'அப்பா பிரம்மபுரீஸ்வரா... நீதான் துணை நிக்கணும்’னு ஒரு பிரார்த்தனையோடதான் எல்லா விஷயத்தையும் பாக்கறோம். இப்ப திருப்பட்டூர் கோயிலுக்கும் எங்க குடும்பத்துக்கும் மிகப் பெரிய பிணைப்பே ஏற்பட்டுடுச்சு!'' என்று சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை என எல்லா ஊர்களில் இருந்தும் நெக்குருகிச் சொல்கிறார்கள் வாசக அன்பர்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றிருந்த தருணத்தில்... அந்தக் கோயிலின் சிவாச்சார்யர் நடராஜ குருக்கள் சிலிர்ப்பு மாறாமல் பேசினார். ''திருப்பட்டூர் கோயிலுக்கு இதுவரைக்கும் போனதே இல்லை நான்.

ஆனா, தொடர்ந்து படிக்கப் படிக்க... அந்தக் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணணும்னு ஆசை வந்துது. அந்த தருணத்துல, 'ஆகமச் செல்வர்களுக்கு அருளும் திருத்தலம்’னு சொல்லி, உலகத்துல இருக்கிற அத்தனை சிவாச்சார்யர்களுக்கும் அருள்பாலிக்கிற சாந்நித்திய மான தலம்னு போட்டிருந்ததைப் படிச்சு சிலிர்த்துப் போயிட்டேன். 'தில்லை மூவாயிரம் திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ங்கற சொலவடை அந்தக் காலத்துல இருந்ததைப் படிக்கும்போது, அந்தக் கோயில் மீதான பிரமிப்பு இன்னும் இன்னும் கூடிக்கிட்டே போச்சு!

கோயிலுக்கு வர்றவங்களுக்காக, அவங்க பிரார்த்தனை நிறைவேறணுங்கறதுக்காக ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ற, பூஜைகள் செஞ்சு அர்ச்சனை பண்ற குருக்கள், தனக்குன்னு எப்பவுமே கேட்டுக்க மாட்டாங்க. சதா சர்வ காலமும் சதாசிவத்தையே நினைச்சுக்கிட்டிருக்கற சிவாச்சார்யர்கள், அந்தப் பரம்பொருள்கிட்ட வேற என்ன கேட்டுடப் போறாங்க?! ஸ்வாமியைத் தொட்டு கைங்கர்யம் பண்ற பாக்கியம்... இந்த ஜென்மத்துக் கொடுப்பினை. அப்படியிருக்கிற நிலைல அந்த சிவாச்சார்யர்களுக்கு, அர்ச்சகர்களுக்கு, குருக் களுக்கு... அவங்களோட குடும்பம் செழிச்சு, வம்சம் தழைச்சு வளரணுங்கறத்துக்கு அந்தத் தென்னாடுடைய சிவனார், திருப்பட்டூர் திருத்தலத்துல ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரா இருந்து அருள்பாலிக்கிறார்னா... இந்தத் திருத்தலம் மேலும் மேலும் ஒளிவீசப் போறதுக்குக் கேக்கவா வேணும்!'' என்று பெருமையுடன் தெரிவித்த அர்ச்சகர் நடராஜன், தாண்டவர்தோட்டம் எனும் அழகிய கிராமத்தில் உள்ள ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஆலயத்தில் கைங்கர்யம் செய்து வருகிறார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

தாண்டவர்தோட்டம் மகாபெரியவாள் அனுக்கிரகித்த திருத்தலம். அந்தக் கோயிலுக்கு காஞ்சி மகான் ஸ்ரீநடராஜ விக்கிரத்தை வழங்கி அருளியிருக்கிறார். கேரளாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் இன்றைக்கும் வந்து பெரிய விழா எடுத்துத் தரிசித்துச் செல்கின்றனர். விசாக நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபடவேண்டிய பரிகாரத் தலம். அந்தக் கோயிலின் குருக்களைப் போல, இன்னும் எத்தனையோ ஊர்களில் உள்ள கோயில் சிவாச்சார்யர்கள் சிலாகித்துப் பேசுகிறார்கள், திருப்பட்டூர் திருத்தலத்தை! அவர்கள் சொல்லச் சொல்ல... திருப்பட்டூரும் அதன் மகிமையும் வியக்க வைக்கிறது.

''தமிழகத்தில் சித்தர்களும் முனிவர்களும் திருச்சமாதியாக இருக்கும் இடங்களைத் தேடித் தேடி தரிசிக்கும் பழக்கம் உள்ளவன் நான்.

பதஞ்சலி யோகசூத்திரத்தைப் படித்து, அதனை முழுவதுமாக உள்வாங்கி, யோக சூத்திர விஷயங்களைக் கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கேன். அவரது சமாதியும் ஸ்ரீவியாக்ரபாதரின் சமாதியும் திருப்பட்டூர்ல இருக்கிறதைப் படிச்சுட்டு, அடுத்து வந்த வியாழக்கிழமை அங்கே போயிட்டேன். அடடடா... ஊருக்கு நடுவுல ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயமும், அதுக்குப் பின்னாடி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலும் பார்க்கறப்பவே மொத்தப் பாவமும் கரைஞ்சு காணாமப் போயிட்ட மாதிரி ஓர் உணர்வு..!'' என்று சிவனடியார் தட்சிணாமூர்த்தி கண்ணீர் ததும்ப விவரிக்கிறார். ஓசூரில் வேலை பார்க்கிற இவர், மாதம் ஒருமுறையேனும் திருப்பட்டூருக்கு வந்து தரிசிப்பதையும் சமாதிகளுக்கு முன் அமர்ந்து தியானிப்தையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

'திருப்பதிக்கு நிகரானது எனப் போற்றக்கூடிய திருத்தலமாகத் திகழப் போகிறது திருப்பட்டூர். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்து, வளமுடன் வாழச் செய்து அருளும் ஆலயமாக சிறப்புறப் போகிறது’ என்கிற ஓலைச்சுவடிக் குறிப்புக்குத் தக்கபடி, நாளுக்கு நாள் திருப்பட்டூர் நோக்கி வருகிற அன்பர்கள் அதிகரித்து வருகின்றனர். 'தரிசித்தோம்; எங்களின் தலையெழுத்து மாறி, வாழ்வில் உயர்ந்திருக்கிறோம்’ என்று சொல்பவர்கள் அதிகரித்தபடி இருக்கிறார்கள்.

''பன்னிரண்டு திருத்தலங்களுக்குச் சென்று ஸ்வாமியைத் தரிசித்த புண்ணியம், இந்தத் தலத்துக்கு வந்தால் கிடைக்கும் என்பதைப் படித்துவிட்டு, ஸ்ரீபிரம்மாவின் பேரருளைப் பெறச் சென்றோம். இழந்த பதவியைப் பெற என இந்தப் பன்னிரண்டு தலங்களின் சிவலிங்கத் திருமேனிகளையும் அங்கே ஸ்தாபித்து, வழிபட்டு, தவமிருந்த ஸ்ரீபிரம்மாவின் துணை கொண்டு, அத்தனை திருமேனிகளுக்கும் வில்வம் சார்த்தினோம்; வஸ்திரம் அணிவித்தோம். அன்னிலேருந்து வீட்ல இருந்த சிறு சிறு பிரச்னைகளும் சிக்கல்களும் திசை தெரியாமப் போய், இப்போ சந்தோஷமா இருக்கோம்'' என்று, பிரேமா எனும் 55 வயது வாசகி, தொலைபேசியில்  தெரிவித்தார். அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆனந்தமும் நிறைவும் கலந்திருந்ததை உணர முடிந்தது.

மகான்கள் வழிபட்ட தலம், அப்படித்தான் நம்மை ஏதோ செய்யும். கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்லும். வாழ்வில், இந்தப் பிறவியின் ஒவ்வொரு பொழுதிலும் பக்கத் துணையாக இருந்து வழிநடத்தும்!  திருப்பட்டூர் என்கிற தலம்,  இன்னும் பரவும்; இனம் புரியாத குதூகலத்தைத் தந்து, மகிழச் செய்யும்! ஒருமுறை... ஒரேயரு முறை... திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி, செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்! தெளிதலும் உணர்தலும் இருப்பின்... அதைவிட திருப்பம் வாழ்வில் வேறென்ன இருக்கிறது?!

எங்கே இருக்கிறது?

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு; ஆனாலும் குறைவுதான்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்.

(அடுத்த இதழில் நிறைவுறும்)

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்,
என்.ஜி. மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism