Published:Updated:

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

Published:Updated:
கேள்வி-பதில்
கேள்வி-பதில்
கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவீன விஞ்ஞானம் சொல்லும் தகவல்கள் பெரும்பாலும் நமது புராண- இதிகாசங்களில் சொல்லப்பட்டவையே! உதாரணத்துக்கு... இன்று நாம் குறிப்பிடும் பால்வெளி எனும் பதத்தையே, 'பகவான் உறையும் பாற்கடல்’ என்று புராணங்கள் உருவகப்படுத்தி விவரிப்பதாகச் சொல்கிறான் நண்பன் ஒருவன். அண்டசராசரம், அவற்றின் தோற்றம் குறித்துப் புராணங்கள் சொல்வதென்ன?

- தி.ரவிசங்கர், திருவண்ணாமலை

'பூமி உருண்டை’ என்கிற உண்மையை 450 வருடங் களுக்கு முன்பு வாழ்ந்த ஸ்பானிஷ் கப்பல் பயணியான 'மெகல்லன்’ கண்டுபிடித்ததாகச் சொல்வர். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, வேதமும் அதை ஒட்டிய நூல்களும் பூமி உருண்டை என்றே சொல்லிவந்தன. 'அண்டம்’ முட்டை வடிவம் என்கிறது புராணம். வேத காலத்து வேதம் ஓதுபவர்கள், 'அனேக கோடி ப்ரம்மாண்டானாம் மத்யே’ என்று சங்கல்பம் செய்வது உண்டு. படைப்பவன் முதலில் நீரைப் படைத்தான். அதன் பிறகு, அதில் ப்ரம்மாண்டத்தை, அதாவது உருண்டை வடிவில் பூமியைப் படைத்தான் என்கிறது புராணம் (அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸீவீர்யமபாஸ்ருஜ்தத தண்டம பவத்ஹைம் ஸஹஸ்ராம்சுஸமப்ரபம்).

ஆனால், 'பூமி உருண்டை; கோள வடிவமானது என்பதைக் கண்டுபிடித்தது வெளிநாட்டவன்தான். நாம் எல்லோரும் பூமி தட்டையாக இருப்பதா  கவே நினைத்தோம். அவன்தான் நம் கண்ணைத் திறந்து உண்மையை விளக்கினான்’ என்று நம்மவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பது வேதனை அளிக்கிறது.

பல உதாரணங்களைக் காட்டி... எலுமிச்சம்பழம், எறும்பு, கப்பல் - கொடிமரம் என்றெல்லாம் விளக்கி, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் இன்றும் உண்டு. சந்திரனில் மண்ணும் நீரும் இருப்பதை வேதமும் ஜோதிடமும் பறைசாற்றியும் காதுக்கு எட்டவில்லை நம்மவர்களுக்கு.

அதேநேரம், (சமீபத்தில் வந்த நாளேட்டில்) 'இன்றைய நம்மவன் (நிகழ்காலத்தில் வாழும்) ஒருவனே கண்டுபிடித்தான் என்று எழுதவும் துணிகிறார்கள்! 'பழைய சோறு இன்டர்நேஷனல் பாக்கிங்கில் யு.எஸ் முத்திரையுடன் வந்தால், அதை வாங்கிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரியோர்களும் நம்மில் உண்டு. அடிமைத்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

'பாலாழி மதனம்’ என்ற நிகழ்வு, வஸந்த ஸம்பாதம் ஆண்டின் ஆரம்ப மாக இருப்பதை மறைமுகமாக விளக்கு கிறது. ஸாயனத்தை நிரயனமாக்கிய செயல் நன்மையை விட தீமை அதிகம் என்கிறது. ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் பன்மடங்கு அதிகம் என்பதை அநாயாசமாக தனது காப்பியச் செய்யுளில் கதைக்கு உகந்த உதாரண மாகக் காட்டிவிட்டான் காளிதாசன். ஆனால் நம்மவர்களோ அதை வெளி நாட்டானின் அருளால் கிடைத்த தகவலாக வெளியிடுகிறார்கள்.

15 வருடங்கள் ஆராய்ச்சியில் பொழுதுகளை வீணாக்கி, 'கங்கை நீரில் விஷக் கிருமிகள் அழிந்துவிடுகின்றன’ என்று வெளிநாட்டுக்காரன் சொன்னால், அதைக் கேட்டு நம்மவன் கங்கை ஜலம் உயர்ந்தது என்கிறான்! 'இமம் மே கங்கே யமுனே ஸரஸ்வதி’ எனும் வேத வாக்கு அவர்கள் காதில் விழுந்தாலும், அந்நியருக்கு உயர்வு அளிப்பதைப் பண்பாக எண்ணுகிறார்கள்.  இடைப்பட்ட நாளில் நம் வேதகால சிந்தனைக்கு ஏற்பட்ட இழுக்கு இன்னும் அழியவில்லை. கைகள் இருந்தும் ஸ்பூனால் உணவருந்தும் பழக்கம் தொடர்கிறது. வெள்ளையர் வெளியேறி 65 ஆண்டுகள் கழித்தும்கூட, நமது குழந்தைகள் அவர்களது பண்பாட்டை வளர்த்துக் கொண்டிருக் கின்றனர். பூமியின் ஆகர்ஷண சக்தியை ஆர்யபட்டர் சொன்னாலும், அந்தப் பெருமையை வெளி நாட்டவருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் தாராளம் நம்மவர்களுக்கு உண்டு. தரம் வாய்ந்த கேரள முந்திரிப் பருப்பும், வடநாட்டு பாஸ்மதியும் யு.எஸ்-ல் கிடைக்கும். நாம் சுவைப்பதோ இரண்டாம் தர- மூன்றாம் தர பொருட்களையே! அவன் உயர்ந்தவன்; உயர்ந்த பொருள் அவனுக்கு உரியது என்று பக்தி சிரத்தையுடன் நாம் அனுப்பி வைக்கிறோம். விண்வெளியில் வளைய வரும் கிரகங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், கிழமைகள், ஆண்டுகள் அத்தனையும் உலகுக்கு அளித்த ஜோதிடம் திரைமறைவில் தள்ளப்பட்டுவிட்டது. ஆங்கில ஆண்டைக் கொண்டாடுவதில் நம்மவர்களுக்குத் தனி ஆனந்தம். உயிருள்ளவரைக்கும் தம்பதியாக வாழ்ந்து அனுபவிக்கும் நம்மை, விவாகரத்தை ஏற்கவைத்துவிட்டது புதிய கலாசாரம்; அது நம்மவர் களுக்கு இனிக்கிறது.

வேத சிந்தனைகள், சாஸ்திரக் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்டும், படித்தும்... பொறாமை கொண்ட அவர்கள், அவற்றின் நல்ல விளக்கத்தை மறைத்து கசப்பை உமிழ்ந்திருப்பதை இன்னும் நாம் உணரவில்லை. வேதம், அதைப் பின்பற்றி வெளி வந்த சாஸ்திரங்கள்... ஏன் பௌத்தம், ஜைனம் தொடர்பான நூல்களும், அணுவையும் அதன் உட்பிரிவான பரமாணுவையும் அவற்றின் செயல்பாட்டையும் எடுத்துரைக்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அணு விதிகள் அயல் நாடுகளின் வெகுமதி என்பவர்களும் உண்டு. நம்மவர்கள் விழித்துக்கொள்ளப் பல காலம் ஆகும். லோகாயத வாழ்க்கையில் இருந்து ஆன்மிக வாழ்க்கையில் பார்வையைச் செலுத்தும் பக்குவம் வரும் வேளை இன்னும் வரவில்லை.

எட்டு வயது வரையிலும் ஒருவனுக்கு நிகழும் இன்ப- துன்பங்களுக்குக் காரணம், அவன் பெற்றோரின் வினை. 8 வயதுக்குப் பிறகான நிகழ்வுகளுக்கு அவனது முன்வினையே காரணம் என்று விவரித்தார் சொற்பொழிவாளர் ஒருவர். எனில், பெற்றோரின் பாவ- புண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?

- லதா சடகோபன், மானாமதுரை

அவனவன் செய்த புண்ணிய - பாபங்கள் அவனவனிடம் தோன்றி அலைக்கழிக்கவோ, மகிழ வைக்கவோ செய்யலாம். ஒருவரது செயல்பாடு, மற்றவரிடம் புண்ணியமாகவோ பாபமாகவோ மிளிராது. தன் வினை தன்னைச் சுடும்.

##~##
நீங்கள் குறிப்பிடும் சொற்பொழிவாளரது கூற்று ஏற்கத்தக்கது அல்ல. 'எட்டு வயது வரை’ என்ற நிர்ணயத்தை நாம் வகுக்க இயலாது. கருவறையில் இருந்து வெளி வந்ததும், ப்ராரப்த கர்மம் தனது வேலையைத் துவங்கிவிடும். பிறந்த குழந்தையின் முன் ஜன்ம செயல்பாடு பிராரப்த கர்மமாக உருவெடுக்கிறது. ஆக, எட்டு வயது வரைக்கும் பெற்றோரின் முன்வினையே காரணம் என்பதை ஏற்கமுடியாது. முற்பிறவிகளில் சேமித்த கர்ம வினைகளின் பலன் என்ன என்பதையும், எப்போது என்பதையும், அதை உணரும் வேளையையும் சுட்டிக்காட்டுவது ஜோதிடமே (யதுபசிதமன்ய ஜன்மனி...). அப்படியிருக்க செயல்பாடு ஒருவனிடம்; அனுபவிப்பது மற்றொரு வன் என்கிற கோட்பாடு ஜோதிடத்துக்குப் பொருந்தாது. ஆயிரக்கணக்கான மாடுகள் நிறைந்த மந்தையிலும் கன்றானது தனது தாயை அடையாளம் கண்டு இணைந்துவிடும். அதுபோல் முன்ஜென்ம கர்மவினையானது, செய்தவனை அடையாளம் கண்டு இணையும் என்கிறது ஜோதிடம். அவரவர் கர்மவினை அவரவரையே சேரும். தற்கால சூழலில் பாமரர் கள் மத்தியில் சாஸ்திர விழிப்பு உணர்வு குறைந்து காணப்படுவதே தவறான தகவல்கள் உருவாகக் காரணம். ஆகவே, எவர் எதைச் சொன்னாலும் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, அதில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டும்.

பிராமணர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது கணம், யோனிப் பொருத்தம் இல்லாத நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா? பையனுக்கு 37 வயதும் பெண்ணுக்கு 33 வயதும் ஆகிவிட்டதால் பொருத்தம் எல்லாம் பார்க்கவேண்டாம்; திருமணம் செய்யலாம் என்கிறார்கள். தங்களின் அறிவுரை தேவை.

- எல்.வி.கணேசன், சென்னை-53

கேள்வி-பதில்

கணப் பொருத்தம் என்பதில்... தேவ கணம், மனுஷ்ய கணம், ராக்ஷஸ கணம் ஆகிய பிரிவுகளில் 27 நட்சத்திரங்களையும் சேர்த்து இருக்கிறார்கள். அவை, நட்சத்திரங்களின் தகுதி நிர்ணயம் செய்யும் விஷயம்.

மென்மையான நட்சத்திரம், கடினமான நட்சத்திரம் என்ற பாகுபாடும் நட்சத்திரங்களுக்கு உண்டு. இந்த நட்சத்திரம் இரண்டு தாரைகளின் கூட்டு; இது, ஐந்து தாரைகளின் தொகுப்பு என்கிற பாகுபாடும் உண்டு. இது கீழ் நோக்கியது, இது மேல் நோக்கியது என்கிற பேதமும் உண்டு. இவை அத்தனையும் நட்சத்திரங்களின் தரத்தை நிர்ணயம் செய்ய உதவும். அதே நேரம், பிறந்த மனிதனின் தரத்தை நிர்ணயம் செய்ய இது போதாது. அவன் மனுஷ்ய கணமா, ராக்ஷஸ கணமா, தேவ கணமா என்பதை அறிய அவனது சிந்தனையை ஆராய வேண்டும். அதுதான் அவனது இயல்பைச் சுட்டிக்காட்டும்.

பெண்- ஆண் யோனி; புருஷன்- பெண் யோனி என்று சொன்னாலும், நேரடியாக ஆணும் பெண்ணும் தெளிவாகத் தெரியும்போது, அந்தக் கூற்று செயலற்றுவிடும். யோனிகளை சாஸ்திரம் வரையறுத்துக் கூறுகிறது (ஸ்தனகே சவதீநாரீ லோமச: புருஷ: ஸ்ம்ருத:). ஆயுர்வேதமும் யோனி நிர்ணயத்துக்கு ஒத்துழைக்கும். அப்படியிருக்க விபரீதமான யோனியைச் சொல்லும் தகவல், நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறது.

ஜோதிடம் சொல்லும் 10 பொருத்தத்தை தர்மசாஸ்திரம் நம்பாது. ஜோதிடத்தின் யூகம் சில நேரம் பொய்த்துவிடும்.தாம்பத்தியத்தின் அஸ்திவாரமாகத் திகழும் பொருத்தங்களை தர்மசாஸ்திரம் வெளியிடும். அவற்றை நம்பகமானது என நம் மனமும் ஏற்றுக் கொள்ளும். நிறைய பந்துக்கள் இருக்க வேண்டும், ஒழுக்கம் இருக்க வேண்டும், ஆணுக்குப் புருஷ லட்சணமும் பெண்ணுக்கு ஸ்த்ரீ லட்சணமும் இருக்க வேண்டும், நோயின்றி இருக்கவேண்டும், படித்திருக்க வேண்டும்... இவ்வாறு இருவரது பொருத்தத் தையும் வரையறுக்கும் தர்ம சாஸ்திரம். இந்தத் தகுதிகள் தென்பட்டால் விவாஹம் செய்யலாம் என்று சொல்லும் (பந்து சீல லக்ஷண ஸம்பன்னாம் அரோகாம் உபயச்சத...).

நட்சத்திரப் பொருத்தத்தை வைத்து சாஸ்திரம் சொன்ன லட்சணத்தை வரையறுக்க இயலாது. பந்துக்கள், நல்லொழுக்கம், ஆண்- பெண் இலக்கணம், ஆரோக்கியமான உடல், படிப்பு - ஆகிய அத்தனையையும் பத்து பொருத்தம் சொல்லாது. அப்படியிருக்க கணம், யோனி இல்லையென்றால் கல்யாணம் பண்ணலாமா என்ற கேள்வி எழாது.

திருமணத்துக்கு வயதை நிர்ணயிப்பது தர்மசாஸ்திரம்; ஜோதிடம் அல்ல. ஆகையால், ஜோதிடம் பொருத்தம் பார்ப்பதற்கு வயது நிர்ணயம் செய்யாது. அப்படி நினைப்பது அறியாமை. இருவரின் இணைப்பில் இன்பம் காண இயலும் என்பதைப் பொருத்தம் சொன்னால், அதை ஏற்கலாம். பொருத்தம் பார்ப்பதற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை. எந்த வயதானாலும், சேர்ந்திருக்க வேண்டுமானால் பொருத்தம் தேவை. நீங்கள் வயது வரம்பை வைத்துக் கொண்டால், பொருத்தம் பார்க்காமலேயே கல்யாணம் செய்யலாம் என்று வந்துவிடும். பொருத்தத்தைத் தவிர்க்க பல பேர் 37 வயது வரை காத்திருப்பர். இது சாஸ்திரத்தை கேலிக்கூத்தாக மாற்றுகிறது. அந்த அளவு நம் மனம் மாறக் கூடாது.

பொருத்தத்தை ஒதுக்கிக் கல்யாணம் பண்ணலாம்; தவறு இல்லை. ஆனால், அதைக் கேலிக்கூத்தாக்குவது தவறு.

தன் குருகுல நண்பனும் மன்னனுமான துருபதன் தன்னை அவமதித்ததற்காக அர்ஜுனன் மூலம் அவனை துரோணர் பழி வாங்கியதாகச் சொல்கிறது பாரதம். 'இது தவறு, ஓர் ஆசார்ய புருஷருக்குப் பழிவாங்கும் எண்ணம் எழக்கூடாது!’ என்கிறான் நண்பன். எனக்கோ துரோணாச்சார்யரின் செயலில் ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுகுறித்து விளக்குங்களேன்.

- கே.மதிவண்ணன், தென்காசி

ஆசார்ய புருஷனுக்குப் பழிவாங்கும் எண்ணம் வரக்கூடாது என்றால், மற்றவர்களுக்கு வரலாம் என்று அர்த்தமா? வேதம் ஓதுபவனுக்கு மட்டுமா ஸந்தியாவந்தனம்; மற்றவர்களுக்கும் வேண்டாமா? பெரியோர்களுக்கு மட்டுமா நன்னடத்தை? மற்றவர்களுக்கு விதிவிலக்கா?!

பெரியோர்களுக்கும் ஆசார்ய புருஷர்களுக்கும் மட்டும்தான் கட்டுப்பாடு, நல்ல நடைமுறைகள் எல்லாம் பொருந்துமா? நமக்கெல்லாம் தேவை இல்லையா? நாம் என்ன கட்டுப்பாடில்லாத சுதந்திர பிராணிகளா? ஆசார்ய புருஷன் தனது இலக்கணத்துடன் இருக்க வேண்டும், மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கருதி, பெரியோர்களின் செயல்பாடுகளில் குறை கண்டு தம்மை உயர்த்திக்கொள்ளும் பண்பாடு நம் நாட்டில் இருக்கவில்லை. உங்கள் நண்பரின் எண்ணம் தவறு. கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் உண்டு. கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டான் துருபதன்.

அவனைத் திருத்த பழிவாங்கல் அவசியம். இல்லையெனில் விழித்துக்கொள்ள மாட்டான். அவனை நல்லவனாக்க, அவனது அகங்காரத்தை அழிக்க அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இன்றைய சூழல் போன்று நண்பனை அழிக்கும் எண்ணம் எழாது;திருத்தும் எண்ணம்தான் வரும் துரோணருக்கு. இந்த நிகழ்வுக்கு பிறகு அவன் நல்லவனாக மாறினான்.

மான நஷ்ட வழக்குகள் நமது நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. தான் பட்ட அவமானத்துக்காக... அதற்குக் காரணமானவனை துன்புறுத்தும் விதமாக மானநஷ்ட வழக்கு போடுவதில் அர்த்தமில்லை. அந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் நமது மானம் சிறப்பாகிவிடுமா என்ன? அனுபவத்தை அழிக்க இயலுமா? ஆனாலும், அதையே பெருமை யாக எண்ணுகிறது நமது சமூகம்! இல்லாத சுகத்தை இருப்பதாக நினைப்பது அறியாமை.

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும். ஒருவன் பாம்புக்கு உபதேசம் செய்தான். 'உன்னை, யார் துன்புறுத்தினாலும் நீ சும்மா இருந்துவிடு. பழிக்கு பழி வேண்டாம்’ என்றான். பாம்பும் அதற்கு செவி சாய்த்து, சும்மா இருந்தது. பலரது துன்புறுத்தலால் அடிபட்டு துவண்டும் போனது. உபதேசித்தவனை அணுகியது. 'என்னால் துன்பத் தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே, என்ன செய்வது?’ என்று வினவியது. உடனே அவன், 'கடிக்க வேண்டாம் என்றுதான் உன்னை அறிவுறுத்தினேனே தவிர, படமெடுத்து சீறி பயமுறுத்த வேண்டாம் என்று சொல்லவில்லையே? எதிரியை பயமுறுத்தி அண்டவிடாமல் செய்துவிடு!’ என்று சொன்னானாம்.

'முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். மறைமுகமாக எதிர்ப்பவனை நாமும் அப்படியே எதிர்க்கலாம்; வஞ்சிப்பவனுடன் அவன் வழியில் பொருதலாம்’ என்பார் சாணக்கியன் (சடேசாட்யம் சமாசரேத்) ஸாம, தான, பேத, தண்டம் என்கிற நான்கில்... முதல் மூன்றால் முடியாததை, நான்கா வதைக் கொண்டு முடிக்கலாம். தன்னால் எதிர்க்க இயலாத துருபதனை, அர்ஜுனனின் உதவியுடன் துரோணர் எதிர்த்ததில் தவறு இல்லை.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில்