Published:Updated:

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

Published:Updated:
ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரு சில மாதங்களுக்குத் தனிப்பெருமை உண்டு. அவற்றில் ஆடி மாதமும் ஒன்று.  ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம், தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இப்படி ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர். இவற்றில், தட்சிணாயனம் மழைக்காலத் துவக்கத்தையும் உத்தராயனம் கோடைகாலத் துவக்கத்தையும் குறிப்பிடுகின்றன.

மழைக்காலத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லாவிட்டால் எதுவும் நடக்காது! 'அதனால்தான் நமது முன்னோர்கள் காலத்தில் 'ஸிணீவீஸீ ஸிணீவீஸீ ரீஷீ ணீஷ்ணீஹ்’ என்று பாடாமல்,  'அன்னையின் அருளே வா, வா... அடைமழையாகவே வா, வா’ என்று பாடும்படிச் சொல்லிக் கொடுத்தார்கள். குழந்தைகளும் கள்ளமில்லாத மனதுடன் அப்படியே பாடினார்கள். மழையும் கொட்டியது.

ஆடி மாதத் துவக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் தொடங்கும். ஆடிப் பதினெட்டு அன்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் (அந்தக் காலத்தை நினைத்து ஏங்க வேண்டாம்!). அந்த ஆடிப் பதினெட்டு அன்று நமது முன்னோர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை சற்று நினைத்துப் பார்க்கலாம்!

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

நமது தட்சிணாயனம் என்பது தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயனம் அவர்களுக்குப் பகலாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தட்சிணாயனத்தின் தொடக்கமான ஆடி மாதம், தேவர்களுக்கு மாலைக் காலம் (புரியும்படியாகச் சொல்வதென்றால், மாலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணி வரையுள்ள இடைப்பட்ட இரண்டு மணி நேரம்).

அந்தி சாய்ந்தவுடன், கன்று, தாயைத் தேடும். தாய்ப் பறவையைக் குஞ்சுகள் தேடும். அனைத்து  ஜீவராசிகளும் அன்னையைத் தேடும். அதுபோலத்தான், தேவர்களின் மாலை நேரமான இந்த ஆடி மாதத்தில் 'அன்னையின் அருளே... வா, வா! அடைமழையாகவே வா, வா!’ என்று அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து அவள் அருளை வேண்டியது மனித குலம்.

'முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளைப் போல மழையே, நீ பொழிவாய்!’ என்று  திருவெம்பாவையிலும் இந்த வேண்டுதல் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வேண்டுதலின்படி, அன்னையின் அருள் மழையாகப் பொழிந்து, வெள்ளமாக ஓடியது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக 'ஆடிப் பதினெட்டு’ என்று கொண்டாடினார்கள்.

அது ஏன் பதினெட்டு?

பதினெட்டு என்ற எண் 'ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

அந்த ஆடிப் பதினெட்டு விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள். விழாவுக்குப் பத்து நாட்கள் முன்னதாகவே, ஒரு தட்டில் நவதானியங்களை தூவி, தண்ணீர் தெளித்து, சிறிதளவு மண்ணையோ அல்லது எருவையோ கலந்து மூடி வைப்பார்கள். விழாவுக்குள் அது முளைத்து, வெண்மையாக வளர்ந்து இருக்கும். இதை 'முளைப்பாலிகை’ என்பார்கள் (முளைப்பாரி என்றும் சொல்வதுண்டு.) ஆடிப் பதினெட்டு தினத்தன்று பெண்கள் இந்த முளைப்பாலிகையைக் கையில் ஏந்தி, பிற்பகல் வேளையில் அணிவகுத்தபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அப்படிப் போகும்போது, வழியில்

முக்கியமான இடங்களில் முளைப்பாலிகையைத் தங்கள் தலையிலிருந்து இறக்கி வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கும்மியடிப்பார்கல். இந்த ஊர்வலம் ஆற்றங்கரை போய்ச் சேர்வதற்கு ஏறத்தாழ மூன்று மணி நேரமாகும்.

ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, சர்க்கரை போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கலந்து, அந்தப் பாத்திரங்களை பிள்ளையார் முன் அடுக்கி வைத்துப் பிரார்த்திப்பார்கள். சூடம் ஏற்றி வணங்குவார்கள். அப்போது பழுத்த சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்கள் எல்லோருக்கும் மஞ்சள் தடவிய நூல் கயிற்றைக் கொடுப்பார். அதைச் சிலர், கழுத்திலும் சிலர், கையிலும் கட்டிக் கொள்வார்கள். இதன் பிறகு பெண்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று கோலாட்டம், கும்மி என்று ஆடுவார்கள். இது முடிந்ததும், அவரவர் கொண்டுவந்த முளைப்பாலிகைத் தட்டுடன் ஆற்றில் இறங்குவார்கள்.

முளைப்பாலிகையைச் சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலையையும், சிறிய கறுப்பு மணிகளாலான கருகமணியையும் ஆற்றில் விடுவார்கள்.

'பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வரவால் பயிர், பச்சைகளெல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள்!’ என்ற ஐதீகத்தில்தான் இவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன. கிராமத்தில் உள்ள சிறுவர்கள் அன்றைய தினத்தில் சப்பரம் எனப்படும் சிறிய தேர் ஒன்றை வீதிகளில் உற்சாகமாக ஓட்டிச் செவர்.

சப்பரம் பற்றித் தெரியாதவர்களும் ஒரு சிறு விளக்கம்:

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு!

தேர் போல் சின்னஞ்சிறு வடிவத்தில் இருக்கும். நான்கு சக்கரம் இருக்கும். அழகான சிறு கோபுரமும் இருக்கும். காகிதப் பூ வேலைப்பாடுகள் கண்களைக் கவரும். மென்மையான மரங்களினால் செய்யப்பட்ட சப்பரங்களை, ஆடிப் பதினெட்டுக்கு மூன்று நாள் முன்னதாகவே, ஆற்றங்கரையில் கொண்டுவந்து வைத்து விற்பார்கள்.

பதினெட்டாம் பெருக்கு அன்று, இந்தச் சப்பரங்களைத் தெருவில் இழுத்தபடி, அதிகாலையில் இருந்தே குழந்தைகள் வீதிகளின் வழியாகச் சத்தம் எழுப்பியபடி குதூகலமாகச் செல்வார்கள். மாலையில், சிறு அகல்விளக்கு அல்லது மெழுகுவத்தி ஏற்றிச் சப்பரத்தில் வைத்து, இழுத்துச் சென்று குதூகலமாகக் கொண்டாடுவார்கள்.இது தவிர, சப்பரம் ஒன்றை அலங்கரித்து, அதற்குள் பூ முதலான மங்கலப் பொருட்களை வைத்து, ஆற்றில் மிதக்க விடும் பழக்கமும் உண்டு. சிலர், மங்கலப் பொருட்களுடன் புதுத் துண்டு அல்லது வேட்டியை வைத்துக் கொஞ்சம் சில்லறைக் காசுகளையும் சப்பரத்தில் வைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட சப்பரம், ஆற்றின் போக்குக்கு ஏற்ப வளைந்தும் சுழன்றும் நெளிந்தும் ஆடி ஆடி வருவதைக் கண்டு, கைகளைக் கொட்டிக் குலவை இடுவதைப் போலக் கத்தி, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்.

சிறுவர்கள், ஆற்றின் கரை அருகிலேயே ஆழமில்லாத பகுதியில் தண்ணீரில் கும்மாளம் போட... வாலிபர்களோ, கரையில் இருக்கும் மரங்களின் மீதேறி, ஆற்று வெள்ளத்தில் குதிப்பார்கள். தைரியசாலிகளான சிலர், ஆற்று வெளத்தில் நீந்திப் போய், மிதந்தபடி வரும் அழகு சப்பரத்தைக் கைப்பற்றி, அதில் உள்ளவற்றை எடுத்துக் கொண்டு கரைக்குத் திரும்புவார்கள்!

ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, பிள்ளையார் முன்னால் அடுக்கி வைக்கப்பட்ட பாத்திரங் களிலிருந்து, சர்க்கரையுடன் சேர்ந்த பச்சரிசியை எடுத்து வந்திருப்பவர்களுக்கு வினியோகம் செய்வார்கள் சிலர், தாங்கள் கொண்டு வந்திருக்கும் தேங்காய் சாதம், புளியஞ்சாதம், தயிர்சாதம் முதலான பல வகையான அன்னங்களை ஆற்றங்கரையிலே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளினால் நன்றி மறவாமை, குடும்ப ஒற்றுமை, பொதுவான ஒற்றுமை, மகிழ்ச்சிகரமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவின.

கடலோடு நதி கலந்து வேற்றுமை இன்றி இருப்பதைப் போல, கணவனும் மனைவியும் வேற்றுமை இன்றி வாழ்ந்தார்கள். ஆடிப்பெருக்கு வைபவத்தால் விளைந்த நல்லவை இவை.

படங்கள்: செ.சிவபாலன்.
(4.8.2005 சக்தி விகடன் இணைப்பிதழிலிருந்து.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism