Published:Updated:

நம்பினார் கெடுவதில்லை!

கிருஷ்ணா.. கிருஷ்ணா!

நம்பினார் கெடுவதில்லை!

கிருஷ்ணா.. கிருஷ்ணா!

Published:Updated:
நம்பினார் கெடுவதில்லை!
##~##
செ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்னையின் மிக முக்கிய பகுதியான தியாகராய நகர்- பாண்டிபஜாரில், தணிகாசலம் தெருவில் அழகே உருவாக அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோயில்.

சுமார் 80 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஒருகாலத்தில் நந்தவனமாகத் திகழ்ந்ததாம். இப்போது, கோயிலை மட்டுமே தரிசிக்கமுடிகிறது. எனினும், கோயிலுக்கு முன்னால் உள்ள அரசமரம், சூழலை ரம்மியமாக்குகிறது.

கோபுரம் இல்லையெனினும் கோயில் மிக அழகு. உள்ளே  முகப்பில் ஒரு விநாயகர், ஸ்ரீகிருஷ்ணனின் சந்நிதிக்கு பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு விநாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். தவிர வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீநடராஜர்- சிவகாமியம்மை ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். முருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், தீபாவளியை அடுத்து சில தினங்கள் கழித்து நிகழும் திருக்கல்யாணமும் இவருக்கு விசேஷம்.

கருவறையில் குழந்தை வடிவிலான கிருஷ்ணன், ராஜ அலங்காரத்தில் அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும்.தினமும் காலை 8:30 மணிக்கு பூஜைகள் நடைபெறும் வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேக- அர்ச்சனைகள், பால்பிரசாத நைவேத்தியத்துடன் ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும், அஷ்டமி திருநாட்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ அலங்காரத்துடன், அவல், நாட்டு சர்க்கரை, பால் கலந்த பிரசாதம் மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனைகளுடன் வழிபாடுகள் அமர்க்களப்படும்! ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாளின்போது செய்யப்படும் பிரமாண்ட மலர் அலங் காரம் இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

நம்பினார் கெடுவதில்லை!
நம்பினார் கெடுவதில்லை!

''இந்த கிருஷ்ணரை வழிபட்டு வளம் பெற்றவர்கள் ஏராளம். இவரை தவறாமல் வழிபட்டு வந்த நிறையப்பேர் இன்று வெளி நாடுகளில் செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள்'' என்று சிலிர்ப்புடன் சொல்லும் பக்தர்கள், ''கண்ணன் மீதான பக்தியால் முத்தையா என்ற தனது இயற்பெயரை மாற்றிக்கொண்ட கவிஞர் கண்ணதாசன் வாரம் இருமுறை இந்தக் கோயிலுக்கு வருவார். அவருடன் அமரர் எம்.ஜி.ஆரும் அடிக்கடி இங்கு வந்திருக்கிறார்'' என்கிறார்கள் பெருமிதம் பொங்க!

குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தும் அன்பர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீகிருஷ்ணரை மனதார வழிபட்டு, தொட்டில் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் விரைவில் பலன் கிடைக்க... மறுமுறை குழந்தையுடன் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்கிறார்கள்.

எந்த ஊரில், நாட்டில் இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாளில் இந்தக் கோயிலுக்கு வந்துவிடும் அன்பர்கள் பலரும் தங்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் இந்தக் கண்ணனே காரணம் என்று நம்புகின்றனர்.

நம்பினார் கெடுவதில்லை... நாமும் அந்த நாரணன் நம்பியைச் சரணடைவோம்; நலம்பட வாழ்வோம்!

             - செ.திலீபன்
படங்கள்: பீரகா வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism