
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருவானைக்காவல் தெருவும் மண்டபமும் அத்தனை பிரமாண்டம். ஸ்ரீஜம்புகேஸ்வரரும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மையும் அருள் பொழியும் கோயிலுக்கு அருகில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி என்பது பலருக்கும் தெரிந்திராத ஒன்று!
சுமார் 200 வருடங்கள் பழைமைமிக்க இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி கொள்ளை அழகு. லேசாக வலது திருப்பாதத்தை மடக்கிக்கொண்டு, ஒய்யாரமாக நின்றபடி, திருக்கரத்தில் புல்லாங்குழலுடன்... அருகில் ஸ்ரீபாமா ஸ்ரீருக்மிணி சமேதராக அற்புதமாகக் காட்சி தரும் ஸ்ரீவேணுகோபாலனை, கண்ணாரத் தரிசித்தாலே, நம் சோகமும் துக்கமும் தவிடுபொடியாகி விடும்!
உத்ஸவரும் அபாரமான அழகுடன் திருக்காட்சி தருகிறார். தன் திருக்கரத்தில், வெண்ணெய்த் தாழியுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு, வெண்ணெய் மற்றும் கற்கண்டு நைவேத்தியம் செய்து தரிசித்தால்... விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை!
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட இந்தக் கோயில், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியுமாம்!
அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ஆலயம். இந்தக் கோயிலில் ஸ்ரீராதா கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஸ்ரீராதா கல்யாண வைபவத்தைத் தரிசிக்க, திருச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்தெல்லாம் பக்தர்கள் திரண்டு வருவார்கள். இந்த வைபவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியைத் தரிசித்தால், விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
அதேபோல், நவராத்திரி விழாவும் சிறப்புற நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரவு, ஸ்ரீகிருஷ்ண பகவான் அம்பு விடும் வைபவம் கோலாகலமாக நடைபெறுமாம்! ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நாளில், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள், விசேஷ அலங்காரங்கள் என அமர்க்களப்படும் ஆலயம்.
பிறகு, உத்ஸவர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வரும் அழகே அழகு. அதையடுத்து... மாலையில் உறியடி உத்ஸவம் நடைபெறும். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் வெண்ணெய் மற்றும் கற்கண்டு பிரசாதம் வழங்கப்படும்.
''தினமும் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசிக்காம இருக்கவே மாட்டேன். 'எல்லாத்தையும் கண்ணன் பார்த்துப்பான்; கவலை இல்லை’ன்னு ஒரு நிம்மதி வந்துரும்'' என்று சொல்கிறார் மணிகண்டன் எனும் பக்தர்.
காஞ்சி மகா பெரியவா திருவானைக்காவலுக்கு விஜயம் செய்த போது, அவரின் அருளாசிப்படி... இங்கே... ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில், ஸ்ரீபரமானந்த விநாயகரின் திருவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள், பக்தர்கள்!
- ச.மஞ்சுளா
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்