Published:Updated:

குருவாயூருக்கு வாருங்கள்

கிருஷ்ணா.. கிருஷ்ணா!

குருவாயூருக்கு வாருங்கள்

கிருஷ்ணா.. கிருஷ்ணா!

Published:Updated:

- மதுவர்ஷா

குருவாயூருக்கு வாருங்கள்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அ
ம்மா... என்ன செய்துகொண்டிருக்கிறாய்? பானைக்குள் அதென்ன சத்தம்?''

குழந்தை கண்ணனின் குரல் கேட்டு, தயிர் கடைந்துகொண்டிருந்த யசோதை நிமிர்ந்தாள். 'சரிதான்... தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டானா? இனி இவனிடம் இருந்து வெண்ணெயைக் காப்பாற்றுவது கஷ்டமாச்சே!’ என்ற எண்ணத்துடன், கண்ணனைச் சமாளிக்க ஒரு பொய் சொன்னாள்.

''கண்ணா, பானைக்குள் ஒரு பூதம் உள்ளது. அதுதான் கர்... புர்... என்று சத்தம் செய்கிறது. நீ இங்கிருந்து ஓடிவிடு!'' என்றாள்.

''அப்படியென்றால், அந்த பூதம் உங்களை ஒன்றும் செய்யாதா?''

''பெரியவர்களை ஒன்று செய்யாது, கண்ணா! நீ குழந்தை; உன்னைத்தான் பிடிக்க வரும். சீக்கிரம் இங்கிருந்து ஓடிவிடு!'' என்றாள் யசோதை.

சட்டென ஒரு உரலின் மீது ஏறி நின்றுகொண்ட கண்ணன், ''அம்மா... இப்போ நானும் பெரியவனாயிட் டேன். கொஞ்சம் நகருங்கள்... பானைக்குள் இருக்கும் பூதத்தை ஒரு கை பார்த்துவிடுகிறேன்!'' என்றான்.

வேறு என்ன சொல்வது... அவனை எப்படிச் சமாளிப் பது என்று தெரியாமல் விழித்தாள் அந்தத் தாய்.

குருவாயூருக்கு வாருங்கள்

''என்னம்மா விழிக்கிறீர்கள்! பூதத்திடம் உங்களை தனியே விட்டுவிட்டு நான் போக முடியாது. எனவே, ஒரு வழி சொல்கிறேன், கேளுங்கள்... வெண்ணெய் வேஷமிட்டு பானைக்குள் ஒளிந்திருக்கும் அந்தப் பூதத்தைப் பிடித்து என்னிடம் தாருங்கள். அப்படியே விழுங்கிவிடுகிறேன்!'' என்றான் கண்ணன்.

அப்பப்பா... பொல்லாத பிள்ளை இது! ஐம்பூதங் களையும் தன்னுள் அடக்கிய அந்தப் பிள்ளைக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?! யசோதையும் இதைப் புரிந்துகொண்டாள்போல! கண்ணனை வாரியணைத்து, அவனது பிஞ்சுக் கைகள் நிறைய வெண்ணெய் தந்தாள். அதை அப்படியே உண்டவன், கடைவாயில் வெண்ணெய் வழியச் சிரித்தான்.

கொடுத்துவைத்தவள் யசோதை. தீராத விளையாட்டுப் பிள்ளையாம் கண்ணனின் குழந்தைப் பருவத்தை ரசிப்பதும், ஆராதிப்பதும் எத்தகைய கொடுப்பினை!

நந்தகோபனின் இல்லாளுக்கு மட்டுமல்ல; நமக்கும் அப்படி யரு பாக்கியத்தை அருள வேண்டும் எனச் சித்தம் கொண்டான்போலும் கண்ணன்! அதனால்தான் குழந்தைக் கோலத்தில் பல கோயில்களில் கொலுவிருக்கிறான். அவற்றில் குறிப்பிடத்தக்கது குருவாயூர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குருவாயூர்.

நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம், பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் எல்லாம் ஸ்ரீகுருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் 'குருபாவன புர மகாத்மியம்’ குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது.

துவாபர யுகத்தில், 'துவாரகையை ஏழு நாட்களில் கடல் கொள்ளும். அந்த வெள்ளப் பரப்பில் கிருஷ்ண விக்கிரகம் மிதக்கும். அதை தேவகுரு பிருகஸ்பதி மூலம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்!’ என்று உத்தவரிடம் அருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.

குருவும் வாயு பகவானும் அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். அப்போது கேரளத்தில் தாமரைக் குளக்கரை ஒன்றில் சிவனார் தவம் செய்வதைக் கண்டார்கள்.

அவர் அருளியபடி, விஸ்வகர்மா நிர்மாணித்த கோயிலில் அந்த விக்கிர கத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தனர். அந்த சிவபெருமான் மம்மியூரில் பார்வதிதேவியுடன் எழுந்தருளியுள்ளார் என்பது ஐதீகம். இவ்வாறு குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்தத் தலம் 'குருவாயூர்’ ஆனது.

அற்புதமான இந்த திருத் தலத்திலும் குருவாயூரப்பன் நிகழ்த்திய அருளாடல்கள் நிறைய உண்டு. உதாரணச் சம்பவங்கள் சில...

ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது, அங்குள்ள மரச் சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு, பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். ஸ்ரீவிஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங் களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை குறிக்க, ஒரு தூணில் 'கம்ச வத’ காட்சியை வடித்திருந்தார் சிற்பி.

குருவாயூருக்கு வாருங்கள்

ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து, ''கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள்!'' என்றான்.

''அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை

வடிக்கவில்லையே!'' என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று, ஸ்ரீகிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். இந்தத் தூண் ஸ்ரீகுருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அதன் பிறகு 'கம்ச வத’ தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள்.

மஞ்சுளா என்ற பக்தை தினமும் இரவில் குருவாயூரப்பனுக்குச் சார்த்த பூமாலை கொண்டு வருவது வழக்கம். ஒருநாள் தாமதமானதால், கோயில் நடை மூடப்பட்டு விட்டது. கலக்கமடைந்தாள் மஞ்சுளா. அப்போது அவளை ஆசுவாசப்படுத்திய பூந்தானம் அடியார், அவள் நின்றிருக்கும் ஆல மரத்தின் அடியையே இறைவனின் திருவடியாக பாவித்து, பூமாலையை அங்கேயே சமர்ப்பிக்கும்படி சொன்னார். மஞ்சுளாவும் அப்படியே செய்தாள்.

மறுநாள் காலையில் மேல்சாந்தி, விக்கிரகத்தின் மீதுள்ள பூமாலைகளை அகற்றும்போது, ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லை. அதைக் கண்ட பூந்தானம் பக்தி பரவசத்துடன், 'மஞ்சுளாவின் மாலை என்றால், அதுவும்  விழட்டும்’ என்றார். உடனே மாலை கீழே விழுந்தது, அதனால், அந்த ஆலமரம் உள்ள இடம் பூஜைக்குரியதானது. அதை 'மஞ்சுளால் தரை’ என்பர்.

குருவாயூரப்பன் குழந்தைக் கோலத்தில் அருளும் தலம் அல்லவா? எனவே, குழந்தை களுக்கான பிரத்யேகமான தலமாக குருவாயூரைப் போற்றுவார்கள் பெரியோர்கள்.

குருவாயூரில் எல்லா நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர் கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். தவிர, குருவாயூரப்பனின் சந்நிதியில் சோறு ஊட்டினால், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வளர குருவாயூரப்பன் அருள் புரிவான் என்பது நம்பிக்கை.

அடிமை கிடத்தல் என்றொரு பிரார்த்தனை யும் இங்கே உண்டு. குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர். பின்பு மற்றொருவர் மூலமாக குழந்தையை எடுத்து வரச் செய்வர். அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்.

மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளின் கைகளால் அந்தக் குந்துமணிகளை வாரி எடுக்கச் செய்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதீகம்.

அதேபோன்று, அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால், குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை 'ஆள் ரூபம் சமர்ப்பித்தல்’ என்பர்.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கே விசேஷம். இந்த நன்னாளில் குருவாயூருக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் ஒரு குறையுமின்றிக் காப்பான் குருவாயூரப்பன்.

குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

குருவாயூருக்கு வாருங்கள்

கோகுலாஷ்டமியில் மட்டுமல்ல, அனுதினமும் கீழ்க்காணும் ஐந்து ஸ்லோகங்களைச் சொல்லி குருவாயூரப்பனை வழிபடுங்கள். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; நமது நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

கல்யாணரூபாய கலௌ ஜனானாம்
கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய
வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

கருத்து: குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்கலகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்கலத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

கருத்து: நாராயணா... குருவாயூரப்பா... கோவிந்தா... முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:
ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

கருத்து: குருவாயூரப்பா... விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

கருத்து: தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்று கிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:
நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

கருத்து: நித்யம் வேத வித்துக்களுக்கு அன்னம் அளிப்பவரும், நித்யம் தேவர்களால் இரவு பூஜிக்கப்படுகிறவரும், தாயான தேவகியாலும், பிதாவான வஸுதேவராலும், பக்தரான உத்தவராலும் பூஜிக்கப்பட்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

(தேவகி, வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்), வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது.)

குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்
ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து
ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி:

கருத்து: குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத் திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்கலம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism