Published:Updated:

நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!

நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!

நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!

நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!

Published:Updated:
நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!
நான்மாடக்கூடலில்... நவநீத கிருஷ்ணன்!

'காலத்தாலும், வேறு எந்த காரணங்களாலும் அழியாத பெரும் பொக்கிஷமாக இருப்பவர் பகவான் கிருஷ்ணன்’ எனப் போற்றுகிறது விஷ்ணு சகஸ்ர  நாமம். கோகுலாஷ்டமியில் அந்த வெண்ணெய் உண்ட கண்ணனை- நவநீதனைப் போற்றி வழிபட, நம் வாழ்வும் பொக்கிஷமாகும் அல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்குப் பெரும் வாய்ப்பாக... மதுரை தல்லாகுளம் பகுதியில் நவ நிதிகளையும் அள்ளித் தரும் ஸ்ரீநவநீத கிருஷ்ணனாகக் கோயில் கொண்டிருக்கிறான் எம்பெருமான். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தல்லாகுளம். இங்கே, வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது ஸ்ரீநவநீதகிருஷ்ணனின் ஆலயம்.

'கோயிலில் மட்டுமா? எங்கள் மனத்திலும் குடியிருக்கும் கண்கண்ட தெய்வம் இவர்’ என உள்ளம் உருகிச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவன்; பாமா- ருக்மிணி தேவியருடன் அருள்கிறார். ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

சனிக்கிழமை தரிசனம் இங்கே விசேஷம். திருமேனி முழுவதும் சந்தனக்காப்பும், திருக்கரத்தில் வெள்ளி புல்லாங்குழலுமாக... ஸ்ரீசந்தானகிருஷ்ணன் கோலத்தில் அருளும் இறைவனைத் தரிசிக்கக் கண்கள் இரண்டு போதாது!

அதேபோன்று, வியாழக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இதில் கலந்துகொண்டு நவநீத கிருஷ்ணனை வழிபட, நினைத்ததெல்லாம் நடந்தேறும்; படிப்பு, குழந்தை பாக்கியம், குடும்ப நன்மை, திருமண யோகம் என சகல நன்மைகளையும் அள்ளித் தருவார் நவநீத கிருஷ்ணன் என்கிறார்கள் பக்தர்கள்.

##~##
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி இங்கே மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்பு அபிஷேக- ஆராதனைகளுடன் ஜயந்தி விழா அமர்க்களப்படுகிறது. ஸ்ரீஜயந்திக்கு முதல் நாள் காலை 6:30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜையும், மூலவர் பூஜையும் நடைபெறும். மாலை 7 மணியளவில் நித்ய கால பூஜை சிறப்பாக நடைபெறும். அதைத் தொடர்ந்து... சிறுவர்- சிறுமியர் கண்ணன் வேடம் புனைதல், மாதர் கோலாட்டம் என அந்தப் பகுதியே களைகட்டும்.

விழாவின் 2-ஆம் நாளன்று, அதாவது கிருஷ்ண ஜயந்தி அன்று காலையில், வைகை ஆற்றில் இருந்து சிறுவர்கள் தீர்த்தம் எடுத்து வர, ஸ்ரீநவநீத கிருஷ்ணனுக்கு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்று கண்ணனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது!

அன்று மாலையில் பொங்கலிடும் வைபவமும், அதைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெறும். மூன்றாம் நாளன்று மேளதாளங்கள், நாகஸ்வர இசையுடன், ஒயிலாட்டக் குழுவினர் சூழ, பூப்பல்லக்கில் உத்ஸவர் வீதியுலா வரும் அழகே அழகு!

அன்னை மீனாட்சியைத் தரிசிக்க மதுரைக்குச் செல்லும் அன்பர்கள், அவளின் அண்ணனாம்  ஸ்ரீநவநீதகிருஷ்ணனையும் வழிபட்டு வாருங்கள்; மகத்தான வாழ்வைப் பெறுவீர்கள்.

ச.பா.முத்துகுமார்
படங்கள்: ஜெ.பிரதீப் ஸ்டீபன்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism