Published:Updated:

ஆடிக் கிருத்திகையில்... அவல் பாயச நைவேத்தியம்!

ஆடிக் கிருத்திகையில்... அவல் பாயச நைவேத்தியம்!

நாகை மாவட்டம் சீர்காழியின் தென்பாதி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீகதிர்காம பால தண்டாயுதபாணி திருக்கோயில். திருஞானசம்பந்தர் அவதரித்த பூமி இது. கருணையே உருவெனக் கொண்டு கந்தக் கடவுள் அனைவருக்கும் அருள் பாலிக்கும் அற்புதத் தலம்!

அந்தக் காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம சுவாமி என்பவர் இங்கு வந்து சில காலம் தங்கினார். முருக பக்தரான அவர் தினமும் பூஜிப்பதற்காக, கந்தவேளுக்கு ஒரு கோயில் கட்டினார் என்றும், அவர் மட்டுமின்றி ஏனைய மக்களும் அந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றனர் என்றும் தெரிவிக்கிறது கோயில் ஸ்தல வரலாறு. கதிர்காம சுவாமிகள் ஸ்தாபித்த ஆலயத்தின் இறைவனுக்கும் ஸ்ரீகதிர்காம தண்டாயுதபாணி எனத் திருநாமம் சூட்டியதாகச் சொல்வர்.

இலங்கையின் கட்டுமான பாணியில் அமைக்கப் பட்ட இந்த ஆலயம், அற்புதமாகக் காட்சி தருகிறது. மூலவரான ஸ்ரீகதிர்காம பால தண்டாயுதபாணி சாந்நித்தியத்துடன் திகழ்கிறார். வேறெங்கும் காண அரிதானது எனப் போற்றும் வகையில், கந்தக் கடவுளின் விக்கிரகப் பிரதிஷ்டைக்கு முன்னே, ஜல யந்திரம் பிரதிஷ்டை செய்திருப்பதாகவும், அதன்மேல் தங்க யந்திரமானது சுழன்றுகொண்டே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.

நின்ற திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தரும் வேலவனைத் தரிசித்தாலே சகல பாவங்களும் விலகி ஓடும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள். ஸ்ரீரத்ன கற்பக விநாயகர், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீஅப்பர் சுவாமி, ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோருக்கு தனிச்சந்நிதிகள் இங்கே அமைந்துள்ளன.

ஆடிக் கிருத்திகையில்... அவல் பாயச நைவேத்தியம்!

வருடந்தோறும் சுக்ல பட்ச சஷ்டி மற்றும் கிருஷ்ண பட்ச சஷ்டி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். இந்த நாட்களில், திருமணமாகாத பெண்கள் சஷ்டி விரதமிருந்து கந்தக் கடவுளை வணங்கித் தொழுதால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!

ஆடி மாதம் வந்துவிட்டால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீகதிர்காம பாலதண்டாயுத பாணிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ அலங்காரமும் நடைபெறுகிறது. அதேபோல், ஆடிக் கிருத்திகை நாளில் அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அர்ச்சித்து வழிபட்டால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.  

தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிக்கும் பெண்கள், அம்பிகையை ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் வணங்கி வழிபட்டால், நல்ல வரன் அமையும். குறிப்பாக, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கற்கண்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால்... வளம் பெறுவார்கள் என்பது உறுதி.

கார்த்திகை மாதத்தில், ஸ்ரீகதிர்காம பால தண்டாயுதபாணிக்கு அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அப்படி வழிபட்டால், கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை விலகி, ஒற்றுமை மேலோங்கும் என்கிறார் கோயிலின் சிவஞானசம்பந்தர் சிவாச்சார்யர்.

- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா