

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிர்வாக வசதிக்காக, இப்போது மாவட்டம் மாவட்டமாகப் பிரிந்திருப்பது போல, அந்தக் காலத்தில் மண்டலங்க ளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதன்படி தொண்டை நாட்டில் 24 மண்டலங்கள் இருந்தன. அவற்றில்... புலியூர் மண்டல மும் ஒன்று.
ஊரின் பெயரை புலியூர் என்று வைப்பதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். புலிக்கால் முனிவர் என்று சொல்லப்படும் வியாக்ரபாதர் தவமிருந்து வழிபட்ட தலங்களை புலியூர் என்று அழைத்தனர் மக்கள். வியாக்ரபாதர், பல காலம் தங்கி வழிபட்ட அற்புதமான திருவிடம், தொண்டை மண்டலத்தில் புலியூரில் உள்ளது. அந்தப் புலியூர் இன்றைக்கும் இருக்கிறது. சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் புலியூர் என்றொரு பகுதி தெரியுமா உங்களுக்கு? அங்கேதான், புலிக்கால் முனிவர் ஆஸ்ரமம் அமைத்து தங்கி, அருகில் கோடம்பாக்கத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டு வந்தார்.
மேருமலையை அப்படியே வளைத்து வில்லாக்கி அம்பு தொடுத்து, திரிபுர அசுரர்களை அழித்தாராம் சிவபெருமான். கோடு என்றால் மலை. கோடு, அம்பு, ஆக்கம் என்பதே பின்னாளில் கோடம்பாக்கம் என்றானதாம்.

சென்னை, கோடம்பாக்கத்தின் சில பகுதிகள் வடபழநி என்றாகிவிட்ட நிலை இன்றைக்கு. வியாக்ரபாதர் வழிபட்ட சிவாலயம் வடபழநியில்தான் இருக்கிறது. வியாக்ரபாதர் என்கிற புலிக்கால் முனிவர் வணங்கித் தொழுத சிவனாருக்கு ஸ்ரீவேங்கீஸ்வரர் என்றே திருநாமம் அமைந்தது. அவர் மட்டுமா? வியாக்ரபாதரின் ஆத்மார்த்தமான சிநேகிதரும், சிவனாரின் திருநடனத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே பூலோகத்தில் அவதரித்தவருமான பதஞ்சலி முனிவர், இங்கே சில காலம் தங்கி, ஸ்ரீவேங்கீஸ்வரரை மனதாரத் தவமிருந்து பிரார்த்தித்தார்.

வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபட்ட தலங்கள், தனிச்சிறப்புடன் திகழ்பவை என்பார்கள் பெரியோர். அந்த ஆலயத்துக்குச் சென்று, இறைவனை ஒருமுகப்பட்டு வணங்கித் தொழுதால்... ஞானமும் யோகமும் பெறலாம் என்பது ஐதீகம்!
ஏழு நிலை ராஜகோபுரத்துடன், கிழக்குப் பார்த்தபடி அமைந்துள்ள ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயத்தைப் பார்த்ததுமே பரவசமாவோம். அவ்வளவு பிரமாண்டம்! அதேபோல் கோயில் பிராகாரமும் மிக விஸ்தாரமாக அமைந்துள்ள விதமே தனி!
சூரியன், சந்திரன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீவீரபத்திரர் என, உள்ளே நுழைந்ததும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். அலங்கார மண்டபம், வசந்த மண்டபம் என ஒவ்வொரு மண்டபமும் பிரமிக்க வைக்கிறது. அலங்கார மண்டபத்தில் உத்ஸவ மூர்த்தங்களை வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுமாம். பின்னர், அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்கள் திருவீதியுலா வருவதைத் தரிசிக்க, ஊரே திரண்டு நிற்குமாம். அதேபோல், வசந்த மண் டபத்தில் வருடந்தோறும் ஊஞ்சல் உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆனால், இந்தக் கோலாகலங்கள் எல்லாம் குறைந்து மாமாங்கங்களாகிவிட்டன. கடந்த 83-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, இதுவரை இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகமோ திருப்பணிகளோ எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... ஸ்ரீவேங்கீஸ்வரர் சந்நிதி கொண்டிருக்கும் விமானம், கஜபிருஷ்ட அமைப்பில் அமைந் துள்ளது. இப்படி... கஜபிருஷ்ட அமைப்பில் விமானம் அமைந்திருக்கிற கோயில்கள் மிகவும் குறைவு.
சோழர் கால கட்டுமானத்தில் கம்பீரமாக நிற்கிறது ஆலயம். ஆனால், திருப்பணிகள் செய்யத்தான் நிதி தேவை. மதிலும் கோபுரமும் விமானங்களும் செப்பனிட வேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்கிறார் கோயில் குருக்கள் சுரேஷ்.

''இந்தக் கோயிலுக்கு வரும்போதெல்லாம் மனதுள் நிம்மதியும் ஒருவித புத்துணர்ச்சியும் மேலிடுவதை உணர்கிறேன். மெள்ள மெள்ள... ஸ்ரீவேங்கீஸ்வரர் கோயிலுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான பந்தம் வளர்ந்துகொண்டே இருப்பதுபோல் உணர்வு! அதனால்தான், கோயில் திருப்பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். விரைவில் கும்பாபிஷேகத்தை எப்படியேனும் நடத்திவிட வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார், சென்னை வாசகி ப்ரியா.
பரம்பரை அறங்காவலர்களைக் கொண்டு நடத்தப்படும் ஆலயம் இது. தற்போது பரம்பரை தர்மகர்த்தா பிரேம் ஆனந்த், கோயில் திருப்பணிகளைச் செய்துவருகிறார்.

''ஸ்ரீவேங்கீஸ்வரரும் அம்பாள் ஸ்ரீசாந்த நாயகியும்தான் எங்க குடும்பத்துக்குக் கண்கண்ட தெய்வங்கள். பிரதோஷ பூஜைக்கு வர ஆரம்பிச்சு, இப்ப மாசத்துக்கு ஏழெட்டு தடவை, இந்தக் கோயிலுக்கு வந்துடுறோம். ஸ்ரீவேங்கீஸ்வரர் புண்ணியத்தால, எங்களுக்குள்ளே ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. இந்தத் திருப்பணிகள் நல்லவிதமா நடந்து, சீரும் சிறப்புமா கும்பாபிஷேகம் நடந்தாத்தான் நிம்மதியா தூக்கம் வரும்'' என்று உத்வேகத்துடன் சொல்கிறார் பக்தர் ஆனந்த் பாலகிருஷ்ணன்.
சென்னையின், மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான வடபழநியில் கோயில் கொண்டிருக்கும் புராண- புராதனப் பெருமைகள் கொண்ட கோயில், களையிழந்து இருக்கலாமா? வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபட்டு வரம் பெற்ற ஆலயம், வழிபாடுகள் சுருங்கி, மண்டபங்கள் யாவும் பொலிவின்றி இருப்பது சரியா?
ஞானம் வழங்கும் ஸ்ரீவேங்கீஸ்வரருக்கு குரு காணிக்கையாக நாம் நம்மாலானதை வழங்கவேண்டாமா? அம்பாள் ஸ்ரீசாந்தநாயகி அருள்பாலிக்கும் அருமையான இந்தத் திருத்தலம், அவளைப் போலவே ஜொலிக்கவேண்டாமா? பௌர்ணமிதோறும் அம்பிகைக்கு குளிரக் குளிர பாலபிஷேகம் நடக்கும் திருத்தலத்தில், இப்போதுதான் பாலாலயம் நடந்திருக்கிறது. விரைவில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று, கும்பாபிஷேகம் நடந்தால்தானே புதுப்பொலிவுடன் திகழும் ஆலயம்!
ஆடி மாதத்தில், முதல் ஞாயிற்றுக்கிழமையில் பால்குடம், புரட்டாசியில் 108 கலசாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், பதஞ்சலி முனிவர்- வியாக்ரபாதர் மன்றத்தின் சார்பில், அவர்களின் உத்ஸவ மூர்த்தங்களுக்கு, மாதத்தின் ஏதேனும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம், திருவீதியுலா என அனைத்தும் கோலாகலமாக நடைபெற வேண்டாமா?
சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த ஆலயத்தைப் போற்றுவதும் போற்றிப் பாதுகாப்பதும் நமது கடமை அல்லவா? பழைமையும் பெருமையும் கொண்ட ஸ்ரீவேங்கீஸ்வரர் கோயிலின் திருப்பணிகளுக்குக் கை கொடுப்போம்; நாம் வாழ்வாங்கு வாழ, வாழ்வில் எல்லா வளமும் பெற்றுச் சிறந்து விளங்க... அந்த வேங்கீஸ்வரர் நமக்குக் கை கொடுப்பார்!
படங்கள்: சு.குமரேசன்,
ரா.மூகாம்பிகை