Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி
ருச்சித்திரக்கூடத்தில் இருந்து பஞ்சவடி நோக்கிய ஸ்ரீராமனின் பயணம், பல திருப்புமுனைகளுடன் அமைந்துபோனது. தந்தை தசரதரின் அமரத்துவம், தம்பி பரதனின் சந்திப்பு, அவன் ஸ்ரீராம பாதுகைகளைப் பெற்றுச் சென்றது... என ஒன்றன்பின் ஒன்றாக விசேஷ நிகழ்வுகளுடன் காலமும் அவர்களைப் பின் தொடர்ந்தது!

இந்த அற்புதமான பயணத்தில்... மகா முனிவர்கள் முதல் கொடும் அசுரர்கள் வரை ஸ்ரீராமன் சந்தித்த பலரில், மறக்கமுடியாத சிலர் உண்டு!

அவர்களில் குறிப்பிடத்தக்கவன் விராதன். தண்டகாரண்யத்து முனிவர்களை வணங்கி ஆசி பெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தபோது, வழியில் ஓரிடம் பாழ்பட்டுக் கிடந்தது. மரங்கள் சரிந்தும், பாறைகள் பொடிபட்டும், புள்ளினங்கள் மரித்தும் மட்கியும் கிடந்தன. பெரும்புயல் தாக்கியது போன்ற அந்தச் சூழலுக்குக் காரணமானவனும் வெகு சீக்கிரத்தில் எதிர்ப்பட்டான். பெரிய மலை ஒன்று நடந்து வருவது போல் இருந்தது அவனது வருகை.

தோற்றம் மட்டுமல்ல, அவனது செயலும் சொல்லும்கூட குரூரமாகவே இருந்தன. ஸ்ரீராம- லட்சுமணரையும் சீதாதேவியையும் பழித்துப் பேசியவன், அவர்கள் எதிர்பாராத தருணத்தில் சீதாவைச் சட்டென்று பற்றித் தூக்கிக்கொண்டான். தாங்கள் யாரென்பதையும், வனத்தில் சஞ்சரிக்கும் காரணம் என்ன என்பதையும் ஸ்ரீராமன் விளக்கியும், அவன் காதுகொடுக்கவில்லை. அங்கிருந்து நகரும்படி ராம- லட்சுமணருக்குக் கட்டளையிட்டான்.

அதன் பிறகு ஸ்ரீராமன் பேசவில்லை; கோதண்டமே பேசியது! அதன் கணைகள் அந்தப் பொல்லாத அசுரனின் மேனியைப் புண்ணாக்கின. கோபம் கொண்ட அசுரன், சீதாவை கீழே இறக்கிவிட்டு விட்டு, அவர்களைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு, வனத்துக்குள் ஓடத் துவங்கினான். சீதாதேவி பதறினாள். சகோதரர்களின் தாக்குதலும் தீவிரம் அடைந்தது. ஒருகட்டத்தில் பூமியில் விழுந்தான் அசுரன். ஆனாலும், அவனது உயிர்

பிரியவில்லை. ஸ்ரீராமன் யோசித்தார். இளவலிடம், 'தம்பி, இவனை உயிரோடு பூமியில் அழுத்துவதே உசிதம்!’ என்றார்.

அதேநேரம் காகுத்தனின் திருவடி தீட்சையால், அஞ்ஞானம் அகன்றது அசுரனுக்கு. தான் யாரென்பதை உணர்ந்தான்.

கள்ளமாய வாழ்வெலாம்
விள்ளஞானம் வீசுதாள்
வள்ளல் வாழி கேள்எனா...

- என்று துவங்கி, தனது கதையை விவரித்தான் ஸ்ரீராமனிடம்.

''ஸ்ரீராமா! நானொரு கந்தர்வன். ஒருமுறை ரம்பையிடம் கொண்ட மோகத்தில்... நாங்கள் இருந்த இடத்துக்கு எங்கள் அரசரான குபேரன்

தசாவதாரம் திருத்தலங்கள்!

வருவதைக் கவனிக்கவும், அவரை உபசரிக்கவும் தவறினேன். அதனால் கோபம் கொண்ட குபேரர் என்னை ராட்சஸனாகும்படி சபித்தார். நான் தவற்றை உணர்ந்து  மன்னிப்பும் விமோசனமும் வேண்டினேன். 'ஸ்ரீராமனுடனான யுத்தத்தில் கொல்லப்படுவாய். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்!’ என்றார். அதன்படியே நிகழ்ந்தது'' என்றான் அசுரன்.

அத்துடன், மஹா கீர்த்தி மானான சரபங்க மகரிஷி குறித்த தகவலையும் அவர்களுக்குச் சொன்னான். அதன் பிறகு ஸ்ரீராம சகோதரர்கள், விராதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவனது உடலைப் பெரும் குழிக்குள் இட்டு, அவனுக்கு உத்தம கதி கிடைக்க வழிசெய்தனர். அவன் சொன்னது போன்று சரபங்க மகரிஷியையும் சந்தித்து ஆசி பெற்றார்கள்.

அவரை மட்டுமா... மாமுனிவர் ஸுதீக்ஷணர் மற்றும் அவரின் குருநாதரும் தமிழ் முனிவருமான அகத்திய மகரிஷி ஆகியோரையும் சந்திக்கும் பெரும்பேற்றைத் தந்துவிட்டது இந்தப் பயணம். கூடவே, அகத்தியரிடம் இருந்து அற்புதமான பல ஆயுதங்களும் கிடைத்தன ஸ்ரீராமனுக்கு.

தொடர்ந்த பயணத்தில், மிக முக்கியமான இன்னொரு நபரையும் சந்தித்தார் ஸ்ரீராமன். வழியில் ஓர் ஆலமரம். அதன் கிளையில் பெரியதொரு கழுகு அமர்ந்திருந்தது. யாரேனும் ராட்சஸனாக இருக்குமோ என்று எண்ணிய ராமனும் லட்சுமணனும் கவனமுடன் மரத்தை நெருங்கினார்கள்.

ஆனால், அன்பான அந்தக் கழுகு மிகப் பிரியமாக இவர்களை வரவேற்றது. 'சந்தேகம் வேண்டாம்! நான் உங்கள் தந்தைக்கு நண்பனே!’ என்று அறிமுகமும் செய்துகொண்டது. தந்தையையே நேரில் கண்டது போன்று அகமகிழ்ந்தார் அண்ணல்.

ஆமாம்.... நீங்கள் யூகிப்பது சரிதான்! அவர் கழுகுகளின் அரசன் ஜடாயுதான்!

முற்காலத்தில் கர்த்தமர், விச்ருதர், சேஷர், ஸம்ச்ரயர், ஸ்தாணு, மரீசி, அத்ரி, க்ரது, புலஸ்தியர், ஆங்கீரஸ், ப்ரசேதஸ், புலஹர், தக்ஷர், விவஸ்வான், காஸ்யபர் ஆகிய பிரஜாபதிகள் இருந்தனர். இவர்களில் தக்ஷருக்கு 60 பெண்கள். அவர்களில் அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவசை, மனு, அனிலை ஆகிய எட்டுப் பேரை காஸ்யபர் மணம் புரிந்தார்.

இவர்களில் அதிதிக்குப் பிறந்தவர்கள்தான் பன்னிரு ஆதித்யர்கள், அஷ்ட வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், அச்வினி குமாரர்கள் இருவர் ஆகியோர். திதிக்குப் பிறந்தவர்கள் தைத்தியர்கள்.

காஸ்யபரின் மற்ற மனைவி யரில், தாம்ரை என்பவளுக்கு கிரௌஞ்சீ, பாஸி, ச்யேனீ, திருதராஷ்ட்ரீ, சுகி ஆகிய ஐந்து மகள்கள் பிறந்தனர். இவர்களில் சுகியின் மகள் நதை. இவளுக்கு மகளாகப் பிறந்தவள் வினதை.

இந்த வினதையின் மைந்தர்களே அருணனும், கருடனும். கருடன் ஸ்ரீமகாவிஷ்ணுவின் வாகனமாகி, அவரின் திருவடியைத் தாங்கும் பெரும் பாக்கியம் பெற்றார். அருணன் சூரிய தேவனுக்குச் சாரதியானார். இந்த அருணனின் மைந்தரே கழுகரசன் ஜடாயுவும் சம்பாதியும்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தனது பூர்வீகத்தை விளக்கிய ஜடாயுவைப் பிரியமுடன் கட்டித் தழுவிய ஸ்ரீராமன், அவரை வணங்கி விடைபெற்றார்.

இப்படி, பயணத்தில் மகான்களையும், புண்ணிய புருஷர்களையும், தந்தைக்கு நிகரான ஜடாயுவையும் தரிசித்த ஸ்ரீராமனுக்கு, பஞ்சவடியில் இன்னும் பல விநோதமான சந்திப்புகளும் காத்திருந்தன!

அரக்கி சூர்ப்பணகையின் வருகை, அவளின் ஆசை வார்த்தைகள், லட்சுமணன் அவளை அங்கஹீனம் செய்தது, அரக்கியின் தூண்டுதலால் போரிட வந்த கரண், திரிசிரன், தூஷணன் முதலான ராட்சஸர்களின் வதம் ஆகிய சம்பவங்களைச் சந்தித்தது பஞ்சவடி.

இவையெல்லாம் சாதாரணம்! இவை எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமானதொரு சந்திப்பை பஞ்சவடியில் நிகழ்த்திக் காட்டியது காலம்.

ர் அதிகாலைப் பொழுதில், பர்ணசாலையில் இருந்து மலர் பறிப்பதற்காக வெளியே வந்த சீதாதேவி, ஒரு பொன்மானைச் சந்தித்தாள்!

அந்த மானுக்கு அழகிய கொம்புகள். அதன் முனைகள் நீலக்கற்களைப் போலப் பிரகாசித்தன. அதன் முகமானது ஓரிடத்தில் வெளுத்தும், ஓரிடத்தில் கறுத்தும் விசித்திரமாகத் திகழ்ந்தது. மலர்ந்த செந்தாமரையைப் போன்ற வாயும், நீலோத்பல மலரைப் போன்ற காதுகளும் மானின் அழகுக்கு அழகு சேர்த்தன. அதன் மேனியோ பொன்னிறம் கொண்டு தகதகத்தது!  

சற்று நேரம் பசும்புற்களை மேய்வதும், சற்று நேரம் மரக் கன்றுகளின் துளிர்களை முறித்துத் தின்ன முயற்சிப்பதும், பிறகு சட்டென்று துள்ளித் தாவி கொடிமலர்களைப் பறிக்க எத்தனிப்பதுமாக விளையாட்டுக் காட்டியது அந்த மான். சீதாதேவி வியந்தாள். மானின் அழகும் விளையாட்டும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. குழந்தையாய் குதூகலித்தாள்.

ஆகாயத்திலிருந்து பூமியில் இறங்கி விளையாடும் மின்னலைப் போன்று ஜொலித்த அந்தப் பொன்மானைக் கண்டு, மனதளவில் தானும் ஒரு புள்ளிமானாகவே மாறிவிட்டாள் சீதை! அந்த பொன்மானைப் போலவே தானும் துள்ளி ஓடினாள் ஸ்ரீராமனிடம்!

ஆணிப்பொனின் ஆகிய(து) ஆய்கதிரால்
சேணில் சுடர்கின்றது திண் செவிகால்
மாணிக்க மயத்தொரு மான் உளதால்

காணத்தகும்... என்றவள், ''உடனே பொன் மானைப் பார்க்க வாருங்கள்; அழகிய அந்த மானைப் பிடித்துத் தாருங்கள்'' என்று ஆசையாய்க் கேட்டாள் அண்ணலிடம். அடம் பிடித்தாள். ஸ்ரீராமனும் புறப்பட்டார்.

ஆனால்... அது பொன் மானல்ல; பொய் மான்! ஆமாம்... இப்போது ஸ்ரீராமன் சந்திக்கப் போவது மாய மானாகி வந்திருக்கும் மாரீசனை!

- அவதாரம் தொடரும்...