மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##
காபாரதப் போரின் முதல் நாள் அது.

குருக்ஷேத்திர போர்க்களத்தில் கௌரவ- பாண்டவ சேனைகள் அணிவகுத்து நிற்கின்றன. அதர்மத்தின் பக்கம் நூறு மடங்கு; தர்மத்தின் பக்கம் ஐந்து மடங்குதான். இந்த விகிதத்தில்தான் அங்கே சேனைகள் நிற்கின்றன.

போர் வந்துவிட்டது. இப்போது தருமன் கலங்கவில்லை. ஆனால், அர்ஜுனன் கலங்கினான். என்ன விசித்திரம்! உண்மையில் இந்தக் களத்தில் தருமன் கலங்கித் தவித்திருந்து, கண்ணன் அவனைத் தேற்றி, வழிகாட்டி, கீதையை உரைத்திருந்தால், எத்தனை பொருத்தமாக இருந்திருக்கும்! ஆனால், கலங்க வேண்டியவன் தெளிவாக இருந்தான். தெளிவாக இருக்க வேண்டிய அர்ஜுனன் கலங்கிக்கொண்டிருந்தான்.

பயம் கொள்வதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, காரணத்தோடு ஏற்படும் பயம். மற்றது, காரணமில்லாமலே ஏற்படும் பயம்! இதில், அர்ஜுனனின் பயம் இரண்டாவது வகை. எதுவுமே சரியாகப் படிக்காமல், பரீட்சை எழுத வந்திருக்கும் மாணவன் ஒருவன் பயந்தால், அதற்குக் காரணம் கூற முடிகிறது. ஆனால், நன்றாகப் படித்துவிட்டு, எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்கும் ஒரு மாணவன் பரீட்சை எழுதும்போது பயத்தால் நடுங்கினால், அதற்கு என்ன காரணம் கூறமுடியும்? அந்த இரண்டாவது மாணவனின் நிலையில்தான் இருந்தான் அர்ஜுனன்.

அவன் வீரன், தீரன், சூரன், பராக்கிரமன். அவனிடம் காண்டீபம், பாசுபதாஸ்திரம் இருந்தன. அவன் வில் வித்தைத் திறனை உலகமே அறியும். எல்லாவற்றுக்கும் மேலாக, கண்ணனே அவனுக்கு சாரதியாகத் துணை நின்றான். இத்தனை இருந்தும் அவன் போர் புரிய அஞ்சினான். அந்தப் பயத்துக்குக் காரணம், அவன் அஞ்ஞானமும் அறியாமையும்தான் என்று அறிந்து, அவனது அறிவுக் கண்களைத் திறந்து, அவன் கலக்கத்தைப் போக்க கண்ணன் காட்டிய வழிதான்... பகவத்கீதை. 'பற்றற்று கடமையைச் செய்’ என்ற தத்துவத்தை விளக்கிப் பதினெட்டு அத்தியாயங்களாகப் பகவத்கீதையை உபதேசித்தான் பகவான் கண்ணன்.

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களை எதிர்க்க கௌரவர்களின் சேனையோடு கண்ணனின் யாதவ சேனையும் அதர்மத்தின் பக்கமே நின்றது. கண்ணன் ஒருவன் மட்டுமே தர்மத்தின் பக்கம். அதுவும், போராடும் வீரனாக நிற்காமல், அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்திருந்தான்.

போர் தொடங்க சில விநாடிகளே இருந்தன. திடீரென அர்ஜுனன் மனதிலே விவரிக்க முடியாத பயமும் பீதியும் குடிகொண்டது. பாசத்தாலும் பற்றாலும் அந்த வீரனின் உள்ளம் கலங்கியது. 'எப்போது பாரதப் போர் வரும்’ என்று துடித்துக் கொண்டிருந்தவனின் தோள்கள், இப்போது துவள ஆரம்பித்தன. கௌரவர்கள் ஒவ்வொருவரையும் அழிக்கத் தனித் தனியாக தவத்தினால் பெற்ற ஆயுதங்கள் ஒவ்வொன்றாக அவனிடமிருந்து நழுவிக் கீழே விழுந்தன. வளைய வேண்டிய காண்டீபம் கையை விட்டு நழுவியது. அர்ஜுனன் பலவீனமாகிப் பதறி நின்றான்.

அதற்குக் காரணம், பாண்டவர்களைவிட எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகமான கௌரவ சேனையைக் கண்ட பயமா? அல்லது, எதிரே நிற்பவர்கள் அண்ணன், தம்பிகள், மாமன், மைத்துனர், ஆச்சார்யர், பாட்டனார் என்பதை எண்ணிய பாசமா?

எதிரியின் சேனையைக் கண்டு கலங்கவில்லை அர்ஜுனன். பாசமும் பற்றுமே அவன் கலக்கத்துக்குக் காரணம். பற்றாலும் பாசத்தாலும் கட்டுண்ட பார்த்திபன் கண்ணனைக் கேட்டான்... ''தர்மத்துக்காக உற்றார்-உறவினரையும் சுற்றத்தையும் கொன்று குவிக்கத்தான் வேண்டுமா?''

''இவர்கள் எல்லாம் உற்றார்கள், சுற்றத்தினர்கள், உறவினர்கள், பந்துக்கள் என்று, இந்த யுத்தக் களத்துக்கு வந்த பின்புதான் உனக்குத் தெரிந்ததா? ஏற்கெனவே தெரிந்ததுதானே? இதுவா உன் கலக்கத்துக்கும் தயக்கத்துக்கும் காரணம்?'' என்று கேட்டான் கண்ணன்.

போருக்கு அஞ்சுபவன் அல்ல அர்ஜுனன் என்பது கண்ணனுக்குத் தெரியும். போர் வரவேண்டும் என்று விரும்பிய பீம- அர்ஜுனர்களின் ஆவேசமும் கண்ணன் அறிந்ததே! போர் வருவதற்கு முன்பு, அதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் செய்தான் தருமன். அவன், 'போர் வந்து விடக்கூடாதே’ என்று அப்போது கலங்கினான். அந்த நேரத்தில் எல்லாம் போர் முரசங்களைத் தட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுனன். அந்த அர்ஜுனன்தான் இப்போது பயத்தால் கலங்கி நின்றான். அவன் பயத்தைப் போக்கி புதிய சக்தியை உருவாக்க வேண்டிய பொறுப்பைக் கண்ணன் ஏற்றுக்கொண்டான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தனது உபதேசத்தில் அர்ஜுனன் பயம் தெளியவில்லை என்பதை அறிந்தான் பகவான் கண்ணன். அர்ஜுனனுக்குத் துணையாக நிற்கும் தனது சகல சக்திகளையும் அவன் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மகத்தான தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினான். அண்டங்கள் அனைத்திலும் அவன் வடிவமே வியாபித்திருந்தது. ஆக்க சக்திகளும் அழிக்கும் சக்திகளும் அவனது ஆயிரம் கரங்களாக மாறின. அத்தனை தேவதைகளும் அவனது ஆயிரம் சிரங்களாயினர். பஞ்ச பூதங்களும் அவனிடம் அடங்கின. படைப்புகள் அனைத்தும் அவனுள் நிறைந்தன.

அர்ஜுனன் அதிர்ச்சியால் திகைத்தான். ஆனால், பரமானந்த நிலையை எய்தினான். அபார தைரியமும் தன்னம்பிக்கையும் கண நேரத்தில் அவனிடம் தோன்றின.

'அண்ணலே! இந்த தர்ம யுத்தத்தை நடத்த இத்தனை சக்தியும், இத்தனை வல்லமையும் எனக்கு வேண்டும். ஆனால், தங்களின் இந்த விஸ்வரூபத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த வடிவத்தை நான் கிரஹிக்க எனக்கு வல்லமை வேண்டும்'' என வேண்டினான் அர்ஜுனன்.

உடனே பகவான், தன் விஸ்வரூபத்துக்கு ஒரு வரி வடிவம் அமைத்து, அதை ஒரு சக்தி வாய்ந்த யந்திரமாக் கினார். அதுதான் ஸ்ரீமஹா ஸுதர்சன யந்திர வடிவம். தனது சக்திகள் அனைத்தையும் மந்திர சப்தங்களாக்கி, அந்த அக்ஷரங்களை அர்ஜுனனுக்கு மஹா ஸுதர்சன மந்திரமாக உபதேசித்தார். ஸுதர்சன மூல மந்திர சப்தங்களின் சக்தி அர்ஜுனனைச் சுற்றி அரணாக அமைந்தது. அர்ஜுனனின் பயமும் பீதியும் மறைந்தன. அவன் அறியாமை நீங்கியது. தர்மத்தின் வழி நிற்க, அவனுக்குத் துணிவு பிறந்தது. அவனைக் கட்டியிருந்த பற்றுக்கள் அறுந்தன. வீரமும் விவேகமும் மீண்டும் அவனுக்குள் தலைதூக்கின.

அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணன், ''அர்ஜுனா! ஸுதர்சன யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து, ஸுதர்சன மந்திரத்தால், இங்கே மஹா ஸுதர்சன யாகம் எனும் தர்ம வேள்வியைச் செய். அது உனக்கு புத்தியும் பலமும், மன வலிமையும் ஞானமும் தரும். உன்னைச் சுற்றி எதிரிகளால் ஏவப்படும் அஸ்திரங்கள், ஆயுதங்கள், தீய மந்திர தந்திர சக்திகள் ஆகியவற்றிலிருந்து அது உன்னைக் காப்பாற்றும். உன் எதிரிகளை வென்று, தர்ம யுத்தத்தில் நீ ஜெயிக்க இந்த யாகம் வழி செய்யும்'' என்றான்.

'வேள்விக்கான சமித்துகள் யுத்த பூமியில் எப்படிக் கிடைக்கும்?’ என யோசித்தான் அர்ஜுனன். யுத்த பூமியெங்கும் 'நாயுருவி’ எனும் நாணல் போன்ற ஒட்டும்புல் வளர்ந்திருந்தது. கண்ணன் அந்த நாயுருவிச் செடியையே சமித்தாக்கி, யாகத்தைச் செய்யச் சொன்னான். ''வேள்வியும் நானே! வேள்வித்தீயும் நானே! வேள்வியில் சமர்ப்பிக்கும் அன்னமும், நெய்யும், சமித்தும், ஆஹுதியும் நானே! வேள்வி செய்பவனும் நானே! வேள்விப் பயனும் நானே!'' என்று கண்ணன் கீதையாகக் கூறியது அர்ஜுனனின் நினைவில் பசுமையாக இருந்தது.

கண்ணன் திருவடிகள் பட்ட இடத்தில் ஸுதர்சன யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து, அதையே யாகக் குண்டமாக்கி, அக்னியாஸ்திரத்தால் யாகத் தீயை மூட்டி, மஹா ஸுதர்ஸன மூல மந்திரம் சொல்லி, ஸுதர்ஸன யாகத்தைத் தொடங்கினான் அர்ஜுனன். 'ஸு’ என்ற சொல், மிகச் சிறந்த அல்லது மிகப் பவித்திரமான என்ற பொருளைக் குறிக்கும். 'தர்சனம்’ என்ற சொல் தரிசிப்பது என்பதாகும். ஸுதர்சனம் என்பது பரிசுத்தமான விஸ்வரூப தரிசனத்தையே குறிக்கும். ஸுதர்சனம் என்பது ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூபத்தின் பிரதிபிம்பம். மஹா விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரத்துக்கும் ஸுதர்சனம் என்ற பெயருண்டு.

அது ஸுதர்ஸன மூர்த்தி எனும் மஹாசக்தி. மஹா விஷ்ணுவின் திருக்கரத்தில் அமர்ந்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தைக் காக்க வல்ல சர்வசக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை ஸுதர்சனச் சக்கரம் என்கிறோம். ஸுதர்சன யந்திரம், ஸ்ரீமந் நாராயணனின் வரி வடிவம். ஸுதர்சன மந்திரம், அவரது மகத்தான சக்திகளின் சப்த வடிவம். ஸுதர்சன ஹோமம் அல்லது யாகம் மஹா விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை வழிபடும் வேள்வியாகும்.

ஸுதர்சனச் சக்கரம் நீதியைக் காக்கச் சுழலும் தர்ம சக்கரம். அறியாமையாலும் பற்றாலும் பாசத்தாலும் கட்டுண்டு, வாழ்க்கைப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் மனம் கலங்கித் தவிக்கும்போது, கலக்கம் நீங்கித் தெளிவும், துணிவும் ஏற்பட ஸுதர்சன யாகம் அல்லது ஹோமம் வழி செய்கிறது. இது பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உணர்த்திய பிரத்யக்ஷமான கர்ம வேள்வி.

அர்ஜுனன் வேள்வியை முடித்தான். வேள்வி நாயகன் கண்ணன் பூர்ணாஹுதியைப் பெற்று ஆசி வழங்கினான். ஆரம்பத்தில் தயங்கித் தவித்த அர்ஜுனன், இப்போது நிமிர்ந்து நின்றான். காண்டீபத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தேரில் ஏறினான். அவனுக்கு முன்னே அங்கு கருமமே கண்ணாக, கடமையைச் செய்யக் காத்திருந்தான் சாரதி கண்ணன்.

அர்ஜுனனின் காண்டீபம் வளைந்தது. கண்ணனின் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கு யுத்த நாதத்தை ஒலித்தது. தர்மயுத்தம் தொடங்கும் முன்பு ஒரு கர்ம வேள்வியை நடத்தி, குருக்ஷேத்திரத்தை தர்ம க்ஷேத்திரமாக்க வழி வகுத்த கண்ணன் செலுத்திய வழியில் அர்ஜுனன் ரதம் நகர்ந்தது.

இன்றும் நாம் தாங்கமுடியாத பிரச்னைகளில் சுழன்று, விரோத சக்திகளால் தாக்கப்பட்டு, தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு, தைரியமிழந்து, பலவீனத்தாலும், கோழைத்தனத்தாலும், நோய் நொடியாலும், கடன் தொல்லையாலும் அஞ்சி நடுங்கி, நம்பிக்கையிழந்து தவிக்கும் போது... மஹா ஸுதர்சன மந்திரத்தை ஜெபிக்கலாம், ஸுதர்சன ஹோமம் செய்யலாம். அப்படிச் செய்வதால் புதிய சக்தியும், புத்துணர்வும், தன்னம்பிக்கையும் பெற்று, நம்பிக்கையோடு பிரச்சினைகளைச் சமாளித்து அல்லது தீர்த்து வெற்றியடையும் வாய்ப்பை நாம் நிச்சயம் பெறலாம்.

- இன்னும் சொல்வேன்...