Election bannerElection banner
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தயம் நட்சத்திரத்தை 'சதபிஷக்’ என்கிறது வேதம். அதன் தேவதை வருணன். அவனது அருளால் நீராதாரங்கள் நிரம்பி வழியும். விதையை முளைக்க வைப்பதில் அவனது பங்கு உண்டு. உயிரினங்களின் தாகத்தை தணிப்பதுடன் நில்லாமல், பாங்காக வளரவும் உதவுபவன். பசியை குறிப்பிட்ட காலம் வரை அடக்கலாம். அந்த அளவுக்கு தாகத்தை அடக்க இயலாது. மழை பொய்த்து நீராதாரங்கள் வற்றிய நிலையில், மழைக்காக வருண ஜபம் செய்வது உண்டு.

பொய் சொல்பவனைப் பிடித்து தண்டனைக்கு உட்படுத்துவான் என்கிறது வேதம் (அந்ருதே கலுவை க்ரியமாணே வருணோ க்ருஹ்ணாதி). நீரும், நெருப்பும், காற்றும் (கபம், பித்தம், வாதம்) ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது சுகாதாரத்தைப் பாதுகாக்கும். இவற்றில் நீரின் பங்கு வருணனுடையது. மூன்றில் ஒன்று முழுமையாக வெளியேறினால் உயிர் தங்காது.

நீரில் வாசம் செய்கிறார் ஸ்ரீநாராயணன். அபிஷேக ஜலம் வாயிலாக எப்போதும் நீரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார் ஈசன். பிரம்மனிடம் ஈரமான நாவில் இருந்து சரஸ்வதி வெளிவருகிறாள். நான்கு வேதங்களும் வருணனைப் புகழ்ந்து பாடும். வேதியர், தமது மாலைக் கடனில் வருணனை வழிபடத் தவறுவதில்லை. வருணனோடு இணைந்த நீரில் மற்ற தேவதைகள் தோன்றுவார்கள். நடந்து களைத்துப் போனவனை ஆசுவாசப்படுத்துவது நீர். நீரில் முழுகியவனை உயிர் பிரியச் செய்வது நீர். ஆக்கலும் அழித்தலும் அவன் செயல். வெளிவர இயலாமல் தடங்கலைச் சந்திக்கும் உயிரானது பிரிவதற்கு கங்கை ஜலம் பயன்படும்.

அரசர் குலத்துக்கு அரசன் வருணன். 'சதயம் நட்சத்திரத்துடன் இணைந்து எங்களது உபசரிப்பை ஏற்று, வேதம் சொல்லும் முழு ஆயுளை அருளவேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (க்ஷத்ரஸ்ய ராஜா வருணோதிராஜ:). எங்களது வேள்வி யில் விஜயம் செய்து எங்களுக்கு ஆயுளை அருளுவதுடன் நிற்காமல், அவ்வப்போது தோன்றும் பிணியை அகற்ற மருந்தையும் தந்து அருள வேண்டும்’ என்கிற தகவலும் வேதத்தில் உண்டு (யக்ஞம் நோராஜா...).

கும்ப ராசியில் முழுமையாகப் பரவிய நட்சத்திரம் இது. சனி அதன் அதிபதியானாலும், அம்சகத்தில் குரு, சனி இருவரது பங்கும் சேரும்போது... தெளிவான சிந்தனை, நாகரிகம், உடலுழைப்பு, சுகாதாரம் ஆகிய அத்தனையும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறது ஜோதிடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன், முதலில் ராகு தசையைச் சந்திப்பான். அது, 18 வருடங்கள் நீடிக்கும். திருவாதிரைக்கும் ஸ்வாதிக்கும் அது பொருந்தும். பால்யம் பகட்டாக இல்லாவிட்டாலும், இளமை முழுவதும் செழிப்பாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும்.

குருவும், சனியும் அவனது இளமையை நிறைவு செய்வார்கள். குரு 16 வருடம், சனி 19 வருடம்... ஆக 35 வருடங்கள் இரண்டு தசைகளிலும் இருப்பதால், இளமையில் அவர்களது பங்கு நிச்சயமாக இருக்கும். நான்கு பாதங்களில் சம பங்காக ஏற்றுக்கொண்டு இளமையை விளங்கவைப்பார்கள் குருவும் சனியும்.

ராகு- கேதுக்களைத் தவிர்த்து, ஸப்த கிரஹ ஸித்தாந்தம் (ஏழு கிரகங்கள்தான் உண்டு என ராகு- கேதுக்களை ஏற்காதவர்கள் இருந்ததாக ஜைமினி கூறுவார். வராஹமிஹிரர் வரையிலும் ஸப்த க்ரஹ ஸித்தாந்தத்துக்குப் பெருமை இருந்ததாக ஜைமினி பத்யாம்ருதம் குறிப்பிடும். ராசிச் சக்கரத்தில் ராகு-கேதுக்களுக்கு தனி வீடு கிடையாது. உச்ச, நீசம் போன்ற நிலைகளும் இல்லை. 'பாவாதிபதி’ என்ற தகுதியும் இல்லை. பலம் சொல்வதிலும் பங்கு இல்லை. எந்த பாவத்தில் ராகு இருக்கிறாரோ, அந்த பாவாதிபதியின் பலனை இவர் செயல்படுத்துவார்; தன்னிச்சையாக பலனளிக்கும் தகுதி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.

கேமத்ரும யோகத்தில் இரண்டிலோ, பன்னிரண் டிலோ ராகுவோ கேதுவோ இருந்தாலும், கிரகம் இல்லாத சூன்யமாகவே கருதும் ஜோதிடம். உபய பாபித்வத்தில் இவர்களுக்கு பங்கு இல்லை (இரண்டு பாபக் கிரகங்களுக்கு நடுவில் ஒரு சுபக் கிரகம் இருந்தால் அது உபய பாபித்வம். அந்த இரண்டில் ஒன்று ராகுவாகவோ கேதுவாகவோ இருந்தால், உபய பாபித்வம் இல்லை).

பஞ்சமஹா புருஷ லஷணத்தில் இவர்கள் தென்படமாட்டார்கள் (மகா புருஷர்களுக்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. பஞ்சமஹா புருஷ லஷணத்தில் ஏழு கிரங்களுக்கு இடம் இருந்தாலும், ராகு-கேதுவுக்கு பங்கு இல்லை).

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பிற்பாடு வந்த சிந்தனையாளர்கள், ராகுவுக்கும் மற்ற கிரகங்களின் அந்தஸ்தை வாரி வழங்கியிருக்கிறார்கள். சனியைப் போன்று ராகுவையும், செவ்வாயைப் போன்று கேதுவை யும் பாவித்து பலன் சொல்லச் சொல்லும் ஜோதிடம் (சனிவத்ராஹு: குஜவத்கேது:).

ஜைமினி தமது பத்யாம்ருதத்தில், ராகுவுக்கும் கேதுவுக்கும் இடம் அளித்திருக்கிறார். ஒன்பது கிரகங்கள் இருந்தும் வாரத்தின் ஏழு நாட்களில் அவர்களைச் சேர்க்கவில்லை. இப்படி, இடைச் செருகலாக இடம்பிடித்த ராகுவுக்கும் கேதுவுக்கும் பலன் சொல் வதில் முதலிடம் அளிப்பவர்களும் உண்டு. ராகுவை அழிவுக்குக் காரகனாகவும், கேதுவை மோட்சத்துக்கு காரகனாகவும் சொல்வது உண்டு. ராகு- கேதுவின் தோன்றலை விளக்கும் புராணக் கதை, இடைப்பட்ட காலத்தில்தான் இவர்கள் நவக்கிரகங்களுடன் இணைந்தார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அத்துடன் 7 கிரஹ ஸித்தாந்தத்தையும் மெய்ப்பிக்கிறது.

எது எப்படியானாலும், சனிக்கு அடுத்து அதிகப்படியாக தசா காலத் தின் எண்ணிக்கை (18 வருஷம்) அளிக்கப்பட்டிருக்கிறது (சனி 19 வருடங்கள்). காலசர்ப்ப யோகம், காலசர்ப்ப தோஷம், விபரீத காலசர்ப்ப யோகம்... இப்படி, புது சிந்தனையில் பல யோகங்கள் உருவாகி, அவர்களது பெருமை விளக்கப்பட்டிருக்கிறது. கணிதத்தில், இந்த கிரக வடிவமான கேதுவுக்கு இடம் இல்லை. கேது கணம் என்று தூமகேது முதலானவற்றை விளக்கும் வான சாஸ்திரம். நக்ஷத்ர பாதத்தில் தென்படும் சந்திரனின் 'பாத’மான ராகுவுக்கு, கிரகத்தின் தகுதியை அளித்து பலன் சொல்லும் வழக்கம் பல காலமாக தொடர்கிறது. தசா வருடங்கள் 18-ல், ஒன்பது கிரகங் களின் புக்தியும் அந்தரமும் வருவதால், கூட்டுப்பலனில் மற்ற கிரகங்களின் பங்கு இருப்பதால், அவர்களின் செயல்பாடு சுக - துக்கங்களை அனுபவிக்க வைக்கும் என்பது ஆறுதலை அளிக்கிறது.

தசாநாதன் ராகுவானாலும்... புக்தி நாதன், அந்தரநாதன் என்கிற தகுதி மற்ற ஏழு கிரகங்களுக்கு இருப்பதால், ராகுவுக்கு தசா காலம் அளிக்கப்பட்டது பொருந்தும். தர்மசாஸ்திரம் ராகுவை ஏற்கும்; கேதுவை ஏற்காது. கிரகணத்தில் ராகுவின் பங்கை வரவேற்கும் (ராஹுக்ரஸ்த திவாகரேந்து). கேது க்ரஸ்தத்தை அலட்சியப்படுத்தும். கிரகங்களில் ராகு- கேதுவின் இணைப்பை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் இருந்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட இன்றைய சமுதாயத்துக்கு, அதன் ஆராய்ச்சியில் நாட்டம் இல்லை.

ஜோதிடத்திலும் வியாபார நோக்கு புகுந்து விட்டதால், அறிஞர்களும் ஆராய்ச்சியில் இறங்கத் தயங்குகிறார்கள்!

பேச்சில் தெளிவு இருக்கும். எதிரிகளை முறியடிக்கும் திறன் இருக்கும். சளைக்காமல் தனது சக்திக்கு மிஞ்சிய உழைப்பை ஏற்பான். ஏமாறமாட்டான்; ஏமாற்றவும் முடியாது... இவை அத்தனையும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் வராஹமிஹிரர். பிறர் மனைவியைக் கவர்வது, குடி- கும்மாளத்துடன் பொழுதை கழிப்பது, கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வது, எடுத்த காரியத்தை முடிக்கும் வரை நிலைத்து நின்று உழைப்பது ஆகியன சதய நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர்.

முதல் பாதத்தில் பிறந்தவன் தனது முடிவை தயக்கம் இல்லாமல் சொல்பவன். 2-வதில் தனது விருப்பப்படி சட்ட திட்டத்தை வகுத்துக்கொண்டு எதிரியை முறியடிப்பான். மூட நம்பிக்கையை வெறுப்பவன். 3-வதில் உப்புசப்பில்லாத விஷயங்களில் சண்டை-சச்சரவை வளர்ப்ப வன். 4-வதில் கருமியாக

செயல்படுவான் என்று நான்கு பாதங்களுக்கும் பலன் சொல்லும் ஜோதிடம். வேளையை அறிந்து விவேகத்துடன் செயல்படுவான், அமைதியான இயல்பு, அளவான உணவில் திருப்தி, சக்திக்கு மீறிய செயலில் ஈடுபாடு ஆகியன சதயம் நட்சத்திரத்தில் பிறந்த வனில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

நூறு தாரைகளை உள்ளடக் கியது சதயம். 'சத பிஷக்’ என்ற சொல்லில், 'சத’ என்பது 100-ஐ குறிக்கும். பல தாரைகளின் தொகுப்பில் உருவானது இது என்ற பெருமையுண்டு. அசையும் இயல்பில் அடங்கும் சதயம் நட்சத்திரம். கள்ளு, ஆஸவம், போதைப்பொருள், குளம், குட்டை, ஆறு, அணைக்கட்டு, மருந்து வகைகள் ஆகியவற்றில் சதய நட்சத்திரத்தின் இணைப்பு செழிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பராசரர்.

சதயம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவன் மகிழ்ச்சியோடும், செல்வச் சீமானாகவும், உண்மையைக் கடைப்பிடிப்ப வனாகவும், வேதம் ஓதுபவர்களையும் பசு மாட்டையும் மதிப்பவனாகவும் இருப்பான். 2-வதில் பாபச் செயலில் பற்று, மக்கள் விரோதம், சண்டை- சச்சரவில் ஈடுபாடு, குரூரமான செயல்களில் இரக்கமின்றி செயல்படுதல் ஆகியன தென்படும். 3-வதில் கொலை- கொள்ளையில் கூச்சம் இருக்காது, பலவீனமான இதயம், தரம் தாழ்ந்த செயலில் ஆர்வம், செல்வச்சீமானாக திகழும் நிலை- அத்தனையும் இருக்கும். 4-வதில் நட்புக்கு தகுதியற்றவன், போகி, பெண்ணாசை, சுயமரியாதை, சுகவாழ்வு - அத்தனையும் தென்படலாம் என்கிறது பலசார சமுச்சயம்.

கால புருஷனின் கால்முட்டை (கணுக்கால்) சுட்டிக்காட்டும் கும்பராசி. அந்த உருப்படியின் தரத்தை சதய நட்சத்திரம் வரையறுக்கும். அதற்கு உதவியாக குருவும் சனியும் செயல்படு வார்கள். 'வம் வருணாய நம:’ என்று சொல்லி வழிபடலாம். 'இமம்மே வருண’ என்ற மந்திரத்தை உச்சரித்து 16 உபசாரங்களைச் செய்யலாம். 'வருணாய ஸ்வாஹா சதபிஷஜே ஸ்வாஹா’ என்று சொல்லியும் வழிபடலாம். 'தத்வாயாமி’ என்ற மந்திரத்தைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்யலாம். மந்திரம் தெரியாத வர்கள், 'சதபிஷக் நக்ஷத்ரதேவதாயை வருணாயநம:’ என்று சொல்லி 12 நமஸ்காரங் களைச் செய்யலாம். 'ஆயு: கீர்த்திம் ப்ரஜாம் லக்ஷ்மீம் ஆரோக்யம் ஸீத்ருடம் யச: ப்ரத்யுத்பன்ன மதித்வம்ச ப்ரயச்ச கருணாகர’ - என்ற செய்யுளை மூன்று தடவை சொல்லி வணங்கலாம்.  நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் 'வருணாய நம:’ என்று சொல்லி வணங்கலாம்.

வேதத்தில் கர்ம காண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்று மூன்று பிரிவுகள் உண்டு. உபாஸனா காண்டம் வழிபடும் முறையை விளக்கும். காலையில் நீராடி, நெற்றித் திலகமிட்டு, சப்பணம் இட்டு உட்கார்ந்து- கண்ணை மூடிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்து, தெய்வ வடிவத்தை தியானம் வாயிலாக மனதில் குடியிருத்த வேண்டும். மனத்தில் இறையுருவம் இருக்கும் தறுவாயில் அதை நினைத்து, 'வருணாய நம:’ என்று மனதில் அசைபோட வேண்டும். மந்திரமாக இருந்தாலும், செய்யுளாக இருந்தாலும், பெயராக இருந்தாலும்... அதை உச்சரிக்கும் முன்பு அந்த இறையுருவத்தை மனத்தில் இருத்த வேண்டும். மனத்தில் பார்த்துக்கொண்டே அவன் பெயரை உச்சரிக்க வேண்டும். எந்த ஸ்தோத்திரமானாலும் அங்கந்யாச கரன்யாசங்களைக் கையாண்ட பிறகு தியானம் செய்யவேண்டும். அதற்கு பிறகு ஸ்தோத்ரத்தை ஆரம்பிக்கவேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் த்யானம் சொன்ன பிறகுதான் நாம பாராயணம் வரும்.

பல அலுவல்களுக்கு இடையே நாமாவை மட்டும் சொன்னால் பலன் இருக்காது. இறையுருவத்தின் இணைப்போடு நாமாவை உச்சரிக்க வேண்டும். இது பண்பான நடைமுறை. அதுவும் தவிர, மற்ற அலுவல்களிலிருந்து விடுபட்டு இறையுருவத்தை மனத்தில் இருத்தி பாராயணம் செய்தால்தான் பலன் ஏற்படும். கிளிப்பிள்ளை சொல்வது போல் மனம் தொடாமல் உதட்டோடு ஸ்தோத்திரம் செய்வது போதுமான பலனை ஈட்டித் தராது. எளிய முறையில் எதையும் அடையமுடியாது பரிச்ரமப்பட்டு பாடுபட்டு செயல்படும்போது பலன் எளிதில் கிடைத்துவிடும்.

- வழிபடுவோம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு