மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பூணூல் கல்யாணம் நடக்கும் முன்பு நாந்தி சிராத்தம் பண்ணுகிறோம். அதை, இதுபோன்ற விசேஷ நாட்கள் தவிர சாதாரண நாட்களில் செய்யலாமா?

- எஸ். சிவராமகிருஷ்ணன், மதுரை-16

##~##
நாந்தி சிராத்தம் பூணூல் கல்யாணத்துக்கு ஓர் அங்கம். அது ஒரு விசேஷ கல்யாணத்துடன் ஒட்டி வரும். கல்யாணத்தின் நிறைவை பதிவு செய்ய அது உதவும். நாந்தி சிராத்தம் தனியாக வராது.

ஷோடச கர்மாக்களுக்கும் ப்ராயச்சித்த கர்மாக்களுக்கும் அங்கமாக நாந்தி சிராத்தம் செயல்பட்டு, அதன் நிறைவுக்கு உதவும். உத்ஸவ காலங்களில் ஸ்வாமி வலம் வருவதுண்டு. நாம் நினைத்தபோது எல்லாம் ஸ்வாமி உலாவை நிகழ்த்த முடியாது. விசேஷ நாட்களில் பஞ்சபக்ஷ பரமான்னத்துடன் சமாராதனை இருக்கும். தினமும் சமாராதனை இருக்காது. கல்யாணத்துக்கு அங்கமாக நாகஸ்வர இசை இருக்கும். ஒரு செயலை நிறைவு செய்யும் நிகழ்வுகளை, அந்த செயலை ஒட்டி நடைமுறைப்படுத்துவது சிறப்பு.

சாதாரண நாட்களில், குறிக்கோள் இல்லாமல் நமது விருப்பத்துக்கு நாந்தி சிராத்தத்தை நடைமுறைப்படுத்த இயலாது. சட்டதிட்டம் ஒன்று இருந்தால் மட்டுமே அதன் சிறப்பு நிலைத்திருக்கும்.

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்?
வீட்டுத் தோட்டத்தில் புற்று உருவானால் அதை அகற்றலாமா? அல்லது வழிபட வேண்டுமா?

- அ.யாழினி பர்வதம், சென்னை-78

பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம் (கவாமங்கே ஷ§திஷ்டத்தி புவனானி சதுர்தச). தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம் (எததிவா அக்னேஸ்தேஜோயத்கிருதம் எதத்ஸோமஸ்ய யத்பய:)

பஞ்சகவ்யம், (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது, மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். குளம்படிபட்ட தூசி நமது உடலில் பற்றிக்கொண்டால், நீராடிய தூய்மை உண்டு. மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை நல்ல வேளையாக முஹுர்த்த சாஸ்திரம் சொல்லும் (கோதூளி லக்னம்).

பசு மாட்டின் சாணி நெருப்புடன் இணைந்து திருநீறாக உருவெடுக்கும். நீராடியதும் தூய்மை பெற திருநீறை அணியச் சொல்லும் சாஸ்திரம் (அக்னி ரிதிபஸ்ம, ஜலமிதி பஸ்ம...). நெற்றியில் த்ரிபுண்ட்ரம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் (லலாடேத்ரிபுண்ட்ரம் த்ருதிவா). ஈசனின் உடல் முழுதும் திருநீறு ஜ்வலிக்கும் (பஸ்மோத்தூளித விக்ரஹ:) குழந்தைகளின் பயத்தை அகற்ற மந்திரத்தை உச்சரித்து திருநீறு அணிவிப்பது உண்டு.

நாம் செய்த பாபம் அறவே அகல பசுவை தானமாக அளிக்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (யக்நஸாதனபூதாயா விச்வஸ்ய அகப்ரணாசினீ..). ரஜஸ்வலா தோஷ நிவர்த்திக்கு பசுவை கொடையாக வழங்கச் சொல்லும் சாஸ்திரம். பசு வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணன். கோபாலன் என்ற பெயர் அவனது பசு பணிவிடையை சுட்டிக்காட்டும். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும்.

புதுமனை புகுவிழாவில் மனையின் தூய்மைக்குப் பசு வேண்டும். முதலில் பசுமாடு மனையில் புகுந்து தூய்மை பெற்ற பிறகு நாம் நுழைவது, நமது முன்னேற்றத்துக்கு அத்தாட்சி. வீடு விளங்க பசுமாடு வேண்டும். பசுவை நான்கு கால் பிராணியாக- விலங்கினமாக மட்டுமே பார்க்கக் கூடாது. அதில் ஒட்டுமொத்த தேவதைகளும் ஒன்றியிருப்பதால், அதன் வரவானது, செல்வத்தில் வரவாக மட்டுமின்றி மகிழ்ச்சியின் வரவாகவும் அமையும். ஆகையால் புதுமனைப் புகுவிழாவில் முதலில் வீட்டுக்குள் நுழைவது பசுவாக இருக்கவேண்டும்.

வீட்டில் தோட்டம் அமைத்து நாம் தினமும் பராமரிக்க வேண்டும். தினமும் நமது நடமாட்டம் இருந்தால் புற்று முளைக்க வாய்ப்பு இருக்காது. தோட்டத்தை கவனியாமல் இருந்தால், ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் புற்று உருவாகி விடும். நாம்தான் புற்றை உருவாக்கும் சூழலைத் தோற்றிவிக்கிறோம். அதை அகற்றுவது பாபம்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணப் பொருத்தத்தின்போது சமசப்தம ராசியான கடகமும் மகரமும் (சனி சந்திரன் பகை, பெண் ராசி), கும்பமும் சிம்மமும் (சூரியன் சனி பகை; ஆண் ராசி)... இதை சில ஜோதிடர்கள் சேர்க்கக்கூடாது என்றும், சமசப்தம ராசியை எதையும் பார்க்காமல் சேர்க்கலாம் என்றும் கூறுகிறார்கள். இதனால் கணவன் - மனைவி பிரிவு ஏற்படுமா?

நன்றாக திருமணப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பார்த்து நடத்திய திருமணங்களில் சோகங்கள், பிரிவுகள் வராதா? திருமணப் பொருத்தம் மூலம் விதியை வெல்ல முடியுமா? விதியை மதியால் வெல்லமுடியாது என்று கூறும்போது, கர்மவிதிப்படியே கணவன் - மனைவி அமைவர் என்றால் திருமணப் பொருத்தம் எதற்கு?

குடும்ப ஜோதிடர்கள் கூறும் முடிவை வைத்துக்கொண்டும், அவர்களது கருத்தை வேதவாக்காகக் கொண்டும் திருமணம் நடைபெறுகிறது. பிரச்னை என்று வந்தால், வேறொரு ஜோதிடரிடம் காண்பிக்கும்போது ஜாதகப் பொருத்தம் - நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்கிறார்கள். ஆக, ஜோதிடர்கள் செய்யும் தவற்றுக்கு ஜாதகர்கள் பலியாகிறார்கள்!

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தபிறகு திருமணப் பொருத்தம் எதற்கு?

அதேபோன்று, ஜாதகத்தில் இரண்டு தாரம் என்று இருக்கும்போது, திருமணப் பொருத்தத்தின் மூலம் ஒரு தாரம்தான் என எப்படி நிர்ணயிக்க முடியும்? பெரும்பாலான ஜோதிடர்கள், தாங்கள் சொல்வதே சரி என வாதிடுகிறார்கள். ஆனால் பிரச்னை என்று வரும்போது, கருத்தை மாற்றிச் சொல்கிறார்கள். இது, வேத மகரிஷிகள் வகுத்த ஜோதிட சாஸ்திரத்துக்கு தலைக்குனிவு அல்லவா?

மேலும், தோஷ ஜாதகத்துக்கு தோஷ ஜாதகத்தை சேர்த்தால் பிரச்னை வராது என்றும் சொல்கிறார்களே... தங்களின் விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

- ஏ.ஆர்.ஆர். சுதர்ஸனன், சென்னை-26

பத்து பொருத்தங்களில் ராசிப் பொருத்தமும் ஒன்று. அதை வைத்து ஜாதகத்தின் இறுதி முடிவை எட்டக்கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் எண்ணிக்கையில் 7-வது ராசியாக வந்தால், முழுமையான ராசிப் பொருத்தம் என்று சொல்லும்.

இருவருக்கும் ஏழாவது ராசி என்ற கருத்தை சம ஸப்தகம் என்பர்; 'சமமாக வந்த ஏழு’ என்று பொருள். மனதுக்கு காரகனான சந்திரன் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, இருவரது சந்திர லக்னத்திலும் இருந்துகொண்டு... தனது (அவளின்) கணவன், தனது (அவனின்) மனைவி இவர்களின் இடத்தை முறையே பார்ப்பதால், அதற்குத் தனிச் சிறப்பு உண்டு.

தாங்கள் சுட்டிக் காட்டிய சமஸப்தகத்தில் ராசிப் பொருத்தம் உண்டு. ராசியதிபதி பொருத்தம் இல்லை என்று பொருள். சம ஸப்தகம் என்ற தகுதி இழக்கப்படவில்லை. 'சமஸப்தகத்தில் இருவரது ராசி நாதனும் பகையாக இருந்தாலும் சமஸப்தகம் என்கிற தகுதி இழக்கப்பட மாட்டாது’ என்கிறது வித்யாமாதவீயம்  (அப்யரதீ உபே அபி).

சமஸப்தகம் இருந்தால் எதையும் பார்க்கவேண்டாம் என்கிற கூற்று தவறானது. ஒரு பொருத்தத்தை வைத்து இறுதி முடிவெடுப்பதை ஜோதிடம் ஏற்காது. ராசிப் பொருத்தம் இல்லாமல் இருக்கும் சூழல், கணவன் - மனைவி பிரிவை சுட்டிக்காட்டாது. இரண்டு ராசிக்கு உடையவர்கள் ஒருவராகவோ, நண்பர்களாகவோ, சமஸப்தகமாகவோ இருந்தால் ரஜ்ஜு, வேதை, கணம், ராசி ஆகிய நான்கு பொருத்தமின்மைகள் அகன்றுவிடும் என்கிறது ஜோதிடம் (ஏகாதிபத்யே மைத்ரேவா ஸமஸப்தக ஏவவா ரஜஜீ வேத கணை; தோஷோ ராசி தோஷோ நவித்யதெ).

ஒரு பொருத்தத்தின் இழப்பை நிறைவு செய்யும் விதமாக சமஸப்தகம் செயல்படுமே தவிர, அதற்கு எந்தவித தனிச் சிறப்பும் இல்லை. எண்ணிக்கையை வைத்து ராசிப் பொருத்தம் தோன்றுவதால், ராசியின் மற்ற பொருத்தங்களை வைத்து ராசிப் பொருத்தத்தின் இழப்பை நிர்ணயிக்கக் கூடாது.

பத்து பொருத்தங்களில் எந்தப் பொருத்தமும் கணவன் - மனைவி பிரிவை இறுதி செய்யாது. இன்ப - துன்பங்களின் கலவைதான் வாழ்க்கை. துன்பத்தை அறவே அகற்றி இன்பத்தை ஒட்டுமொத்தமாக சுவைக்க வைக்க ஜாதகப் பொருத்தத்தால் இயலாது. அவர்களது முன்ஜென்ம வினையின் அளவுகோல்தான் இன்ப - துன்பத்தை வரையறுக்கும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கர்ம வினையின் செயல்பாடு தோன்றும் வேளையை ஜாதகம் சுட்டிக்காட்டும். கர்மவினையை அறவே அகற்றுவது அதன் வேலை இல்லை. நமது விருப்பங்கள் அனைத்தையும் ஜாதகம் வாயிலாக செயல்பட்டு எட்டிவிடலாம் என்பது பொய்யான தகவல். வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள ஜாதகம் உதவும். வரக்கூடிய துன்பம் அல்லது இன்பத்தை சந்திக்காமல் செய்ய அதனால் இயலாது. ஆனால் துன்பத்தை எளிதில் கடந்து செல்ல பரிகாரம் வாயிலாக ஈட்டிய மனோதிடம் ஒத்துழைக்கும்.

விதி கண்ணுக்குப் புலப்படாத ஒன்று; மதி என்பது சிறிய சிந்தனை வட்டத்தில் ஒதுங்கிய முடிவு. மதி விதியை வெளிக் கொண்டு வருகிறது. நமது முயற்சி விதியை வரவழைக்கும். முன்ஜென்மத்தில் நாம் செய்த செயல்பாடு விதியாக மாறும். அதை அத்ருஷ்டம், தைவம், கர்மவினை இப்படிப் பல பெயர்களில் சுட்டிக்காட்டுவது உண்டு. பலம் குன்றிய கர்மவினை இன்பமோ துன்பமோ எதுவாகவும் ஆகலாம். நமது நடப்பு பிறப்பில் முனைப்பான செயல்பாடுடன் கூடிய வலுவான முயற்சியானது, கர்ம வினை தோன்றினாலும் செயலற்றதாக்கிவிடும். பலமான கர்மவினை... போதுமான முயற்சியின்மையில் கர்மவினை வென்று, இன்பத்தையோ துன்பத்தையோ திணித்துவிடும். அதற்கு விதி என்று பெயர். விதியை நாம்தான் வரவழைக்கிறோம்; தானாக வராது. நமது சிந்தனைக் கோளாறால் ஏனோதானோவென்று செய்யப்படும் செயல்பாடுகள், கர்மவினையை தடுக்கும் தகுதியை இழக்கும்போது, விதி வென்று விடும். சோம்பேறிக்கு ஜோதிடத்தில் இடம் இல்லை.

வருங்கால குறிப்பை சுட்டிக்காட்டி, அதற்கேற்ப  முயற்சியில் முழுமையாக இறங்கச் சொல்லும் ஜோதிடம். விதிப்படி நடக்கும் என்று செயலற்று இருந்தால்... நல்ல கர்ம வினையால் இன்பம் ஏற்படும்; கெட்ட கர்மவினை இருந்தால் துயரத்தில் ஆழ்த்திவிடும். திருமணப் பொருத்தத்தில் இறங்கினால் மட்டுமே, அது வெற்றியில் முடியுமா தோல்வியில் முடியுமா என்பதை அறிய இயலும்.

விதியைச் சுட்டிக்காட்டும் திருமணம் முடிந்து பிரச்னை எழும்போது, மற்றொரு ஜோதிடரை அணுகினால்... அவர் பிரச்னையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஏதாவதொரு இடையூறை சுட்டிக்காட்டி, பிரச்னைக்கு காரணம் தேடிப் பிடித்தாக வைத்து, நமக்கும் அறிவுறுத்துவார். இதுபோன்ற நிலையில், பிரச்னையின் தரம் நேரடியாக ஜோதிடருக்குத் தெரிந்தபடியால், நமக்கு பதில் சொல்ல சிரமம் இல்லாமல் போய்விடும். ஜோதிடர் தவறு செய்யவில்லை; நாம்தான் அவரை அணுகி அவர் சொல்லும் தவற்றை ஏற்று துயரத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

முடிவை வைத்து (அதாவது நன்கு முடிவைத் தெரிந்து கொண்டு) அதற்கேற்ற காரணத்தைத் தேடும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். மகான்களின் ஜாதகத்தை அலசுவார்கள். அவர்களது முடிவு ஏற்கெனவே தெரிந்தமையால், ஏதாவது ஒன்றை ஜாதகத்தில் காரணம் காட்டி, நம்மையும் நம்ப வைத்து விடுவார்கள்! பிறந்த குழந்தையின் ஜாதகத்தை வைத்து, இவன் மகானாகத் திகழ்வான்... இவன் போக்கிரியாக மாறுவான்... இவன் நல்லவனாகவும் வல்லவனாகவும் மிளிர்வான் என்று சொல்லும் துணிவு இருக்காது. காரணத்தை வைத்து காரியத்தை எடுத்துச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. நடக்காமல் போனால் புகழ் மங்கிவிடும். ஆகையால், தற்காப்பாக பெரியோரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, விளக்கமளித்து தங்களின் பெருமையை வளர்த்துக்கொள்பவர்களும் உண்டு! வியாபார நோக்கில் செயல்பட ஆரம்பித்த ஜோதிடத்தில், உண்மையைத் தேடுவது மிக கடினம்.

திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. விதிப்படி நடக்கும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இருப்பதை சாஸ்திரம் தடுக்காது. ரிஷிகளின் சிந்தனை திருமணப் பொருத்தத்தை வெளியிட்டது. முயற்சியால் வாழ்க்கையின் முன்னேற வாய்ப்பு இருந்தால், அதை ஏற்று மகிழலாம் என்கிற கோணத்தில்... விருப்பம் உள்ளவர்களுக்கும் தேவை இருப்பவர்களுக்கும் பயன்படும் வகையில் அவர்கள் வழிவகுத்தார்கள்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தெரியாத விதியை நம்பி தாங்களும் ஜாதகத்தை விலக்கலாம். தவறில்லை. பிறந்த குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது, கல்லூரியைத் தேடுவது, வேலைக்கு அலைவது இவற்றையும் தாங்கள் விதியை எண்ணி தவிர்க்கலாம். ஆனால் துணிவு இல்லை! திருமணத்தில் நமது விருப்பத்துக்கு இடமில்லாததால், விதியை எண்ணி பொருத்தத்தின் குறையைப் பெரிதுபடுத்துகிறீர்கள். தங்களது விருப்பத்தை நிறைவேற்ற ஜாதகம் அல்லது பொருத்தம் பயன்படாது. எதை சந்திக்கப் போகிறோமோ அதில் இருந்து விடுபட அல்லது மகிழ்ச்சியைப் பெற... விதி தெரியாத நிலையில், முயற்சி தேவை. அதற்கு முன்னோர்களின் அறிவுரையும் தேவை. அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ளாமல் ஆராய்ச்சியில் இறங்கும் துணிவு நம்மவர்களில் தென்படுகிறது. முதலில் ஜோதிடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்.

தாங்கள் கேள்வியுடன் துணைக்கேள்விகளை அடுக்கி ஆராய்ச்சிக் கட்டுரையாக மாற்றியிருக்கிறீர்கள். அந்த அளவுக்கு பதிலை ஆராய்ச்சியாக மாற்ற இயலாது. நல்ல ஜோதிடரை அணுகி ஜோதிடத்தைப் புரிந்துகொண்டு, பிறகு சந்தேகம் வரும்போது கேள்வி கேட்க வேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை... இருட்டில் தடுமாறுபவனுக்கு விளக்கு வழிகாட்டும். அதுதான் ஜோதிடம். இருட்டில் விதியைத் தெரிந்துகொள்ள அந்த விளக்கு (ஜோதிடம்) வேண்டும். சிந்தனையானது முட்டுச்சந்தில் முடங்கிக் கிடக்கும்போது, கர்மவினை (விதி) ஜோதிடரை அணுக ஏவுகிறது. அவரது தகவல், முடங்கிக் கிடந்த சிந்தனைக்கு விஷயமாகிறது. சிந்தனையை தன்வசப்படுத்திய விதி வென்று விடுகிறது!

- பதில்கள் தொடரும்..