Published:Updated:

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

Published:Updated:
மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!
மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த உலகில் ஸம்பத்து, விபத்து என இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இதில் ஸம்பத்து என்று நாம் நினைப்பது ஸம்பத்துமல்ல; விபத்து என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது விபத்துமல்ல. எம்பெருமான் ஸ்ரீவிஷ்ணுவை மறப்பதே விபத்து. அறுபடாத எம்பெருமானின் நினைப்பே ஸம்பத்து.

அத்தகைய ஸம்பத்தை நாம் பெறுவதற்காக பரம், வியூஹம், விபவம், ஹார்தம், அர்ச்சை ஆகிய ஐந்து உத்தமமான நிலைகளில் தோன்றுகிறான் பகவான். இந்த நிலைகளை ஆசார்யர்கள், 'பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; ஹார்தம் என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது'' என்று விவரிக்கிறார்கள்.

பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது. ஆவரண ஜலம் என்பது சத்ய லோகத்துக்கும் மேலே சூழ்ந்து இருப்பது. பூலோகத்தில் தாகம் எடுத்தவனுக்கு ஆவரண ஜலம் பயன்படாது.

நமது அருகிலேயே சமுத்திரம் இருந்தாலும் அதிலிருந்து நீரை எடுத்துப் பருக முடியாது. அப்படி, நம்மால் சுலபமாக சேவிக்க முடியாத அளவுக்கு திருப்பாற்கடலில் இருக்கிறார் வ்யூஹ மூர்த்தி. விபவ மூர்த்தியோ காட்டாற்று வெள்ளம். மழை பெய்தால் ஏகமாக வெள்ளம் போகும்; மழை நின்றால் ஒன்றும் இருக்காது. அந்த மாதிரி அவதாரங்கள் ஒரு காலத்தில் நடந்தவை. ஹார்தம் என்பது ஊற்று நீர் போன்றது. கீழே பூமியில் நீர் நரம்பு இருப்பதை வல்லுநர்கள்தான் சொல்ல முடியும். அப்படி நித்ய சம்சாரிகளாக இருக்கும் நம்மால், ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானை உணர்வது சுலபமான காரியம் இல்லை.

அர்ச்சாவதாரம் கிணற்று நீர் போன்றது. கிணறு வெட்டி, தண்ணீரும் இருந்து... அதில், ராட்டினம்- கயிறு- குடத்தைப் போட்டு, ஒரு குடம் நீர் பருகக் கொடுத்தால் என்ன கஷ்டம்? அதேபோன்று கோயில் கட்டி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்தக் கோயில் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தால், நமக்கு அனுபவிக்க என்ன கஷ்டம்?!

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

அர்ச்சாவதாரத்தில் பகவான் நம் பக்கத்தி லேயே குடிகொண்டிருக்கிறான். ஒரு விக்கிரகத்தைச் சமைத்து, 'அப்பனே! இந்த விக்கிரகத்தில் இரு’ என்றால், நம்முடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு பரமாத்மா அங்கே இருப்பான். அர்ச்சாவடிவில் தெய்வம், ஆர்ஷம், மானுஷம், தைவதம், ஸ்வயம்பு என்று 5 வகையாக கோயில்களில் எழுந்தருளியிருக்கிறான் பரமாத்மா. இவற்றுள் முதல் நான்கு முறையே... தேவதை, மகரிஷிகள், மனிதர்கள், சித்தர்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டவை. ஸ்வயம்பு என்பது பரமாத்மா தானே அங்கிருக்க வேண்டும் என்று சங்கல்பித்து எழுந்தருளியிருப்பது ஆகும். ஸ்வயம்பு ரூபங்களில் மிக உயர்ந்தது ஸ்ரீநரசிம்ஹம்.

நரஸிம்ஹ அவதாரம் எதற்கு? ஹிரண்யகசிபுவை தண்டிக்கவோ, பிரகலாதனை ரட்சிக்கவோ அல்ல. பிரகலாதனை மலையில் இருந்து உருட்டியபோதே ரட்சிக்கவில்லையா? ஆழக்குழி வெட்டி ஆங்கனையே தீ மூட்டி, அந்தத் தீக்குழியில் தள்ளியபோது ரட்சிக்க வில்லையா? விஷத்தைக் கொடுத்தபோது ரட்சிக்க வில்லையா; பாறாங்கல்லைக் கட்டி நடு சமுத்திரத்தில் விட்டபோது ரட்சிக்கவில்லையா? தம்பராசுரன் மாயையால் அந்தக் குழந்தையை வஞ்சித்தபோது, ரட்சிக்கவில்லையா? பிறகு எதற்காக இந்த அவதாரம்? பிரகலாதனின் வாக்கை ரட்சிக்க!

சாணினும் உளனோர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்மா மேருக் குன்றினும் உளன் இந் நின்ற
தூணினும் உளன்முன் சொன்ன சொல்லினும்
உளனித் தன்மை காணுதி விரைவின் என்றான்

(கம்ப ராமாயணம் 6.3.124)

''எங்கேடா இருக்கிறான் என்று நீ கேட்கும் சொல் லிலும் அவன் உறைகிறான். அவன் இல்லாத இடம் உண்டோ? அவன் உன்னுள்ளும் இருக்கிறான்; என்னுள்ளும் இருக்கிறான்'' என்று பகவானின் நீக்கமற நிறைந்திருத்தலை பிரகலாதன் விளக்குகிறான். எங்கும் அவன் பரவி இருக்கிறான் என்கிறது குழந்தை. குழந்தை எங்கே காட்டினாலும் அந்த இடத்திலிருந்து வரவேண் டும் என்பதற்காக அவசரத் திருக்கோலம் பூண்டு, சர்வ பதார்த்தங்களிலும்... ஸ்ரீலட்சுமி நரஸிம்ஹனாக, நரம் கலந்த சிம்ஹமாகக் காட்சி அளித்தான் பரமாத்மா.

ஆந்திர மாநிலத்தில் நரசிம்ம க்ஷேத்திரங்கள் பல உள்ளன. ஸ்ரீஅஹோபிலம், மங்களகிரி, வேதாத்ரி, கேதவரம், மட்டபல்லி, வாடாபல்லி, யாதகிரிகுட்டா, சோபநாத்ரி, ஸிம்ஹா சலம், கோருகொண்டா, புட்ட கொண்டா, ஸ்தம்பாத்ரிபுரம், ரேபாலா, புஷ்பகிரி, சிங்கராயகொண்டா, மால கொண்டா... என்று இப்படி பல்வேறு மஹா க்ஷேத்ரங்களில் எம்பெருமான் பெருமையுடன் விளங்கு கிறான். இவற்றுள் கிருஷ்ணாநதி தீரத்தில் அமைந்த மங்களகிரி, வேதாத்ரி, மட்டபல்லி, வாட பல்லி, கேதவரம் ஆகிய ஐந்தும் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதாத்ரியில் இருப்பவன் யோகானந்த நரசிம்ஹன். இடுப்பிலே கத்தி வைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு தேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளிப்பது போன்று எல்லா வியாதிகளையும் நிவர்த்தி பண்ணுகிறான். வாடபல்லி நரசிம்ஹனுக்கு தீபாலயன் என்று பெயர். அவன் மூக்குக்கு நேராக ஒரு தீபமும் திருவடியில் ஒரு தீபமும் இருக்கும். கர்ப்பக்ரஹத்திலோ துளி காற்று கிடையாது. உள்ளே போனால் வேர்வை கொட்டும். ஆனால், பகவான் மூக்குக்கு நேரே இருக்கும் தீப ஜ்வாலை மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். அவன் திருவடியிலே இருக்கிற ஜ்வாலை ஆடவே ஆடாது. நாம் மிகவும் சஞ்சலத்துடன் இந்த ஸந்நிதியில் நுழைகிறோம். இதை ஆடும் தீப ஜ்வாலை காட்டுகிறது. அவன் திருவடி பற்றியவர்களுக்கு சஞ்சலம் இல்லை என்பதை,  திருவடிக்கு நேராக இருக்கும் அசையாத தீபம் காட்டுகின்றது.

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

வாடபல்லிக்கும் வேதாத்ரிக்கும் இடையிலே இருக்கும் ஸ்வயம்பு ரூபமான மட்டபல்லி நாதனோ சஞ்சலத்தையும் போக்குவான்; ரோகத்தையும் போக்குவான். நம்மிடத்திலே இருக்கிற அத்தனை கெடுதல்களை யும் போக்கி நலத்தையே கொடுக்கும் எம்பெருமான் இந்த க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கிறான். ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழ் கடலையும் மையாக்கி, ஆயிரம் தலைகள் படைத்த ஆதிசேஷனே... இல்லையில்லை ஆயிரம் தலைகள் படைத்த அந்த பரந்தாமனேகூட, இந்த மட்டபல்லியின் மகிமைகளை, அங்கு உறையும் இறைவனின் சிறப்புகளை விவரிக்க முடியாது!

ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் கோதாடா. இங்கிருந்து 'கோ தாதா, கோ தாதா..’ (யார் எல்லாவற்றையும் கொடுப்பவன்) என்று நினைத்துக்கொண்டே 40 கி. மீ. கடந்து, மந்திகள் பாய்ந்திடும் ப்ருஹ்மாநந்த விமானத்தைக் கடந்து வந்தால், 'அய மேவ தாதா’ (நானே அனைத்தையும் கொடுப்பவன்) என்று நம்மை இன்முகத்துடன் வரவேற்கிறான் ஸ்ரீமட்டபல்லிநாதன்.

உயர்ந்த ப்ரஹ்ம வித்யைகளில் உறைபவன் இவனே. அதனால்தான் மிகவும் ஏகாந்தமான இந்த இடத்திலே குகைக்குள் ரஹஸ்யமாய் வீற்றிருக்கிறான். ப்ரஹ்ம வித்யைகளால் அறியப்படுபவனே நமக்கு சுலபமாய் இங்கே கிடைக்கும்போது, அவனை அறிவிக்கும் ப்ரஹ்ம வித்யைகள் நமக்குத் தேவையே இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுப் பெற வேண்டியவனை ஸ்ரீமட்டபல்லி மகா குகையில் சுலபமாக நாம் அனுபவிக்கின்றோம். இதுவும் அவனது இன்னருளே. அவன் நினைக்கவில்லை என்றால் நம்மால் அவனைக் காண இயலுமா? அவனே அவனைக் காட்டித் தருகின்றான்!

சதுர் யுகங்களாக இருந்து வரும் இந்தத் திருத்தலத்துக்கு க்ருத யுகத்தில் - மதுபுரி; திரேதாயுகத்தில்- ரத்ன புரி; துவாபர யுகத்தில்- ஆனந்தபுரி என்று பெயர். இந்தக் கலியுகத்தில் மாந்ருஹரிபுரம் என்று பெயர். ஆனால் இங்குள்ள மக்கள் சுந்தரத் தெலுங்கில் இதை மட்டபல்லி என்கின்றனர். காடு, நதி, மலை இவை மூன்றும் ஒருங்கிணைந்து காணப்படும் அரிதான க்ஷேத்ரங்களில் மட்டபல்லியும் ஒன்று. ஸ்ரீமட்ட பல்லிநாதனின் கருணாம்ருத தாரைதான் கிருஷ்ணா நதி. அம்ருதவர் ஷிணியாம் இந்த நதியின் பெருமையை அளவிட முடியாது. மட்டபல்லி பர்வத குகையில் எம்பெருமான் இருந்தாலும், அவனுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த நதிக் கரைதான். தினமும் தாயாருடன் திருக்கரம் பற்றி இந்தக் கரை யில் சஞ்சரிப்பான். சிலநேரம் கிருஷ்ணவேணியும் (நதி) ஆர்ப்பரித்து, மட்டபல்லி நாதனின் குகைக்குள் பிரவேசித்து, அவனுடைய ஸ்பரிச தீ¬க்ஷயைப் பெற்று மகிழ்வாள்.

நதியை ஒட்டி இருக்கும் வனத்தில் எம்பெருமான் நரசிம் மன், பரத்வாஜ மஹரிஷிக்குப் பிரத்யக்ஷமாகக் காட்சி அளித்தான்.

வாதூல மஹரிஷி, ஜமதக்னி, விச்வாமித்ரர், மார்க்கண்டேயர், ஹாரிதர், பராசரர், வாமதேவர், புலஸ்த்யர், குத்ஸர், ஆங்கிரஸர்... முதலான எண்ணிலா அருந்தவ முனிவர்கள் பலரும் மகிழ்ந்து உறைந்தது, இந்த மட்டபல்லி மகா க்ஷேத்திரத்தில்தான்.

மட்டபல்லியில் மதுரானந்த ரூபி!

மட்டபல்லியில் எங்கு பார்த்தாலும் அதர்வண வேதம் எதிரொலிக்கிறது. ஓம்காரத்தினுள் முதலாவதாக வரும் அகார ரூபமாய் விளங்குகிறவன், சாட்சாத் மட்டபல்லி லக்ஷ்மிநரசிம்மன்.

ஸ்ரீமட்டபல்லிநாதன் தனது திருமேனியிலேயே இடது பக்கத் தில் ஸ்ரீபிரகலாதாழ்வானைத் தாங்கி நிற்கிறான். தன்னிடம் நிஜமான பக்தி கொண்டவர்களை ஒருநாளும் கைவிடமாட்டேன் என்கிற அவனது ப்ரதிஜ்ஞைக்கு இது எடுத்துக்காட்டு. இந்த அழகான காட்சியை வேறெங்கு காணமுடியும்? விசாலமான நெற்றி யும், தீர்க்கமான புருவங்களும், மிக விசாலமான...எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் ஆட்கொள்ளும் திருநேத்ரங்களும், நீண்ட மூக்கும், மதுராதர பல்லவமும் (வாய்), கம்புக்ரீவமும் (மீசை), விசால வக்ஷஸ்தலமும், இடது திருக்கரத்தில் ஓங்கார ரூபியான சங்கும், வலது திருக் கரத்தில் மிளிரும் சுதர்சனனும், வக்ஷஸ்தலத்தில் விளங்கும் ஸ்ரீமஹா லட்சுமியுமாக... இரண்டு திருவடிகளையும் மடித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அதியற்புதமான ரூபம் ஆனதால் அவன் மதுரானந்தரூபி!

இந்த திவ்ய ரூபத்தை தினமும் அதிகாலை நடக்கும் திருமஞ்சனத்தின்போது சேவிக்கலாம். இவன் அமர்ந்த இருக்கைக்குப் பின்புறம் இருந்து ஸ்ரீஆதிசேஷன் தன் ஆயிரம் படங்களையும் விரித்து இறைவனுக்கு மேல் விதானமாய் இருக்கிறான். இந்த ஸ்ரீமட்டபல்லி மஹா க்ஷேத்திரத்தில் வேத ஸ்வரூபனாகவும், வேள்வி ஸ்வரூபனாகவும் விளங்கும் எம்பெருமானை உள்ளூர நினைந்திருப்பவர்கள் அனைவரும் அவனது பரிபூர்ண க்ருபா கடாட்சத்தினால் கோரிய பலன்கள் அனைத்தையும் பெற்று இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

சதுர் யுகங்களாக பல கோடி வேள்விகளை அனுபவித்த மட்டபல்லிநாதன், மோக்ஷத்தையே கொடுக்கக்கூடிய ராஜ்யலக்ஷ்மீ வல்லபன் ஆவான். நாம் சாமான்ய பலன்களைப் பிரார்த் தனை செய்து, மஞ்சள் படுத்திய துணியில் 32 நாணயங்களை முடிந்து பூஜை அறையில் வைத்து, இயன்றபோது அதை மட்டபல்லியில் சேர்த்தால், எல்லா இடையூறுகளும் அகலும்.

ஸ்ரீவைகுண்டத்தில் கிடைக்கும் அனுபவத்தை இந்த பூவுலகத்திலேயே அனுபவிக்கவும் சுலபமான வழியை ஸ்ரீமட்டபல்லிநாதன் அருளி இருக்கிறான். என்ன தெரியுமா? பதினோரு நாட்கள் முழுவதுமாக ஸ்ரீமட்டபல்லியில் தங்கி, தினமும் மூன்று வேளை கிருஷ்ணவேணீ நதியில் நீராடி, ஈர வஸ்திரத்துடன் 32 முறை ஆலயத்தை பிரதக்ஷிணம் செய்து, அவனுடை கல்யாண குணங்களை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் ஸ்ரீமட்டபல்லிநாதனின் அனுக்ரஹத்தினால் தூசாகும் என்பது திண்ணம்.

முக்கூர் ஸ்வாமிகள் போற்றும் மட்டபல்லி திருத்தலத்தில் மேலும் ஓர் அற்புத வைபவம் நடந்தேறவுள்ளது. நிகழும் நந்தன வருடம் ஆவணி 13-ஆம் நாள் (29.8.12) ஸ்ரீலஷ்மி நரசிம்மரின் திருவடிவாரத்தில்... ஸ்ரீயக்ஞவாடிகா சந்நிதி நூதன மண்டபம் கிரஹப்பிரவேசம் மற்றும் ஸ்ரீமட்டபல்லி நாதனின் நித்ய திருமஞ்சனத்துக்காகவும் கோ சம்ரக்ஷணத்துக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட கோசாலை திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது. பக்தர்கள்  கலந்துகொண்டு அருள்பெற்று வரலாம்.

தொகுப்பு: டாக்டர் ஆர்.ஸ்ரீநிவாஸன்
படங்கள்: எம்.எல்.ஸ்ரீநிவாஸன், எம்.என்.ஸ்ரீநிவாஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism