

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். இந்த ஊரில், பிரதான சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மனித வாழ்வில் எல்லாப் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் காரணம்... மனம்தான்! மனக் குழப்பத்தில், மனோபயத்தில் சித்தம் கலங்கி மன நோயாளிகளாக மாறி அவஸ்தைப்படுபவர்களும் உண்டு. அவர்களின் மன நோயைத் தீர்த்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது!
காவிரியின் வடகரையில் உள்ள அற்புதமான திருத்தலங்களில் குணசீலமும் ஒன்று. புராண காலத்தில் தேவர்களும் முனிவர்களும் செய்த கடும் தவத்தின் பலனாக, திருமால் விக்கிரக ஸ்வரூபமாக எழுந்தருளினார். பூலோகத்தில் உள்ள மனிதர்களுக்கும் அருள் வழங்கும்பொருட்டு, இங்கே காவிரிக்கரையில் உள்ள திருவிடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்கிறது ஸ்தல புராணம்.
##~## |
'திருவேங்கடநாதா... காவிரி பாயும் இந்த பூமியில் உன் திருவடி படவேண்டும். என் விருப்பத்தை நிறைவேற்றவும், காவிரி பாய்ந்தோடும் இந்த ஊர் மக்களுக்கு உன் பேரருள் கிடைத்திடவும் உன் தரிசனம் வேண்டும்’ என வேண்டியபடி, கடும் தவத்தில் மூழ்கினார்.
நீண்ட தவத்தில் மகிழ்ந்த திருமால், குணசீல மகரிஷிக்காக காவிரிக்கரையின் வடபகுதியில் தாயார் சகிதமாகக் காட்சி தந்தருளினார். மகரிஷியின் விருப்பப்படி, கலியுகம் நிறைவுறும் வரை அந்த இடத்திலேயே தங்கி, அனைவருக்கும் சேவை சாதிக்கவும் திருவுளம் கொண்டார்.

குணசீல மகரிஷி ஆஸ்ரமம் அமைத்து தவமிருந்து திருமாலை வழிபட்ட பகுதி, பின்னாளில் 'குணசீலம்’ என்றே அழைக்கப் பட்டது. மக்களின் குணங்களை ஒழுங்கு படுத்தி, நேர்ப்படுத்தி, அவர்களின் மனோ வியாதியைக் குணமாக்கும் மருத்துவராக இங்கே அருள்பாலிக்கிற திருமாலுக்கு, பின்னாளில் அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தத் தலத்தில் திருமாலின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி.
ஞானவர்மன் எனும் அரசன், இந்தக் கோயிலை நிர்மாணித் ததுடன், ஏராளமான திருப்பணிகளையும் செய்திருக்கிறான். நிவந்தங்கள் அளித்து, நிலங்களையும் வழங்கியிருக்கிறான்.
குணசீல மகரிஷி ஆராதித்த வைகானஸ முறைப்படி கோயில் பூஜைகள் இன்றளவும் செய்யப்படுகின்றன. மகரிஷிக்கு தரிசனம் தந்த திருமால், 'இந்தத் தலத்துக்கு விரதமிருந்து வந்து, நல்ல கன்னிகையை மனையாளாக விரும்புபவருக்கு அவ்விதமே நல்ல மனைவி கிடைப்பாள்; அன்பான கணவன் வேண்டும் எனக் கேட்போருக்கு அவ்விதமே கணவன் அமைவான். சந்துஷ்டியான, சத்தான சந்ததியை நாடுவோருக்கு, அப்படியே சந்தானபாக்கியம் கிடைக்கும். தனத்தைக் கேட்போருக்கு தனமும், தானிய பலம் கேட்போருக்கு தானியமும், மனோபலம் இழந்தவர்க்கு மனோபலமும் கூடும்!’ என அருளினார். அதன்படியே, மனநலம் தரும் திருத்தலமாகத் திகழ்கிறது குணசீலம். திருப்பதிக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது இந்தத் தலம்.

ஞானவர்ம மன்னன் காலத்தில், சீரததேவன் என்பவருக்குக் கண்பார்வை கிடைக்கச் செய்து அருளினார் என்றும், பகுவிராஜனின் முடத்தன்மை நீங்கி, அவரைக் குணமாக்கினார் என்றும், தேவதாசன் எனும் வாய் பேச முடியாத சிறுவனுக்குப் பேசும் சக்தியைத் தந்தார் என்றும், பிருதுகீர்த்தி- காந்திமதி தம்பதிக்கு புத்திர பாக்கியத்தைத் தந்தருளினார் என்றும் இந்தப் பெருமாளின் மகிமைகளைத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.
இந்தத் தலத்தில் தனிச்சந்நிதியில் அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. இங்கு தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை. மாறாக,
திருமார்பில் தாயாரைத் தாங்கியபடி, கடிஹஸ்தத் துடன் வலக்கையில் செங்கோலும் கொண்டு சேவை சாதிக்கிற பெருமாள், கொள்ளை அழகு! உத்ஸவர் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக ஸ்ரீநிவாச பெருமாள் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். கருடாழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

''மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கே இந்தத் தலத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கி, தினமும் காவிரியில் நீராடி, பெருமாளுக்கு நடைபெறும் பூஜையின்போது தரப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் மனநோயில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்! கோயிலுக்குப் பின்னால், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கான இடமும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் கோயிலின் பிச்சுமணி பட்டாச்சார்யர்.
உச்சிக்கால வேளையில் நடைபெறும் பூஜையிலும், இரவில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையிலும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக்கொண்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை!
''என் மகன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கான். அவனை இங்கே சேர்த்துட்டு, அவனுக்குத் துணையா நானும் இங்கேயே இருக்கேன். மெள்ள மெள்ள அவன் மனநிலையில மாற்றங்கள் தெரியுது'' என்று, வெள்ளாங்கோவிலில் இருந்து வந்திருந்த வாசகி ஈஸ்வரி, உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார் அதேபோல், காங்கேயத்தில் இருந்து தன் மகன் ராஜாவுக்காக சாந்தியும், திருச்சியில் இருந்து கோவிந்தம்மாளும் வந்து, ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றுக்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்கே முடிகாணிக்கை செலுத்தி, பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சந்தனக்காப்பு, புஷ்பங்கி, கருடசேவை எனத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு நடைபெறுவது போன்றே இங்கேயும் உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனைகளைச் செய்ய இயலாதோர் அந்தப் பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்தி நிறைவு செய்யலாம் என்பது ஐதீகம். புரட்டாசி மாதம் பிரம்மோத்ஸவமும் தேர்த்திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும்!
- ச.மஞ்சுளா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்