Published:Updated:

பாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!

பாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!

Published:Updated:
பாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துரையில் ஸ்ரீமீனாட்சி அம்பிகை குடிகொண்டிருக்கும் கோயிலுக்குத் தெற்குப் பகுதியில் உள்ளது அவனியாபுரம். இங்கே, ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் சிவபெருமான்.

திருமண வரம் தந்தருளும் மகத்தான திருத்தலம் இது!

ஸ்ரீமீனாட்சியம்மை திருமணம் முடிந்து சிவனாரைக் கரம் பிடித்த பெருமிதத்துடன் திருக்கயிலாயத்துக்குச் செல்லும்போது அவளின் தோழிகள், 'எங்களுக்காக ஒருமுறை திருமணக் கோலத்தில் காட்சி தாயேன், மீனா!’ என்று கேட்டுக்கொண்டனராம். அவர்களின் விருப்பத்தை அம்மை ஈசனிடம் தெரிவிக்க... அவரும் சம்மதித்தார். பிறகென்ன... ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசுந்தரேஸ்வரரும் திருமணக் கோலத்தில் காட்சி தந்தருளினர்.

எனவே, அந்தத் திருத்தலத்தில் கோயில் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஏராளமான மன்னர்களும் பின்னாளில் திருப்பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த அவனியாபுரத்துக்கு ஆதியில் பிள்ளையார் பாளையம் என்றொரு பெயர் இருந்ததாம். பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் தீர்த்து வைக்க திருஞானசம்பந்தர் வந்தபோது, பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசி இங்கே வந்து வரவேற்றாராம். பிள்ளைத் தமிழ் பாடி வெப்பு நோயைத் தீர்த்து வைத்த தலம் என்பதால், இந்த ஊருக்குப் பிள்ளையார்பாளையம் எனப் பின்னாளில் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், அவனியாபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில். மதுரையில் உள்ள பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று!

பாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்!

கிழக்குப் பார்த்த ஆலயம். மிக விஸ்தாரமான பிராகாரங்களைக் கொண்ட அற்புதமான கோயில். மூலவரின் திருநாமம்- ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீபாலமீனாம்பிகை. ஸ்ரீசந்தான விநாயகர், ஸ்ரீபாலசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கேஸ்வரர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு வந்து, ஸ்ரீபாலமீனாம்பிகையையும் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரையும் வணங்கித் தொழுதால் கல்யாணத் தடை விரைவில் அகலும்; மனத்துக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்!  

திங்கள்கிழமைகளில் இங்கு வந்து, சிவனாருக்கு வில்வத்தால் அர்ச்சனையும், ஸ்ரீபாலமீனாம்பிகைக்கு செவ்வரளியால் அர்ச்சனையும் செய்து வழிபட்டால்... திருமணத்தில் இருந்த சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும்; தோஷங்கள் அனைத்தும் விலகி, மாங்கல்ய பாக்கியம் கிடைக்கப்பெறுவர். திருமணத் தடையால் கலங்குவோர், திருமணமாகி கருத்துவேற்றுமைகளால் சண்டை- பூசல் எனக் கண்ணீர் விடுவோர் இங்கு வந்து, ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரருக்கு பாலபிஷேகமும் வில்வார்ச்சனையும் செய்து, மூலவரை 11 முறை பிராகார வலம் வந்தால், விரைவில் கருத்துவேற்றுமைகள் நீங்கி, தம்பதிக்குள் அந்நியோன்னியம் ஏற்படும்; குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு நிலை மாறி, சந்தோஷம் பூத்துக் குலுங்கும் எனத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

ஸ்ரீபாலமீனாம்பிகை மட்டும் என்னவாம்..? குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து கோயிலில் வளைகாப்பு நடத்துவதாக வேண்டிச் சென்றால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்குமாம்.

கல்யாணம், குழந்தை என்று இருந்துவிட்டால் போதுமா? வாழ்க்கைக்குப் பொருளாதாரம் மிக அவசியம் அல்லவா? இந்தத் தலத்தில் ஸ்ரீபாலமீனாம்பிகை சந்நிதிக்கு எதிரில் காம தேனுவின் விக்கிரகத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காண்பதற்கு அரிதான காமதேனு சந்நிதி இது! வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீபாலமீனாம்பிகை சமேத ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டு, காமதேனுவையும் வணங்கி அர்ச்சித்து வழிபட்டால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்; தனம்- தானியங்கள் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கேயுள்ள ஸ்ரீசந்தானவிநாயகரை பிள்ளை பாக்கியம் தந்தருளும் பிள்ளையார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். பங்குனி மாதம் வளர்பிறை சப்தமி திதியில் சந்தான சப்தமி விரதத்தை, சித்தர் பெருமக்கள் அருவமாக வந்து நடத்துவதாக ஐதீகம். எனவே, பங்குனி வளர்பிறை சப்தமி மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில், தலைவாழையில் ஏழு தீபங்களும், நடுவில் நெய் ஊற்றி மாவிளக்கும் ஏற்றி வைத்து, ஏழு இனிப்புகளைப் படைத்து, ஏழு வகைப் பூக்களை விநாயகருக்குச் சார்த்தி வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர்; குழந்தைகள் கல்வி கேள்வியில் சிறந்துவிளங்குவர்; படிப்புக்கேற்ற உத்தியோகம் கிடைக்கும் எனத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபாலசுப்ரமணியரும் இங்கு விசேஷ அமைப்பில் காட்சி தருகிறார். செவ்வாய்க்கிழமைகளில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து தரிசித்தால், ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்; தொழிலில் விருத்தி ஏற்படும் எனச் சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

தவிர, வாஸ்து நாளில் பரிகாரங்களும் இங்கே நடத்தப்படுகின்றன. வியாபாரத்தில் வெற்றி பெறவும், எதிரிகள் தொல்லை ஒழியவும் வரமருளும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார்.

தேய்பிறை அஷ்டமி நாளில் இவருக்குச் சிறப்பு பரிகார வழிபாடு நடைபெறுகிறது. அப்போது, மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

    - ச.பா.முத்துகுமார்
படங்கள்: எஸ்.கேசவசுதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism