Published:Updated:

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

Published:Updated:
புனித பூமியில் மனித தெய்வங்கள்!

மனிதரைத் தெய்வமாகக் கண்ட மகான்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பவதி பிக்ஷாம் தேஹி!’ -  வறுமை தாண்டவமாடிய அந்தச் சிறிய வீட்டின் வாசலில், இப்படியரு குரல் கேட்டது, அதிகாலை வேளையில்! வீட்டினுள்ளிருந்து வெளிவந்த பெண்மணி, வாசலில் நின்றிருந்த அந்தணச் சிறுவனைக் கண்டு திகைத்தாள். பால் மணம் மாறாத முகம்; நெற்றியில் திருநீறு; மேனியின் குறுக்கே முப்புரி நூல்; கையில் உணவை ஏற்பதற்காக ஏந்தியிருந்த திருவோடு!

சிறுவனின் நிலை கண்டு உருகியவள், உள்ளே ஓடினாள். வறுமையான நிலையில், அவர்கள் சாப்பிடுவதற்கே ஏதுமில்லாத அவலம்; பாலகனுக்கு என்ன கொடுப்பது?! அவளின் கையில் தென்பட்டது, நெல்லிக்கனி ஒன்று. தயக்கமும் இயலாமையுமாக வாசலுக்கு வந்து, அதை அவனிடம் தந்தாள். அந்தக் கனியை ஏற்ற சிறுவனின் மனதுள் நன்றியும் கருணையும் பொங்கின. அந்தப் பெண்மணியின் தரித்திரம் தீரவேண்டும் என, திருமாலின் திருமார்பில் உறையும் திருமகளைப் பிரார்த்தித்தான். அவனிடமிருந்து 21 அற்புதமான கவிதைகள் பிரவாகித்தன. இதில், தேவியானவள் மனமிரங்கினாள்; அந்த ஏழையின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளை கனக தாரையெனப் பொழிந்தாள். நெல்லிக்கனி தந்த பெண்மணியின் வாழ்வில் வறுமையை நிரந்தரமாகப் போக்கியருளிய அவர்... ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர்.

##~##
கேரளாவில், காலடி எனும் தலத்தில், கி.பி.788-ஆம் வருடம், அந்தணர் குலத்தில் சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீஆதிசங்கரர். சிறு வயதிலேயே கூர்ந்த மதியும், அசாத்திய நினைவுத் திறனும் கொண்டு திகழ்ந்து, எட்டாவது வயதில் வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்தார்.  

இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த ஆதிசங்க ரர், தாயார் ஆர்யாம்பாளின் அரவணைப்பில் வளர்ந்தார். இறையுணர்வில் நிறைந்து ததும்பிய அவரது மனம், துறவறத்தை நாடியது. ஆனால், அம்மாவிடம் எப்படிச் சொல்வது எனத் தயங்கினார். ஆனால், விந்தையான வழி ஒன்றைக் காட்டியருளினான், இறைவன். ஒருநாள், அருகில் உள்ள பூரணா நதியில் நீராடிய பாலகனது காலை, முதலை ஒன்று கவ்வியது. இதைக் கண்டு ஆர்யாம்பாள் கதறினாள்; ஆனால் முதலையின் பிடியிலிருந்த மகனைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது சங்கரர், ''என்னைத் துறவறம் மேற்கொள்ள அனுமதித்தால், முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்றலாம்!'' என்றார். மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று தாயுள்ளம் சம்மதித்தது.

அவ்வளவுதான்... சந்நியாச தர்மத்தை மேற்கொள்ளும் மந்திரங்களை சங்கரர் உச்சரிக்க, அவரை விடுத்து முதலை விலகிச் சென்றது. பிறகென்ன?! அனைத்தையும் துறந்து, குருவைத் தேடிப் புறப்பட்டார் சங்கரர். வடக்கு நோக்கிப் பயணித்தவர், நர்மதை நதிக்கரையில், கோவிந்த பகவத்பாதர் எனும் ஞானியைத் தரிசித்தார். சங்கரரை, சந்தோஷம் பொங்கச் சீடனாக ஏற்றுக் கொண்டார், கோவிந்த பகவத்பாதர். அவரிடம் ஹடயோகம், ராஜயோகம் மற்றும் ஞான யோகம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார், சங்கரர்.

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

பரம்பொருளான பிரம்மத்தை அறியும் உபதேசத்தையும் பெற்றார். அத்துடன், பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும்படி பணித்தார், குருநாதர். அதனைச் சிரமேற் கொண்டு செயல் படுத்த, காசியம்பதிக்குச் சென்றார் சங்கரர். அவரிடம், சனந்தனர் முதலானோர் சீடர்களானார்கள்.

ஒருநாள், சங்கரரும் அவரின் சீடர்களும் கங்கையில் நீராடிவிட்டு, ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றனர். வழியில், நான்கு நாய்களுடன் எதிர்த்திசையிலிருந்து வந்தான் ஒருவன். 'இதென்ன... குளித்துவிட்டுப் புனிதத்துடன் ஆலயத்துக்குச் செல்லும்போது, தாழ்ந்த குலத்தவன் வருகிறானே... நம் மீது பட்டுவிடுவானோ?!’ என எண்ணிய சீடர்கள், 'விலகிப் போ’ என்று அவனைப் பார்த்துக் கத்தினார்கள். இதைக் கேட்டதும் அவன், ''சரி, விலகிப் போகிறேன். ஆனால், நீங்கள் விலகச் சொன்னது, ரத்தத்தாலும் சதையாலும் ஆன இந்த உடலையா? அல்லது, என்னுள் வியாபித்திருக்கும் ஆத்மாவையா? சரியாகச் சொல்லுங்கள்!''என்றான் அமைதியாக.

அதைக் கேட்டுச் சிலிர்த்தார் சங்கரர். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக உருமாற்றி, தாழ்ந்த குலத்தவன்போல் சிவனாரே வந்திருக்கிறார் என உணர்ந்த சங்கரர், அவரை வணங்கினார். 'மணிஷ பஞ்சகம்’ எனும் ஐந்து ஸ்லோகங்களால் ஸ்வாமியை அர்ச்சித்து வழிபட்டார். அவரிடம் இருந்த பேத பாவங்கள் அனைத்தும் விலகின.

வேதங்களின் ஞானம் மற்றும் பிரம்ம சூத்திரங்களின் போதனைகள் ஆகியவற்றை மக்களிடையே பரப்பி, அவர்களை நல்வழிபடுத்தி, முக்தி அடையவும் வழிகாட்டிய அவதார புருஷராக, ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதராக  அன்று உதயமானார்!

'இவ்வுலகில் உள்ள பிறவி ஓவ்வொரு ஜீவனிலும் இறைவன்  நிறைந்திருக்கிறான். பல வடிவங்களில், விதவிதமான பெயர்களில், உலகில் உறை யும் உயிர்கள் அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே! சம்சார சாகரத்தில் உழலும் ஜீவாத்மாக்களும், அவற்றை இயக்கும் பரமாத்மாவும் இரண்டு மாறுபட்ட பொருட்கள் அல்ல. இரண்டும் ஒன்றே'' என்கிற 'இரண்டற்ற நிலை’ எனும் அத்வைத சித்தாந்தத்தை நிறுவினார் ஆதிசங்கரர். அத்துடன், தனது சித்தாந்தத்தை அன்பர்களிடம் எடுத்துரைத்து, அவர்களிடம் உள்ள ஏற்றத் தாழ்வு எண்ணத்தைப் போக்கி,   நாடெங்கும் பயணித்தார்.

புனித பூமியில் மனித தெய்வங்கள்!

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் எனப் பல ஊர்களுக்கு விஜயம் செய்தார். அறிஞர்கள், புத்த- ஜைன மதத்தவர்கள் எனப் பலரையும் வாதத்தில் வென்று, அவர்களைத் தனது சீடர்கள் ஆக்கி, அத்வைத சித்தாந்தத்தை பரத கண்டம் முழுவதும் நிலைநிறுத்தினார்.

பெரும் ஞானிகளாக விளங்கிய தமது சீடர்களைத் தலைவர்களாகக் கொண்டு, தென்னகத்தில் சிருங்கேரி -சாரதா பீடம்; மேற்கே துவாரகை - துவாரகா பீடம், வடக்கே 'ஜ்யோதிர்மட்’ - ஜ்யோ திர்மட பீடம், கிழக்கே பூரி - கோவர்த்தன பீடம் ஆகியவற்றை நிறுவினார். பிறகு, தாயாரின் அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்து, ஓடோடி வந்து அவளுக்குப் பணிவிடைகள் செய்தார். அவள் காலமானதும், தமது சந்நியாச தர்மத்தையும் மீறி, அந்திமக் கிரியைகள் செய்து, தன் அன்னையை முக்தி பெறச் செய்தார். பிறகு, தமிழ்நாடு, ஆந்திரம், சௌராஷ்டிரம், உஜ்ஜயினி வழியாக வட இந்தியாவுக்கும், காஷ்மீரம், காம்போஜம், நேபாளம் எனச் சென்று அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டி, நல் உபதேசங்களை எடுத்துரைத்து, மக்களை நல்வழிப்படுத்தினார்.

உபநிஷதங்கள், பகவத்கீதை மற்றும் பிரம்ம சூத்திரங்கள் ஆகியவற்றுக்கு உரைகள் எழுதினார். சாதாரண மக்களும் உணரும் வகையில், 'பஜகோவிந்தம்' எனும் அற்புதப் பதிகத்தைப் பாடியருளினார். தவிர, எண்ணற்ற சமய நூல்களையும் பக்தர்களுக்குத் தந்தருளினார். அடுத்து, இமயமலைத் தொடரில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதாரிநாத் தலங்களுக்கு விஜயம் செய்த ஆதிசங்கரர், கி.பி. 820-ஆம் வருடம் கேதாரிநாத்தில் தனது பூத உடலைத் துறந்தார்; பரம்பொருளுடன் இரண்டறக் கலந்தார்.

32 வருடங்களே வாழ்ந்து,  இறைத்தொண்டுகள் பல புரிந்து, தர்மத்தை நிலைநாட்டி,  உபதேசங்களை அருளி, நல்வழிகாட்டிய ஆதிசங்கரர், இன்றைக்கும் சூட்சுமரூபமாக இருந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்! 

(தரிசிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism