மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

ணவு விஷயத்தில் நம்மில் எவ்வளவு பேர் கவனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உணவை எப்படிச் சாப்பிடவேண்டும், எந்த மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சில வரைமுறைகளும் வரையறைகளும் இருக்கின்றன என்பது சிலருக்குத் தெரியக்கூட இல்லை.

'அட... பசிக்காகவும் ருசிக்காகவும் சாப்பிடுகிறோம். அதிலேயே இத்தனை கணக்கு வழக்குகள் இருக்குதா?’ என்று பலர் ஆச்சரியப்படவும் கூடும்.

உண்மைதான். நம் வயிற்றில் பாதி அளவு மட்டுமே  சாப்பிட வேண்டும். மீதி கால்பாகம் தண்ணீர் குடித்து நிரப்ப வேண்டும். அடுத்த மீதியில், வாயு நிரம்பியிருக்கவேண்டும். அதாவது, சும்மா விட்டுவிடவேண்டும். அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டு, மீதி வயிற்றுக்குத் தண்ணீரையும் வாயுவையும் நிரப்பிக்கொள்கிறவர்கள் புத்திசாலிகள் மட்டுமில்லை; ஆரோக்கியமானவர்கள்கூட!

##~##
ஆனால், உணவு வரையறைகள் என்பதெல்லாம் ஸ்ரீகண்ணபிரானுக்கு இல்லை. அவன் இஷ்டத்துக்குச் சாப்பிடுவான்; எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவான். சர்க்கரை நோய் உள்ளவர்கள், மூன்று வேளை உணவைப் பிரித்து ஆறு வேளையாக மாற்றிச் சாப்பிடுவார்கள் இல்லையா! அதுபோல் ஆறேழு வேளைகளில், ஆனால் உணவின் அளவைக் குறைக்காமல் சாப்பிடுபவன் ஸ்ரீகிருஷ்ணன். சர்க்கரையைப் போல் இனிப்பானவன் அல்லவா... அப்படித்தான் சாப்பிடுவான்!

நூற்றுக்கணக்கான குழந்தைகளை அழைத்துக்கொண்டு, நூற்றுக்கணக்கான பசுக்களை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு வந்தான் அல்லவா கண்ணபிரான்... அப்போது அகாசுரன் என்பவன் வாய் பிளந்து படுத்துக்கொண்டிருக்க, அவனை அழித்தொழித்தான்!

அதைக் கண்டு குழந்தைகள் ஆனந்தப்பட்டனர். துள்ளிக் குதித்தனர். 'அகாசுரன் என்பவனை இன்று நம் கண்ணன் கொன்று போட்டான்’ என்று குதூகலத்துடன் தெரிவித்தனர். ஆனால், இங்கே ஒரு விஷயம்... இந்தத் தகவலை அவர்கள் ஒரு வருடம் கழித்துதான் சொன்னார்கள்.

சரி... ஒரு வருடம் கழித்துச் சொல்லட்டும்; ஆனால், 'போன வருஷம் அகாசுரனைக் கொன்றான் கண்ணன்’ என்றுதானே சொல்லவேண்டும்? 'இன்று அகாசுரனைக் கொன்றான் கண்ணன்’ என்று ஏன் சொன்னார்கள்?

அதற்குக் காரணம் இருக்கிறது. 'இந்த இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணனுக்குதான் எத்தனை செல்வாக்கு! எவ்வளவு மரியாதை!’ என்று பொறாமைப்பட்ட ஸ்ரீபிரம்மா, நேராக பூலோகம் வந்தார். கண்ணபிரான் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்தார்.

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

அங்கே... கடும் பசியில் இருந்த கண்ணன், பாலும் தயிருமாக ஊற்றிக் குழைத்துப் பிசைந்த தயிர்சாதத்தை பரமானந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதுவும் எப்படி? அங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தைக் கடந்து, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, இங்கே குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கண்ண பரமாத்மா. இவனிடம் இருந்து குழந்தைகள் ஒரு வாய் வாங்கிக்கொள்ள... பிறகு குழந்தைகள் இவனுக்கு ஊட்டிவிட... கொண்டாட்டத்துக்கும் பாசத்துக்கும் குறைவே இல்லாமல் பசியாறல் நடந்துகொண்டிருந்தது அங்கே!

நாமெல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நடுவில் எழுந்திருப்பது தவறு என்று திட்டுவார்கள் பெரியோர். நிறைவாகச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் எழுந்து கையலம்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? அதைப் பிறகு பார்ப்போம்.

அதற்கு முன்னதாக... இவற்றையெல்லாம் கவனித்து வந்த ஸ்ரீபிரம்மா, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்துக்கு விறுவிறுவெனச் சென்றார். சட்டென்று மாடுகள் அனைத்தும் மறைந்தன. 'பசுக்களின் சத்தத்தையே காணோமே...’ என யோசித்த ஸ்ரீகிருஷ்ணர், 'நீங்கள் எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று குழந்தைகளிடம் சொல்லிவிட்டு, பசுக்களைத் தேடிச் சென்றார்.

அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அல்லவா பகவான்? அந்தச் சாப்பாட்டை அவர் என்ன செய்தார்? எவருக்குக் கொடுத்தார்?

யாருக்கும் தரவில்லை. அப்படியே சாப்பிட்டுக்கொண்டே பசுக்களைப் பார்ப்பதற்காக எழுந்து போனாராம் பகவான். இப்படி அவர் செய்த குறும்புகள் ஒன்றா... இரண்டா?

மேய்ந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்து பார்த்தால், அங்கே ஒரு பசுவைக்கூடக் காணோம். குழப்பத்துடன் திரும்பி வந்தால்... அங்கே நின்றிருந்த குழந்தைகளையும் காணவில்லை. 'ஓஹோ... இது பிரம்மாவின் காரியம்’ என அறிந்தவர், சட்டென்று பிரம்மாவின் உருவத்துக்கு மாறினார். சத்தியலோகம் வந்தடைந்தார். அனைவரும் வரவேற்க, ஸ்ரீபிரம்மதேவனின் அரியணையில் கம்பீரமாக அமர்ந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

சிறிது நேரத்தில், குழந்தைகளுடனும் பசுக்களுடனும் சத்தியலோகத்தின் வாசலுக்கு ஸ்ரீபிரம்மா வந்தார். 'உள்ளே பிரம்மா இருக்கிறார். நீ அவரைப் போலவே வேடமிட்டு வந்திருக்கிறாயா? உள்ளே நுழையமுடியாது!’ எனத் தடுத்து நிறுத்தினார்கள் சேவகர்கள்.

இதற்கிடையில், குழந்தைகளைக் காணோமே என்று அவர்களின் பெற்றோர்களும், பசுக்கள் எங்கே போயின என்று அவற்றின் உரிமையாளர்களும் கவலையும் பதற்றமும் கொள்ள... இங்கே பிரம்மாவாக உருக்கொண்ட அதே நேரத்தில், பூலோகத்தில் குழந்தைகளாக, பசுக்களாக, பசுக்களை விரட்டுகின்ற சாட்டைகளாக, கையில் வைத்திருந்த தயிர்சாதமாக, ஊறுகாயாக... என சகலமாகவும் உருவம் கொண்டார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆக, பூலோகத்தில் எந்தக் குழப்பமும் இல்லை.

இங்கே ஸ்ரீபிரம்மா, தன்னைத் தடுத்த சேவகர்களை மீறிச் செல்ல முற்பட... அங்கே நடந்த தள்ளுமுள்ளுவில்... புறப்பட்ட இடமான பூலோகத்தில், மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்திலேயே வந்து விழுந்தார் அவர். அந்த இடத்தில்தான் ஸ்ரீபிரம்ம சூத்திரம் உருவானதாகச் சொல்வர்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது தெரியும்தானே?! எனவே தான், இந்திராதி தேவர்களிடம் இருந்து வந்த  குழந்தைகள், 'அகாசுரன் என்பவனை இன்று நம் கண்ணன் கொன்று போட்டான்’ என்றார்கள். இப்போது புரிந்ததா?

இத்தனை விசேஷங்களுக்கு உரியவனான, ஸ்ரீபிரம்மாவுக்காகவும் இந்திரர்களுக்காகவும் அத்தனை ஆச்சரியங்களையும் செய்தவனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனை எப்போதும் யாவரும் துதித்து வணங்கலாம். இதனால், இவருக்கு துதிதரஹ எனும் திருநாமம் அமைந்தது.

அதேபோல், சர்வசஸ்திர பிரதாம் வரஹ என்கிற திருநாமமும் ஸ்ரீகிருஷ்ணருக்கு உண்டு. அதாவது, எல்லா சஸ்திரங்களைத் தரிப்பவர்களுக்கு உள்ளேயும் தாமே சிறந்தவன் என்கிறான் கண்ணபிரான். அதுமட்டுமா? 'எந்த சஸ்திரத்தை யார் தரித்தாலும், அவருக்கு உள்ளே ஸ்ரீராமனாக நான் இருக்கிறேன்’ என்கிறான்.

இதில், ஸ்ரீகண்ணபிரானின் பெருந்தன்மை மட்டுமல்ல; ஸ்ரீராமபிரானின் மகோன்னதமும் நமக்கு விளங்குகிறது அல்லவா?

- இன்னும் கேட்போம்...